வாட்ஸ் ஆப் வந்த கதை

நன்றி குங்குமம் தோழி

‘ஜான் கோயூம்’ உக்ரைனில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். தனது பதினெட்டாம் வயதில் கணினி நிரல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, பின் அந்த துறையிலேயே வேலை தேடத் தொடங்கினார்.  கணினி நிரல் துறையில் ஆர்வம் மிகுந்த கோயூமிற்கு 1997-ம் ஆண்டு ‘யாகூ’ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தன்னுடைய துறையில் ஏதாவது ஒன்றை புதிதாக உருவாக்க  வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருந்தார். கோயூமிற்கு தான் பார்த்த வேலை சலிப்பூட்டவே, 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

கோயூம், தனது வங்கி சேமிப்பில் இருந்த ரூபாய் 2.5 கோடி பணத்தை வைத்துக் கொண்டு தனது நண்பருடன் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்தார். இதற்கிடையில், இருவரும் ‘ஃபேஸ் புக்’ நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு அவர்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரிதும் கவலைப்படாத கோயூம், “மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு செயலியை உருவாக்குவதே என் நோக்கம், வெறும் பணம் மட்டும் சம்பாதிப்பதல்ல” என்று தன் நண்பரிடம் சொல்லிவிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கையில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது.

2009-ம் ஆண்டு மீதமிருந்த எஞ்சிய பணத்துடன் கோயூம் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்தவர் முதல் வேலையாக ஒரு ‘ஐ போன்’ ஒன்றை வாங்கினார். தான் ஐ போன் வாங்கிய  தகவலை நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்தார். அந்த சமயத்தில் தான் செய்தி மட்டுமே அனுப்ப தனியாக ஒரு செயலி உருவாக்கினால் என்ன? என்ற யோசனை கோயூமிற்கு தோன்றியது.

உடனே அதற்கான வேலைகளில் இறங்கினார். தன் நண்பர்களின் உதவியோடு ‘வாட்ஸ் ஆப்’ என்ற பெயரில் செயலியை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த செயலி வேலை செய்வதில் பல பிரச்சனைகள் இருந்தன. எனவே  இந்த செயலி போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் மனமுடைந்தார் கோயூம். செயலி சரிப்பட்டு வராது என்று முடிவு செய்தவர் மீண்டும் வேலையைத் தேடத் தொடங்கினார்.

ஒரு நாள் கோயூம் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவருடைய அலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளித்தார். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்தி அனுப்புவதற்கு பதில் தான் இருக்கும் இடத்தை பற்றி எல்லாருக்கும் ஒரே நேரத்தில் தெரிவித்தால் என்ன? என்ற சிந்தனை தோன்றியது. இந்த யோசனையின் விளைவாக உருவானது தான் ‘வாட்ஸ் ஆப்’ பில் உள்ள ஸ்டேட்டஸ் ஆப்ஷன்.

இதன் பிறகு, செய்திகள் மட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் படி நிறைய வசதிகளை ஏற்படுத்தி, ‘வாட்ஸ்ஆப்’பிறகு புதிய வடிவம் அமைத்து மீண்டும் வெளியிட்டார். ‘வாட்ஸ் ஆப்’ ஸ்மார்ட் போன் பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனைவரும் தகவல் பரிமாற்றத்திற்கு இதையே பெரும்பாலும் பயன்படுத்தத் தொடங்கினர். மிகக் குறுகிய காலத்திலேயே 500 மில்லியன் பயனாளர்களை பெற்று பில்லியன் டாலர் கம்பெனியாக உருவெடுத்தது.

இந்த காலகட்டத்தில் தான் ஸ்மார்ட் போன் உலகில் ‘ஃபேஸ் புக்’ கால்பதித்து மக்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ‘வாட்ஸ் ஆப்’ன் வளர்ச்சியைக் கண்ட ஃபேஸ்புக் நிறுவனம் எங்கு இது தங்களுக்கு போட்டியாக வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அந்த வாட்ஸ்ஆப் செயலியை விலைக்கு வாங்க முடிவெடுத்தது. கோயூமிடம் பேசிய ஃபேஸ்புக் நிறுவனம் அவரிடம் இருந்து ‘வாட்ஸ் ஆப்’பை பெரும் தொகை கொடுத்து (கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி) விலைக்கு வாங்கியது. கோயூம்க்கு அந்த நிறுவனம் வேலை கொடுத்திருந்தால் கூட மாதம் ரூபாய் 10 லட்சம் வரைதான் சம்பளம் கொடுத்திருக்கும்.

எந்த நிறுவனம் தனக்கு வேலை தர மறுத்ததோ அதே நிறுவனத்துக்கு தான் உருவாக்கிய வாட்ஸ் ஆப் செயலியை விற்றார். இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் மிகச் சிறந்த தகவல் பரிமாற்ற செயலிகளாக வாட்ஸ் ஆப் இருக்கிறது. பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் ஏதோ ஒன்றை சாதிக்க விரும்பியதன் விளைவாக வாட்ஸ் ஆப் உருவாக்கிய தந்தையாக கோயூம் புகழுடன் இருக்கிறார்.

Related Stories: