உலகம் சுற்றும் தம்பதிகள்!

நன்றி குங்குமம் தோழி

ஆப்பிரிக்காவின் ஜாம்பேசி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் படகு பயணம். நிகரகுவாவின் சாம்பல் கக்கும் எரிமலை நோக்கிய ஆபத்தான பயணம். அண்டார்டிகாவின் ஜில்லிட வைக்கும் பனிச்சறுக்கு சாகசம்,  சிரியாவில் 2000 ஆண்டு பழமையான குகை பாரில் பீர் குடிக்கும் அனுபவம்... இது போல் ஒவ்வொன்றும் ஒரு புது வித அனுபவத்தை தருவதாக கூறுகின்றது இந்த ஜோடி.

இந்தியாவை சேர்ந்த இந்த தம்பதி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சங்கீதா ரங்கநாதன்,  பிரசன்னா வீராசாமி என்ற இந்த தம்பதிக்கு உலகம் சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம். பிரசன்னா உலகத்தில் உள்ள 193 நாடுகளையும் சுற்றி வந்து விட்டேன் என்கிறார் வெற்றி புன்னகையுடன். நானும் சளைத்தவள் அல்ல என்று தன் பங்கிற்கு 168 நாடுகளை சுற்றி வந்துவிட்டதாக கூறுகிறார் சங்கீதா.  மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் இந்த தம்பதிகள் தனது வெளியுலக பயணங்களை 1998ம் ஆண்டில் துவங்கியுள்ளனர்.

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பாகிஸ்தான். சுமத்ரா தீவு, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட எல்லா இடத்தையும் ஒரு வலம் சுற்றி வந்துள்ளனர். இதற்காக இவர்கள் ஒருபோதும் வேலையை ராஜினாமா செய்தோ, பணியிடங்களை மாற்றிக்கொண்டதும் இல்லையாம். அது எப்படி சாத்தியம் என்றால் அவர்களது  வேலை கணினி தொடர்புடையது என்பதால் தாங்கள் செல்லும் நாடுகளில் இருந்தபடியே தங்கள் வேலையை லேப்டாப்பில் முடித்து விடுவார்களாம்.

‘‘ஆரம்பத்தில் எங்களிடம் இந்திய விசா மட்டுமே இருந்தது. அப்போது பெரும்பாலும் டிசம்பர் மாத விடுமுறையில் தான் எங்கள் உலக சுற்றுலாவை மேற்கொண்டோம். கடந்த 2010ல் அமெரிக்கா விசாவும் எடுத்துக்கொண்டதால் பல நாடுகள் எங்களை வாங்க வாங்க என வரவேற்க ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார்கள் இந்த தம்பதியினர். சங்கீதா சைவப்பிரியர், பிரசன்னாவோ மீன், சிக்கன் என அசைவ உணவுகளை தேடி தேடி சாப்பிடுபவர். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை பீர் அருந்துவது மட்டும் தான்.

இதற்காகவே சிரியாவில் பழமையான குகை பாருக்கு சென்று பீர் குடித்ததாக கூறுகிறார்கள். 40 வயதை தாண்டி விட்ட இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஏன் தங்குவதற்கும் சொந்தமாக ஒரு வீடு இல்லை. ஆனாலும் உலகத்தை சுற்றி பார்க்கும் தங்களின் ஆர்வத்துக்கு என்றுமே தடை போட்டதில்லை.

இப்போதெல்லாம் இணையதளத்தில் டிக்கெட் எடுப்பது எளிது என்பதால் விமான டிக்கெட்டை பதிவு செய்து கொண்டு ஆண்டுக்கு 8 முறை கூட வெளிநாடுகளுக்கு பயணம் செல்கின்றனர். ‘‘எங்கள் நிறுவனம் எங்களுக்கு அளிக்கும் சலுகைகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் எங்களின் பயணத்திற்கு சாத்தியமாக உள்ளது’’ என்கிறார்கள்.

சங்கீதா சைவப் பிரியர் என்பதால் நியூசிலாந்தின் பட்டாணி ரோஸ்ட், ஈக்குவடாரின் வெண்ணெயில் பொரித்த சோளம், ஸ்பெயினின் பாட்டாஸ் பிரவாஸ் என தனக்கு பிடித்த உணவுகளை பயணத்தின் போது தேடிப்பிடித்து சாப்பிடுவது சங்கீதாவின் வழக்கமாம்.

இருவரும் கடைசியாக பாகிஸ்தான் சென்றதாகவும், அந்த பயணம்தான் மிக சிரமமாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் தனது தாய்நாட்டின் அருகேயுள்ள பாகிஸ்தான் வாகா எல்லையில் மாலையில் இரு நாடுகளும் கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது மதம் கடந்த சகோதரத்துவத்தை இருநாட்டு வீரர்களிடம் உணர முடிந்ததாகவும் பெருமை பொங்க கூறுகிறார்கள் இந்த தம்பதிகள். தொடரட்டும் இவர்களின் இனிய பயணங்கள்.

கோமதி பாஸ்கரன்

Related Stories: