இந்தியா வாழ்க்கைக்கான பள்ளிக்கூடம்!

நன்றி குங்குமம் தோழி

பிரேசில் நாட்டு புகைப்பட நிபுணர் கேரோலின்போமரேஹன்

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். நாம் வார்த்தைகளால் சொல்ல நினைக்கும் உணர்வுகள், அன்பு, பாசம், காதல், காமம்  அனைத்தையும் ஒரே புகைப்படம் மூலம் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியும். ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல், இயற்கையின் எழில் கொஞ்சும் அழகு, மிருகங்களின் கம்பீரம் என நாம் இரு கண்களால் பார்க்கும் விஷயத்தை கேமராவின் மூன்றாவது கண்ணால் வேறு ஒரு பரிமாற்றத்தை கொடுக்க முடியும்.

கேரோலின் போமரேஹன், பிரேசில் நாட்டை சேர்ந்த புகைப்பட நிபுணர். கர்ப்பம் தரித்த மனைவியின் மேல் அன்பை பொழியும் கணவன்... அந்த அழகிய தருணத்தை கேரோலின் தன் கேமராவில் படம் பிடிப்பதில் நிபுணர். இவரின் புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கர்ப்ப காலத்தை இவ்வாறு படம் பிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்... பிரேசிலில் வசித்து வரும் ேகரோலினை வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டோம்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பிரேசிலின் தெற்கு பகுதியான ரியோ கிராண்ட் தோ சோலில் உள்ள சான்டா க்ரூஸ் என்னுமிடத்தில். எனக்கு சின்ன வயசில் இருந்தே பல இடங்களுக்கு பயணம் செய்ய பிடிக்கும். பலதரப்பட்ட மக்களுடன் பழக பிடிக்கும். இயற்கை நமக்கு பல விஷயங்களை அளித்துள்ளது.

அதனை ஒவ்வொன்றாக பார்த்து ரசிக்க பிடிக்கும். குறிப்பாக கடற்கரையில் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் காட்சி, அவ்வளவு அழகு. சொல்லப்போனால், நம்முடைய கடந்த நினைவுகள் அனைத்தையும் புகைப்படங்கள் தான் நினைவுபடுத்தும். அதை பார்க்கும் போது நம்மை அறியாமல் நம் உதடுகள் விரியும்’’ என்றவர் சான்டா க்ரூஸ் பல்கலைக்கழகத்தில் புகைப்படத் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

‘‘நான் சிறுமியாக இருக்கும் போது பலவிதமான கலைகள் மேல் ஆர்வம் ஏற்பட்டது. படம் வரைவது, வண்ணம் தீட்டுவதுன்னு என்னுடைய கலை ஆர்வம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருந்தது. நான் உயர் கல்வியை முடிக்கும் போது தான் எங்க நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் புகைப்படத் துறையை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது.

அந்த துறையை பற்றி கேள்விப்பட்டதும், அதன் மேல் என்னை அறியாமல் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது முடிவு செய்தேன். இது தான் என் துறை என்று. 2011ம் ஆண்டு நான் விரும்பிய புகைப்படத்துறையை தேர்வு செய்து படிச்சேன். கையில் கேமரா எடுத்துக் கொண்டு கண்களில் தென்படும் காட்சிகளை எல்லாம் நான் படம் பிடிக்க ஆரம்பிச்சேன்.

பார்க்கும் காட்சியை படம் பிடித்தாலும் அதில் உயிரோட்டம் இருக்கணும்ன்னு நினைப்பேன். அதனாலேயே மனிதர்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை அதிகம் என் கேமராவில் பதிவு செய்தேன். படிப்பு முடிச்சாலும் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்ன்னு நினைச்சேன். கடந்த 6 வருடமாக புகைப்படத்துறையில் எனக்கான ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டேன்’’ என்றவரின் முதல் கேமரா நிக்கான் டி 3000 என்றார்.

‘‘பயிற்சி ஒரு பக்கம்... அதே சமயம் புகைப்படம் எடுப்பது மறுபக்கம்ன்னு நான் என் பயணத்தை தொடர  ஆரம்பிச்சேன். நான் படித்த பல்கலைக்கழகம் தான் என் கேமராவில் பதிவான முதல் புகைப்படம். என்னதான் நான் பலதரப்பட்ட புகைப்படம் எடுத்தாலும், எனக்கான ஒரு அடையாளம் வேண்டும்ன்னு நினைச்சேன். அந்த சமயத்தில் தான் ஏன் கருவுற்ற பெண் மற்றும் அவள் கணவன் இருவருக்கும் இடையேயுள்ள பரஸ்பர அன்பினை படம் பிடிக்கக்கூடாதுன்னு தோணுச்சு.

இந்த எண்ணம் ஏற்பட முக்கிய தூண்டுதல்... உண்மை, உணர்வு, நிஜம் மற்றும் இயற்கை. காரணம் நிஜம் என்பது நாம் இப்போது இருக்கும் காலம். மேலும் இந்த காலக்கட்டத்தில் இயற்கை நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளதுன்னு சொல்லலாம்’’ என்ற ேகரோலின் தன் முதல் புகைப்பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘2013ம் ஆண்டு, வீரா க்ருசில்தான் என்னுடைய முதல் புகைப்பட செஷன். என்னதான் நான் புகைப்படத் துறையைப் பற்றி படித்திருந்தாலும், எனக்குள் சின்ன நடுக்கம் மற்றும் பதட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என்றும் இல்லாமல் அன்று பெய்த மழை. இயற்கை என் எதிர்காலத்தை கலைத்துவிடுமோன்னு ஒரு வித பயம் எனக்குள் பற்றிக் கொண்டது.

