இந்தியாவின் முதல் கண் மருத்துவமனை!

நன்றி குங்குமம் டாக்டர்

 ரவுண்ட்ஸ்

சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தைப் போல, எழும்பூரின் இன்னொரு அடையாளமாகத் திகழ்கிறது அரசு கண் மருத்துவமனை. சமீபத்தில் தன்னுடைய 200-வது பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த மருத்துவமனையின் வரலாறையும், அதன் வசதிகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளரான டாக்டர் மகேஸ்வரி.

‘‘ஆங்கிலேயர் காலத்தில் 1819-ம் ஆண்டு ஜுலை மாதம் சூப்பிரண்டென்ட் டாக்டர் ரிச்சர்ட்சன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த மருத்துவமனை. உலகத்திலேயே இரண்டாவது கண் மருத்துவமனை, இந்தியாவின் முதல் கண் மருத்துவமனை என்ற பெருமையும் இதற்கு உண்டு.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இம்மருத்துவமனையில், 1926-ம் ஆண்டு Licentiate Course Of Opthalmalogy என்ற பட்டய மேற்படிப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து Diploma In Opthalmalogy என்ற கோர்ஸும் இங்குதான் முதன்முதலில், ஆரம்பிக்கப்பட்டது. 1948-ல்

MS Opthalmalogy எனும் படிப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதே ஆண்டில், சூப்பிரண்டென்ட்டாகப் பணிபுரிந்த டாக்டர். ஆர்.ஏ.எஸ். முத்தைய்யா என்பவரது முயற்சியால் கண் வங்கி தொடங்கப்பட்டது. ஆசியக் கண்டத்திலேயே முதன்முதலாக, தொடங்கப்பட்ட கண் வங்கி இதுதான். இங்கு க்ளுக்குமோ, ரெட்டீனா, மைக்ரோ-பயாலஜி, கண் நரம்பியல் துறை, யூவியா கிளினிக்(Uvea Clinic) உட்பட 8 துறைகள் உள்ளன.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் நம் மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. கண் மருத்துவமனை என்பதால், ஆம்புலன்ஸ் சேவை எங்களுக்கு அதிகமாக தேவைப்படாது. எமர்ஜென்ஸியாக இருந்தால், 108 சேவையைப்

பயன்படுத்திக் கொள்வோம்.

இந்த மருத்துவமனையில் கண் நரம்பியல், மைக்ரோ பயாலஜி, குழந்தைகளுக்கான கண் சிகிச்சை பிரிவு உட்பட 8 விதமான பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரெட்டீனோபதி ஆஃப் ப்ரீ மெச்சூர்டைக் குணப்படுத்துவதற்கான லேஸர், டயாபட்டீஸ் நோயாளிகளுக்கான லேஸர், கான்ட்ராக்ட் குறைபாட்டை சரி செய்யும் Phaco Surgery போன்ற வசதிகளும் எங்களிடம் உள்ளன.

45 சிறப்பு கண் மருத்துவர்களும், செவிலியர்கள் 85 பேரும் சிகிச்சைக்காக, இங்கு பணிபுரிகின்றனர். அனஸ்தீஷியா ஸ்பெஷலிஸ்ட்டுகளும் பணியாற்றுகிறார்கள். வாரம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படுகிற எங்களுடைய மருத்துவமனையில், இரவு நேரத்திலும் கண் சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருக்கின்றனர்’’ என்கிறார்.

உள்ளுறை

மருத்துவ அதிகாரியான செந்தில் இன்னும் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.‘‘எழும்பூர் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இங்கு வரும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் தரப்படுகின்றன. குறிப்பாக, கிளாக்கோமா, மாறுகண், பார்வைக் குறைபாடு ஆகியவற்றுக்கு  சிறந்த முறையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கண் நரம்பு குறைபாடுகளை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமார் 75 லட்சம் மதிப்புள்ள O.C.T.Scan, வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. B-Scan, லேசர் சிகிச்சை வசதியும் இங்கு உள்ளது.

இச்சிகிச்சைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதிக மைனஸ் பவர் கொண்டவர்களுக்கு, கண்ணாடிக்குப் பதிலாக, லென்ஸை இலவசமாகப் பொருத்தி வருகிறோம். நீரிழிவு நோயாளிகள் விழித்திரை பாதிப்பு முற்றிய நிலையில், சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கும் இலவசமாகத் தேவையான சிகிச்சைகள் அளிக்கிறோம்.

லேசர் சிகிச்சை பெற வரும் நோயாளிகள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை(Ration Card) ஆகியவற்றின் ஒரிஜினல், ஆதார் அட்டை ஜெராக்ஸ் முதலியவற்றை கொண்டு வர வேண்டும்’’ என்கிறார்.

‘‘உலகிலேயே மிகப்பெரிய முதல் கண் அருங்காட்சியமான இதை 1919-ம் ஆண்டு எலியட் என்பவர் நிறுவினார். இந்த மியூசியத்தில் 1873-ம் வருஷம் பிப்ரவரியிலிருந்து 1894-ம் வருஷம் வரை சிகிச்சைக்காக வந்தவர்களின் விவரங்கள் ஆவணமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. புகைப்படம் எடுக்கும் வசதி அப்போது கிடையாது. எனவே, நோயாளிகளின் உருவங்களை ஓவியமாக வரைந்து ஃப்ரேம் பண்ணி வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல், மூளை, எலும்பு போன்ற உறுப்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்ணாடி பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கண்களைப் பரிசோதிக்க உபயோகிக்கப்பட்ட பிரிட்டிஷ் காலத்து நுண்ணோக்கிகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் இன்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சூப்பிரண்டென்ட் பேராசிரியர் இ.டி. செல்வம் என்பவரின் மேற்பார்வையில், டாக்டர் சிதம்பரம், டாக்டர் வேலாயுதம் ஆகியோர் 1977-1982 ஆண்டுகளில் இதை புதுப்பித்தனர். தற்போது, மருத்துவ மாணவர்கள், நர்ஸுகள் காலை 7.30 முதல் மாலை 5.45 வரை இதை பார்வையிடலாம்’’ என்கிறார் மரச் சாமான் கிடங்கு பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன்.

