×

கலர் கலராய் ஜொலிக்கும் மினியேச்சர் பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்


கால மாற்றத்திற்கேற்ப கைதொழில்களும் இன்றைக்கு விதவிதமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. கலாச்சாரமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்றைய கலாச்சாரத்தில் பூக்கள், பழங்கள், இனிப்பு வகைகள், தோட்டம், மணமக்களின் உருவங்கள், அடுக்கடுக்காய் பல பொருட்கள் திருமண விசேஷங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன.

இந்த அழகுப் பொருட்களை வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி சிறு தொழிலாகச் செய்யலாம். இதன் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே நிரந்தரமான வருமானத்தையும் ஈட்டலாம் என்கிறார் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சுதா சந்திர நாராயணன். இவர் ‘சி.என்.ஆர்ட்ஸ்’ அண்ட் கிராப்ட்ஸ் என்ற பெயரில் பெண்களுக்காகவே கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘இங்கே நீங்கள் பார்ப்பது நிஜப் பூக்களே அல்ல... களிமண்ணால் உருவாக்கப்பட்டவை. இந்த களிமண்ணைக் கொண்டு நாம் விரும்பும் எந்த ஒரு பொருளையும் சிறிய மினியேச்சர் வடிவத்தில் செய்யலாம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், இனிப்பு, காரம், உணவு வகைகள், இசைக்கருவிகள், விலங்குகள், கேக் வகைகள், பூக்கள், போன்சாய் மரங்களும் செய்யலாம்.

பொதுவாக திருமண விசேஷங்களுக்கு வாழைமரம் வீட்டில் வைத்தால் நல்லது என்பார்கள். இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் நாம் வசிப்பதால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. அதனால் வாழை மரங்களை இந்த களிமண் கொண்டு மினியேச்சர் வடிவில் செய்து வைக்கலாம். பலர் இன்றைக்கு அப்படி வீட்டில் வாழை மரங்களை வைத்து அழகுப் பார்க்கின்றனர். இந்த களிமண்ணை வீட்டிலேயே தயார் செய்யலாம். இது ஏர் டிரை க்ளே என்பதால் பேக்கிங் பண்ண தேவையில்லை.

இதற்கு முதலீடு என்பது ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். கைத்திறமை மற்றும் மார்க்கெட்டிங் யுக்தியைக் கற்றுக்கொண்ட பின்னர் படிப்படியாக அதிகரித்து மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.ஏராளமான பெண்கள் என்னுடைய பயிற்சி ைமயத்தில் கற்றுக்கொண்டு தனியாக ஆர்டர் எடுத்து தொழில் செய்வதன் மூலம் நன்றாக வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொருட்கள் பெரும்பாலும் கொலு, கல்யாணம் போன்ற வைபவங்களில் அதிகமாக இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு பொருளையும்  மினியேச்சர் முறையில் செய்வதை முறையாக கற்றுக்கொண்டு செய்யும்போது அந்த பொருள் இயற்கையானதாகவும், அழகானதாகவும் இருக்கும். அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் அதன் பிறகு அவர்களாகவே எதையும் மினியேச்சர் வடிவில் செய்ய முடியும்.

இந்த களிமண் கான் ப்ளவர் (சோளமாவு) மற்றும் வெள்ளை பசை கொண்டு தயாரிக்கப்பட்டது. பெரும்பாலும் இது தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், இப்போது இதை நான் வீட்டிலேயே செய்துகொள்கிறேன்.

இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த களிமண் கையில் ஒட்டாது. காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு முதல் 5 மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும், தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். நாம் விரும்பும் நிறங்களை களிமண் தயாரிக்கும் போது கலந்து கொள்ளலாம். பயன்படுத்துவதும் எளிது.

பழங்கள் அல்லது இனிப்புகள் வைத்த ஒரு சிறிய மினியேச்சர் தட்டு செய்வதற்கு ஒருமணி நேரம் ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூபாய் 40 மட்டுமே. அதை ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யலாம். தென்தமிழகத்து உணவுகளாக இட்லி, தோசை, இனிப்பு, காரம், நகைகள், கல்யாண பெண்ணிற்கு ஜடை, அலங்கார பூக்கள், பிள்ளையார், மினியன்ஸ் பொம்மைகள்... என நம்முடைய கற்பனைத் திறனுக்கு ஏற்ப எந்த உருவங்களையும் இதில் ெகாண்டு வரலாம். பெரும்பாலும் இந்த மினியேச்சர் பொருட்களை வெளிமாநிலத்தினர் அதிகம் விரும்புவதால் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யலாம்.

இதில் ஏராளமான வகைகள் உள்ளதால் வெளியூர்களில் இருந்து பலர் கற்றுக்கொள்ள வருகிறார்கள்.  இத்தொழிலுக்கான மூலப்பொருள் சந்தைகளில் தாராளமாக கிடைக்கிறது. பொழுதுபோகவில்லையே, வருமானத்திற்கு வழிதெரியவில்லையே என்பவர்கள் பொழுதைப் பிரயோஜனமாக்க இந்த களிமண் கொண்டு மினியேச்சர் பொருட்கள் செய்து வருமானம் ஈட்டி வளமாக வாழலாம்’’ என்றார் சுதா சந்திர நாராயணன்.

தோ.திருத்துவராஜ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!