இருந்தாலும் இயற்கை என்னை ஏமாற்றிவிடாதுன்னு ஒரு நம்பிக்கையும் இருந்தது. மெல்ல மெல்ல மழையும் நின்றதும், நான் கையில் கேமராவை எடுத்துக் கொண்டு தாய்மையை எதிர்நோக்கும் அந்த தம்பதியினரை படம் பிடிக்க ஆரம்பிச்சேன். அந்த சம்பவம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. முக்கியமாக வாழ்க்கையின் எல்லா தருணத்தையும் ரசிக்க வேண்டும் என்று அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் ஒரு பயண புகைப்பட நிபுணரா எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை அந்த குறிப்பிட்ட நேரம் மற்றும் நிகழ்வுகள் மறுபடியும் நடைபெறப்போவதில்லை. மக்கள் எதிர்பாராமல் சந்திக்கும் தருணங்கள், அவர்களின் பலதரப்பட்ட கலாச்சாரம் மற்றும் இடங்களை எல்லாம் படம் பிடிக்க ஆரம்பிச்சேன்.

மனிதனுடைய அழகான உணர்வுகளை படம் பிடிக்க எனக்கு பிடிக்கும் என்பதால், கர்ப்பிணிகள், அனைத்து வயது சார்ந்த பெண்கள், குடும்ப புகைப்படம், கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பட்டமளிப்பு விழா... என மக்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் மறக்க முடியாத நிகழ்வுகளை படம் பிடிப்பதில் என் ஆர்வத்தை செலுத்த ஆரம்பிச்சேன். இப்ப அது தான் என் அடையாளம்’’ என்ற கேரோலின் அன்பு செலுத்தும் போது ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பாசிடிவ் எனர்ஜி கிடைப்பதாக தெரிவித்தார்.

‘‘அம்மாவின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. பத்து மாதம் கருவை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது தன் கணவனின் அன்பு மற்றும் அக்கறை மட்டுமே. அது அவர்களுக்கு மட்டும் இல்லை கருவில் உள்ள குழந்தைக்கும் ஒருவிதமான

சந்தோஷம் மற்றும் பாசிடிவ் எனர்ஜியை கொடுக்கும். அதை இயற்கையோடு இணைந்து புகைப்படம் பிடிக்கும் போது அதற்கான உணர்வு அதிகம். காரணம் நாம் அனைவரும் இயற்கையின் குழந்தைகள். தாய்மை புனிதமானது.

அதை என்னுடைய புகைப்படத்தில் உணர்த்துகிறேன். 2016ம் ஆண்டு ஒரு தம்பதியினரை படம் பிடித்தேன். சான்டா கேடரீனாவில் உள்ள கேரோபாபா என்ற நகரத்தில் அவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்து எனது புகைப்படம் பயணம் துவங்கி பிராய்யா டா பாரா என்ற அழகான நீர்வீழ்ச்சியின் அழகு கொஞ்சும் எழில் சூழலில் முடிந்தது. என்னுடைய எல்லா புகைப்படங்களும் ஏதாவது ஒரு விதத்தில் இயற்கையுடன் இணைந்து இருக்கும்’’ என்ற கேரோலின் புகைப்படத்துறை பெண்களுக்கும் நல்ல வரவேற்பை அளிப்பதாக தெரிவித்தார்.

‘‘பொதுவாக பத்திரிகை துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட நியதி என்று சொல்லலாம். ஆனால் 1970ம் ஆண்டுகளில் பெண்களும் பத்திரிகை துறையில் தங்களை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன் தாக்கம் 1980 மற்றும் 1990களில் அதிகமானது. அந்த காலக்கட்டத்தில் பத்திரிகை துறை சார்ந்த படிப்புகள் அறிமுகமானது. பெண்களும் இந்த துறையினை தங்களின் தொழிலாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

மார்கிரெட் போர்க் வைட், இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட நிகழ்வுகளை தன் கேமராவால் அழகாக புகைப்படம் பிடித்த முதல் பெண்மணி. அவரை பின்பற்றி பல பெண்கள் புகைப்பட துறையை தங்களின் தொழிலாக பாவிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.

இந்த துறைக்கு வந்த பிறகு நான் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 2015ம் ஆண்டு யுரோப் பயணம் செய்தேன். அங்கு பாரிஸ், லண்டனை சுற்றி பார்த்த போது இன்னும் பல நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைச்சது.

20 நாட்களில் ஆறு முக்கிய நகரங்களை சுற்றி பார்த்தேன். அந்த நாட்கள் என் வாழ்நாளில் நான் மிகவும் ரசித்த பயணம்ன்னு சொல்லலாம். ஒவ்வொரு இடங்களை சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள மக்கள் அவர்களின் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்கள் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.

இந்த 20 நாட்களில் நான் தொழில் ரீதியாக மட்டும் இல்லை தனிப்பட்ட முறையிலும் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தியா, என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைக்கான பள்ளிக்கூடம்ன்னு சொல்லுவேன். மறுபடியும் கண்டிப்பாக இந்தியா வருவேன்’’ என்றார் ேகரோலின் போமரேஹன்.

ப்ரியா

Related Stories: