×

தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குப்பதிவு: 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிகபட்சமாக கரூரில் 83.92 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதம் பதிவு

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் சென்னையில் மிகக் குறைவாக 59.06 சதவீத வாக்குகளும், அதிகப்பட்சமாக கரூரில் 83.92 சதவீத வாக்குகளும் பதிவாகின. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தாலும், சில இடங்களில் மட்டும் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப் வழங்காததால், நிறைய வாக்காளர்கள் தாங்கள் எந்த மையத்துக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் தடுமாறினர்.

அவர்களுக்கு கட்சி ஏஜென்டுகள் உதவி செய்தனர். தமிழகத்தில் காலை 7 மணியில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஆனாலும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்து, பிபிஇ உடை அணிந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.  வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 75 ஸ்டிராங் ரூமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, ‘‘தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது இறுதி நிலவரம் ஆகும். அதிகப்பட்சமாக கரூரில் 83.92 சதவீதம் வாக்குகளும், குறைந்த அளவாக சென்னையில் 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக’’ கூறினார். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுமார் 1 கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பலர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டாலும், கொரோனா தொற்று அதிகம் உள்ள நேரத்தில் 73 சதவீதம் வாக்குப்பதிவு என்பது நல்ல முன்னேற்றம் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,09,23,651 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,39,112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தும் நேற்று 72.78 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 4 கோடியே 57 லட்சத்து 56 ஆயிரத்து 753 பேர் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 202 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, மிக குறைந்த அளவாக சென்னையில் 59.06 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதன்படி சுமார் 41 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் 40,57,061 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால் 23 லட்சத்து 96 ஆயிரத்து 100 பேர் வாக்களித்துள்ளனர். 16 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் வாக்களிக்கவில்லை. சென்னையில் மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து கூறும்போது, ”தமிழகத்தில் சென்னையில்தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் என அதிகம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலரும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இப்படி வீடு மாற்றும்போது தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது இல்லை. அப்படியே தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் முகாமில் வந்து விலாசம் மாற்றினாலும் அவர்களுக்கு புதிய கார்டு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. பலருக்கு தாம் எந்த பூத்தில் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற விவரம் கூட தெரியவில்லை. பூத் சிலிப் இவர்கள் வீடுகளுக்கு வந்து தரப்படவில்லை. இப்படி தேர்தல் ஆணையத்தின் தவறுகளே சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று அவர்கள் கூறினர்.

அதேநேரம் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளை தவிர கிராமப்புறங்களில் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க ஆர்வமாக உள்ளதால் அங்கெல்லாம் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்தாலும், அவர்களில் சில நூறு பேர் மட்டுமே வந்து வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சில பிரச்னைகளால் தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

வாக்குச்சாவடிக்கு வராதவர்கள் 27 சதவீதம் பேர்
தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்  வாக்காளர்கள் 3,09,23,651 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,39,112 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 6.28  கோடி வாக்காளர்கள் இருந்தும் நேற்று 72.78 சதவீதம் பேர் மட்டுமே  வாக்களித்துள்ளனர். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 4 கோடியே 57 லட்சத்து  56 ஆயிரத்து 753 பேர் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து  202 பேர் - அதாவது 27.22 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாவட்டம் வாரியாக பதிவான வாக்கு சதவீதம்
சென்னை                      59.06
திருவள்ளூர்    70.56
காஞ்சிபுரம்    71.98
வேலூர்                      73.73
கிருஷ்ணகிரி    77.30
தர்மபுரி                      82.35
திருவண்ணாமலை    78.62
விழுப்புரம்    78.56
சேலம்                      79.22
நாமக்கல்                      79.72
ஈரோடு                      77.07
நீலகிரி                      69.68
கோவை                68.70
திண்டுக்கல்    77.13
கரூர்               83.92
திருச்சி             73.79
பெரம்பலூர்    79.09
கடலூர்                      76.50
நாகப்பட்டினம்    75.48
திருவாரூர்    76.53
தஞ்சாவூர்                      74.13
புதுக்கோட்டை    76.41
சிவகங்கை    68.94
மதுரை               70.33
தேனி              71.75
விருதுநகர்    73.77
ராமநாதபுரம்    69.60
தூத்துக்குடி    70.20
நெல்லை                66.65
கன்னியாகுமரி    68.67
அரியலூர்                   82.47
திருப்பூர்              70.12
கள்ளக்குறிச்சி    80.14
தென்காசி        72.63
செங்கல்பட்டு    68.18
திருப்பத்தூர்    77.33
ராணிப்பேட்டை    77.92
மொத்தம்      72.78

Tags : Tamil Nadu ,Karur ,Chennai , 72.78 per cent turnout in Tamil Nadu: 1.71 crore abstentions: ˜ Maximum 83.92 per cent in Karur Minimum 59.06 per cent in Chennai
× RELATED தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை...