×

கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் மிகப்பெரிய தாக்குதல் கொரோனா மீண்டும் கோர முகம்: ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு பாதிப்பு; உஷாராக இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து

புதுடெல்லி: கொரோனா வைரஸ் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1.15 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கி இருக்கிறது. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரசின் பேயாட்டத்தில் இருந்து 2021ம் ஆண்டில் விடிவு பிறந்து விட்டது என்ற மக்களின் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் படிப்படியாக தனது அசுர கரங்களை விரித்தது.

ஏப்ரல் மாதத்தில் தினசரி பாதிப்பு ஆயிரமாக அதிகரித்த நிலையில், ஜூலையில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை வைரஸ் தொற்றியது. இதனால், மார்ச் மாதத்தில் இருந்தே நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டன. வேலையிழந்த வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த கிராமத்தை நோக்கி படையெடுத்தனர். வேலைவாய்ப்பின்மை, முடங்கிய தொழில் துறை என மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். ஒருவாய் சோறுக்காக கையேந்தும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர். ஜூன், ஜூலையில் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆகஸ்ட், செப்டம்பரில் உச்சம் அடைந்தது.

அதிகபட்சமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஒரு நாள் பாதிப்பு 97,859ஆக பதிவாகி இருந்தது. முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்பாடு, பொதுமக்கள் கூடுவதற்கு தடை, சமூக இடைவெளி என கடுமையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதால் படிப்படியாக சரியத் தொடங்கிய பாதிப்பு, 2021ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த போது தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக சரிந்தது. இதனால், 2020ம் ஆண்டோடு கொரோனா ஒழிந்ததாக மக்கள் நம்பினர்.
கடந்த பிப்ரவரியில் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியதால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இதற்கிடையே, இங்கிலாந்து வைரஸ், பிரேசில் வைரஸ் என பல மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் பிப்ரவரி நடுவில் தனது 2வது அலையை வீசத் தொடங்கியது. முதல் அலையைப் போல் 2வது அலை இருக்காது, அது படுதீவிரமானது என மத்திய அரசு எச்சரித்த நிலையில், கொரோனா 2வது அலை தற்போது தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா புதிய பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து அச்சத்தை உருவாக்கி வருகின்றது. கொரோனா பரிசோதனை, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. மீண்டும் தினசரி பாதிப்பு 40 ஆயிரம், 50 ஆயிரம் என அதிகரித்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 4ம் தேதி தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், நேற்று 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உஷாராக இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.நேற்று ஒரே நாளில் 630 பேர் பலியாகி இருப்பது மீண்டும் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 66,177 ஆக உயர்ந்துள்ளது. 8 லட்சத்து 43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 92.11 ஆக குறைந்துள்ளது. இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 92,135 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியாக அதிகரித்துள்ளது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

* உலகளவில் 13.25 கோடி தொற்று
இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளையும் கொரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளது. உலகளவில் இதுவரை 13 கோடி 25 லட்சத்து 97 ஆயிரத்து 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 28 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் இறந்துள்ளனர். இதில், அமெரிக்கா 3 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரத்து 829 பேர் பாதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 5.56 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். அங்கு தினசரி பலி மீண்டும் ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

* 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் இதுவரை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

* முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும், அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* ஒரே நாளில் 4,200 பேர் பலி சடலங்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் பிரேசில்
உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசில், தற்போதைய நிலையில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் உருவான மரபணு மாற்ற புதிய கொரோனா வைரஸ் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 4,200 பேரை பலி கொண்டுள்ளது. நாட்டின் மொத்த மருத்துவமனையிலும் 90 சதவீத நோயாளிகளுடன் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடால் பிரேசில் மிகவும் அவதி அடைந்து வருகிறது. ஏற்கனவே, புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுத்து அதே இடத்தில் புதிய சடலங்கள் புதைக்கும் அவலம் நிலவுகிறது.   

* ராய்ப்பூரில் முழு ஊரடங்கு
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என ராய்ப்பூர் கலெக்டர் பாரதிதாசன் அறிவித்துள்ளார். அனைத்து கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு மாவட்ட எல்லைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கும் என்றும், மருத்துவமனை, ஏடிஎம்கள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதே போல, பஞ்சாபில் இந்த மாதம் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

* கொரோனாவுக்கு எதிராக கவனம் செலுத்துவோம்
உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக இரவும் பகலும் பணியாற்றுவோருக்கு நமது நன்றியையும், பாராட்டுக்களையும் உறுதிபடுத்தும் நாள். சுகாதார துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான நமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கான நாளாகும். முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிப்பதன் மூலமாக கொரோனாவுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம். அதே நேரத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

* திரிபுரா முதல்வருக்கு தொற்று
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேபுக்கு கொரோனா நோய் தொற்று நேற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஒவ்வொருவரும் கொரோனா நடவடிக்கைளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.


Tags : Corona , Corona faces biggest attack in more than one year: 1.15 lakh people injured in a single day; Danger to life if not vigilant
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...