×

திரைப்படம் தயாரிக்க 2 கோடி வாங்கிய விவகாரம்: காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் புரடெக்‌ஷன் நம்பர்-4 என்ற பெயரில் படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2014ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.  ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில்,மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்சம் மதிப்புள்ள 2 காசோலையும், சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில்10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது. இந்த ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விடவே ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 செக் மோசடி வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த 7 வழக்குகளில் இரு வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும், மற்ற 5 வழக்கில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை  நடந்து வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார்.   இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து நீதிபதி அலிசியா அளித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

 மொத்தமுள்ள 7 வழக்குகளில் சரத்குமார் மட்டும் தொடர்புடைய ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும்,  சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தொடர்புடைய இரு வழக்குகளில் மூவருக்கும் தலா ஓராண்டும் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த தண்டையை மூவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். காசோலை மோசடியில் ஈடுபட்டதற்காக மூவரும் தொடர்புடைய இரண்டு வழக்குகளில்  தலா 1.5 கோடி அபராதமும், சரத்குமார் தொடர்புடைய  5 வழக்குகளிலும் தலா ₹10 லட்சம் அபராதம் என மொத்தம் 3 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இதில் புகார்தாரருக்கு 3.30 கோடியை இழப்பீடாக தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பை கேட்ட சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் தரப்பு வக்கீல், இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை 30  நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பை கேட்டு வெளியே வந்த சரத்குமார் கூறும்போது, ‘‘கொரோனா தொற்று காரணமாக ராதிகா நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். நாங்கள் சொன்ன தேதியில் செக்கை வங்கியில் செலுத்தாமல் முன்கூட்டியே செலுத்திவிட்டனர். இதை ஆதாரப்பூர்வமாக உயர் நீதிமன்றத்தில் முன் வைப்போம்’’ என்றார்.Tags : Sarathkumar ,Radhika ,Chennai Special Court , Sarathkumar, Radhika jailed in Chennai check court for buying Rs 2 crore for film production
× RELATED செக் மோசடி வழக்கில் ரூ.2 கோடிக்கு வங்கி...