‘‘இங்கு 1947-ம் ஆண்டிலிருந்து கண் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இயங்கும் கண் வங்கிகளில் சிறப்பாக இயங்குவதில் இது முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வங்கியில் ஆண்டுக்கு ஆயிரம் கண்கள் தானமாக பெறப்படுகிறது. இந்தத்துறையில் 11 பேர் பணியாற்றுகிறார்கள்.

இறந்தவரின் கண்ணிலிருந்து 6 மணி நேரத்திற்குள் Corneal scleral button பகுதி மட்டும்தான் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்படுகிறது. இது கண் வங்கியில் 48 மணிநேரம் பதப்படுத்தி இன்னொருவருக்கு பொருத்தப்படுகிறது. கண்தானம் இலவசமாகப் பெறப்படுவது போலவே, கண் தேவை உள்ளவர்களுக்கும் இலவசமாகவே பொருத்தப்படுகிறது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவாகும்’’ என்கிறார் கண் வங்கி பிரிவில் பணியாற்றும் கண் மருத்துவர் ஆனந்தபாபு.

உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முனுசாமியிடம் பேசினோம்…‘‘நான் இங்கு கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டு நான்கு நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறேன். கொஞ்ச நேரத்திலேயே அறுவை சிகிச்சை முடிந்தது. ஆரம்பத்தில் இருந்த வலி கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார்’’ என்றவரிடம் உள்நோயாளிகளுக்கு தரப்படும் உணவு பற்றி கேட்டோம். ‘‘இங்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் உணவு தருகிறார்கள். பால், முட்டை, கீரை, கொண்டைக் கடலை என ஊட்டச்சத்து மிக்க உணவு தருகிறார்கள். சுவையாகவும் இருக்கிறது. சுத்தமாகவும் இருக்கிறது’’ என்று மருத்துவமனைக்கு சர்ட்டிஃபிகேட்

கொடுக்கிறார்.  

அங்கு ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்த ஒரு பெண்மணியை சந்தித்து பேசினோம். தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டவர் முக்கியமான கோரிக்கை ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.‘‘நான் ஒரு தனியார் கான்ட்ராக்ட் மூலம் வந்து இங்கு வேலை பார்க்கிறேன். மருத்துவமனை வளாகம், கழிப்பறைகள், நோயாளி படுக்கைகளை சுத்தம் செய்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறோம்.

இத்துடன் உள்நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் பணியையும் காலை, மதியம், மாலை, இரவு என தொடர்ந்து செய்கிறோம். இத்தனை வேலைகள் செய்கிறோம். ஆனால், எங்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக, பற்றாக்குறையாக இருக்கிறது. மாதம் 7 ஆயிரம் ரூபாய்தான் தருகிறார்கள். இந்த தொகையில் வாழ்க்கை நடத்த சிரமமாக இருக்கிறது. எங்களை அரசு பணியாளர்களாக மாற்ற சொல்லி கேட்டு வருகிறோம்.

பெரும்பாலான துப்புரவு பணியாளர்கள், ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் தனியார் கான்ட்ராக்ட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு எங்களைப் போன்ற பணியாளர்களின் தேவை இருக்கிறது.

அதனால் அவர்கள் எங்களை அரசு ஊழியர்களாக இருந்து பணியாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் பெரிய உதவியாக இருக்கும். மருத்துவமனைக்காகவும், நோயாளிக்காகவும் உழைக்கிற எங்களின் வாழ்க்கையும் மாறும்’’ என்கிறார்.

பேராசிரியர் மற்றும் மருத்துவர் ராஜகுமாரி ஒரு முக்கியமான கோரிக்கையை அரசுக்கு வைக்கிறார்…

‘‘சென்னை, தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பது இந்த மருத்துவமனைக்கு உரிய குறிப்பிடத்தக்க பெருமையாகும்.

அதே சமயம் தமிழகத்தில் மண்டலவாரியாக இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கூட்ட நெரிசல் குறையும். அந்தந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியிலேயே சிகிச்சை மேற்கொள்வார்கள். இதற்காக மேற்கொள்கிற பயண தூரம், பிறகு மருத்துவமனையில் இருக்கிற நெருக்கடி போன்றவை கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இது பொதுமக்கள், மருத்துவர்கள் இரண்டு தரப்புக்குமே நல்லது’’ என்கிறார்.

நோயாளிகள் கவனத்துக்கு…

புறநோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். அதன் பின்னர், கேஷுவாலிட்டி பிரிவில் பணிகள் வழக்கம்போல் சிகிச்சைகள் நடைபெறும்.

ஒரு நாளில் 300 முதல் 450 பேர் உள்புற நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளியாக 1,100 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நோயாளிகளுக்காக மொத்தம் 478 படுக்கைகள் உள்ளன. உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள உடன் வருபவர்கள் தங்கிக்கொள்ளவும் இலவச வசதி உள்ளது.

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

Related Stories: