உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தில் ஏசி, எல்இடி உற்பத்திக்கு ரூ.6,238 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: உற்பத்திக்கு ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7,920 கோடி முதலீடு ஈர்க்கப்படும். உற்பத்தியும் ரூ.1,68,000 கோடி அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதியில் ரூ. 64,400 கோடி, நேரடி, மறைமுக வருவாயாக ரூ. 43,900 கோடி கிடைக்கும். இது தவிர, 4 லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த துறைகளின் ஊக்கத்தொகைக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி, ஏற்றுமதி தலமாக இந்தியாவை மாற்றுவதில் இதுவொரு முக்கியமான மைல் கல்லாகும். ஏசி, எல்இடி துறைகளில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு, உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு, அதன் உற்பத்தி மதிப்பில் 4 முதல் 6 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.6,238 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறைவடைந்து, ஒன்றிணைத்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளும் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது. தகுதிகளின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்றார்.

* சூரிய மின்சக்திக்கு ரூ.4,500 கோடி

வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் கூறுகையில், ``புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்திக்கு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 10,000 மெகா வாட் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்துக்கு ரூ. 4,500 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், நேரடியாக 30,000 பேர், மறைமுகமாக 1.20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்,’’ என்றார்.

Related Stories: