தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 608 அதிகரித்தது: இந்த மாதம் மட்டும் 1,376 உயர்வு

சென்னை: ஆபரண தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 608 உயர்ந்தது. தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் ஊரடங்கில்  கடந்த மாதம் 1ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 4,342க்கும், சவரன் 34736க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தங்கம் கிராமுக்கு 88 அதிகரித்திருந்தது. இந்நிலையில் 2ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 448 குறைந்தது. தொடர்ந்து 4 நாட்களுக்கு இந்த சரிவு நீடித்தது. 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,264 குறைந்தது. பின்னர் மீண்டும் ஏறத்தொடங்கி, 11ம் தேதி சவரனுக்கு 344 அதிகரித்தது. அடுத்த நாளே ₹560 குறைந்தது. மீண்டும் மறு நாள் 400 உயர்ந்து கடந்த 13ம் தேதி சவரன் 33,816 க்கு விற்பனயானது. கடந்த மாதத்தில் மட்டும் 10 நாட்களுக்கு மேல் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 இந்நிலையில்  இந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 1ம் தேதி சவரனுக்கு அதிரடியாக ₹608 உயர்ந்து, கிராம் 4,238க்கும் சவரன் 33,904க்கும் விற்பனையானது. 2ம் தேதியும் 232 உயர்ந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு 152 குறைந்த நிலையில், ஒரே நாளில் நேற்று சவரனுக்கு மீண்டும் 608 அதிகரித்து 34,672 ஆக உயர்ந்துள்ளது. இது நகை பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 1,376 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: