ரசாயனத்துக்கு குட்பை சொல்லுங்க!

நன்றி குங்குமம் தோழி

‘‘சின்ன வயசுல இருந்தே சும்மா இருப்பதே புடிக்காது. ஏதாவது புதுசா தெரிஞ்சுக்கிட்டே இருப்பேன். கல்யாணமாகி வந்ததும் தனியா வெளியில கூட போக முடியல. அது எனக்குள் ஒரு பெரிய டிப்ரெஷனை ஏற்படுத்தியது. நாம இப்படி இருக்கக் கூடாது. இந்த கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர நினைச்சேன். அதுக்காக நிறைய படிக்க ஆரம்பிச்சேன்.

வீட்ல இருந்துட்டே வேலை செய்யலாம்னு முடிவு செய்தேன். இதுவரை 10க்கும் மேற்பட்ட தொழில் திறமைகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன்” என்கிறார், கோயம்புத்தூரை சேர்ந்த ஃபாத்திமா ஷரிஃப்.. இவர் இயற்கை முறையில் பெண்களுக்கான மேக்கப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.  

‘‘என் சொந்த ஊர் மதுரை. கல்யாணமாகி கோயம்புத்தூர்லதான் 27 வருஷமா இருக்கேன். பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதனால, கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பண்ற வேலை மட்டும் தெரியாது. அது தவிர பத்துக்கும் அதிகமா... டெய்லரிங்ல ஆரம்பிச்சு சுவர் ஓவியம் வரை பல தொழில்களை கைவசம் வெச்சிருக்கேன்” என்றார்.

இயற்கை முறையில் மேக்கப் தயாரிப்பு எப்படி ஆரம்பமானது?

பேப்பர்ல தான் இது பத்தின விளம்பரம் பார்த்தேன். பொதுவா, தொழில் செய்யும் நோக்கத்துல தான், பயிற்சி மையங்கள் போவேன். ஆனா, இது மட்டும், சரி நாம வீட்ல உபயோகிக்க வசதியா இருக்குமேனுதான் போனேன். அங்க போன பிறகுதான், முதலில் சோப், அடுத்து ஷாம்பூ, லிப்ஸ்டிக், ஃபேஸ் வாஷ் என படிப்படியாக எல்லாமே கத்துக்கிட்டேன்.

படிக்கும் போதுதான் ரசாயனம் கலந்த பொருட்களால் கேன்சர், தோல் சம்மந்தமான நோய்கள் என பல பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொண்டேன். இதுல இவ்ளோ இருக்கானு ஆச்சரியமா இருந்துச்சு. இயற்கை பொருட்கள் மீது ஆர்வம் அதிகமாக, சரி முறையா எல்லாமே கத்துக் கொள்ளணும்ன்னு என்னுள் தாக்கம் ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருக்கும் ஒரு தோழி மூலம், எல்லா செய்முறைகளையும் கத்துக்கிட்டேன்.

இதுக்கு முன்னாடி பண்ணது எல்லாமே, கைவினை பொருட்கள், ஓவியங்கள் மாதிரி பரிசு பொருட்களும், அலங்கார பொருட்களும்தான். அதுல ஏதாவது தப்பாச்சுனா, பொருட் சேதம் மட்டும்தான். ஆனா, மேக்கப் பொருட்கள் உபயோகிக்கும் போது பிரச்சனை வந்தால், அது உடலையும் தோலையும் பாதிக்கும். அதனால, எவ்ளோ நாள் ஆனாலும் சரின்னு, ஒவ்வொன்றையும் முழுசா, முறையா, பொறுமையா கத்துக்கிட்டேன்.

என்னென்ன பொருட்கள் எல்லாம் விற்பனை பண்றீங்க?

பெண்களுக்கான சோப், க்ரீம் வகைகள், மாஸ்க், லிப்ஸ்டிக் வகைகள், ஷாம்பூ, பார் ஷாம்பூ (உப்பு தண்ணீருக்கு சிறந்தது), கூந்தலுக்கு எண்ணை, க்லென்சர், காஜல், ஃபேஸ் வாஷ் போன்ற உடல், முகம், முடிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையான முறையில், பழங்கள், காய்கறிகள் கொண்டு தயார் பண்றேன்.

அப்போ நீங்க தயாரிக்கும் பொருட்களில் ரசாயனமே கிடையாதா?

100%  இயற்கையான ‘பிராடக்ட்’ன்னு எதுவுமே கிடையாது. ஒரு பொருள், இன்னொரு பொருளோட சேர்ந்து ஒரு புது வடிவம் எடுக்க, அதுக்கு ஏற்ற ரசாயனம் உபயோகித்துதான் தீர வேண்டும். ஆனால், பல நாள் காலாவதியாகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனம், பொருட்கள் பளபள என்று தெரிய உபயோகிக்கப்படும் ரசாயனம் எல்லாம் நான் பயன்படுத்துவது இல்லை. எப்பவுமே இயற்கை சார்ந்து பொருட்களை பயன்படுத்தி வாழ்றதுதான் சிறந்தது. அது தான் நிரந்தர தீர்வு தரும். இயற்கைக்கு மாறான எல்லாமே, தற்காலிக தீர்வுதான் கொடுக்கும்.

இப்போ தொழில் எப்படி போகுது?

சோப், ஷாம்பூ, மேக்-அப் இதெல்லாம் நாம தினமும் உபயோகிக்கும் பொருட்கள் என்பதால, கொஞ்சம் ஈசியா விற்க முடியுது. இதற்கு முன்னால் செய்த அலங்கார பொருட்கள் எல்லாம், மாசத்துக்கு இரண்டு அல்லது மூன்று பொருட்களுடன் விற்றாலே பெருசுதான். அதை குறிப்பிட்ட மக்கள் மட்டும்தான் விரும்பி செலவு செய்து வாங்குவாங்க.

ஆனா, இந்த மேக்-அப், ஃபேஸ் வாஷ் எல்லா பெண்களின் அத்தியாவசிய ேதவையாக உள்ளது. இயற்கை முறை என்பதால் பலரும் இதனை விரும்பி வாங்குறாங்க. நான் பரிசுப் பொருட்களை தயாரிக்கும் போது, என் நண்பர்கள் கூட எங்க நான் அதை அவர்களிடம் விற்றுவிடுவேனோன்னு பயப்பட்டாங்க. சிலர் என்னிடம் பேசுறதையே நிறுத்திட்டாங்க.

நண்பர்கள் என்றாலும் நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. என்னுடைய தொழில் பற்றி அவர்களிடம் சொல்லத்தான் முடியுமே தவிர, அவர்கள் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை. ஆனால் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டால், அவர்கள் வேறு பொருட்களை நாட மாட்டார்கள். சிலருக்கு பிடிச்சு இருக்கும். ஆனா வாங்க தயங்குவார்கள்.

அந்த சமயத்தில் அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு இலவசமாக சில பொருட்களை பயன்படுத்தி பார்க்க சொல்வேன். பிடிச்சு இருந்தா கண்டிப்பா என்னை தேடி அவர்களே வருவாங்க. அதன் பிறகு வேறு எந்த பொருளையும் அவங்க நாடி போகமாட்டாங்க.  அடுத்து, ஃபேஸ்புக்ல நாம செய்யும் தொழிலை பற்றி குறிப்பு கொடுத்தா,  நல்லா விற்பனையாகும்னு சொன்னாங்க. அதனால, சமூக வலைத்தளத்துலையும் “லுஹா அர்டிஸ்ட்ரி” (Luhaa Artistry) என்ற பெயரில் தொடங்கி விற்பனை செய்து வருகிறேன்.

வீட்ல இருக்கறவங்க சப்போர்ட்?

என் கணவர், குழந்தைகளால எனக்கு இந்த விஷயத்துல எந்த ஒரு தடங்களும் இல்லை. அவர்களுக்கு இது பற்றிய பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், நான் செய்வதை அவர்கள் தடுத்தது கிடையாது. அந்த விதத்துல நான் சுதந்திரமா என்னுடைய தொழிலை செய்து வருகிறேன்.

எதிர்கால திட்டம்?

எனக்கு பெரிய திட்டம் எல்லாம் இல்லீங்க. இப்போ நடக்குற விற்பனைய விட, ஒரு பத்து பொருட்கள் அதிகமா விக்கணும். இந்த மாதிரி படிப்படியா உயர்ந்தா போதும். அதுதான் என் ஆசை. எல்லா பெண்களும் ஏதாவது ஒரு கைத்தொழில் கத்துக்கணும். நமக்கான தேவையை நாமலே செஞ்சுக்குற அளவு உயரணும். உங்க தெருவுல இருக்கும் சிறு தொழிலாளர்களை ஊக்கப்படுத்தி, அவங்க கிட்டயிருந்து பொருட்கள் வாங்குங்க. இயற்கையான வாழ்வுமுறைக்கு திரும்புங்க. ரசாயனத்துக்கு குட்பை சொல்லுங்க’’ என்றார் ஃபாத்திமா ஷரிஃப்.

 

ஸ்வேதா கண்ணன்

மூர்த்தி

Related Stories: