நிரந்தர வருமானம் அளிக்கும் பனை ஓலை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பனை ஓலையில் செய்யப்படும் அழகு நிறைந்த கலைப் பொருட்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஏனெனில், அவை மக்களுக்கு அத்தியா வசியமாக பயன்படவும் செய்கிறது. கண்களைக் கவரும் வகையில் அழகாகவும் காட்சியளிக்கும் இந்த பொருட்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை பனை ஓலையில் பயனுள்ள கலைப்பொருட்களை தயாரிக்கும் பணியில் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கூட்டுறவு சங்கம் மூலம் அவர்கள் பனை ஓலையில் கூடை, தட்டுகள், மணிபர்ஸ், குப்பைக்கூடை, வெங்காய கூடை, விதவிதமான விசிறிகள், பூக்கூடைகள், அலங்கார பொருட்கள் வைப்பதற்கான கூண்டுகள், தொப்பி, பாய், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுக்குப்பைகள், பேனா வைக்கும் கூடுகள் உள்ளிட்ட 25 வகையான பொருட்களை கலைநயத்தோடு தயார் செய்கிறார்கள். கவர்ச்சிகரமான இந்த கலைப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அவர்கள் தயார் செய்யும் பொருட்களை விற் பனை செய்வதற்காக மணப்பாடு கிராமத்தில் பனை ஓலை தொழிற் கூட்டுறவு சங்கம் பல்லாண்டு காலமாக இயங்கி வருகிறது.

அங்கு உற்பத்தி செய்யப்படும் பனை ஓலை கலைப் பொருட்கள் சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. தனியார் ஏஜென்சி மூலம் கலைப் பொருட்கள் கொள்முதல் செய்யப் பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த கலைப்பொருட்களுக்கு வரவேற்பு உள்ளது. இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூட்டுறவு சங்கத்தில் பனை ஓலை கலைப் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். மணப்பாடு பனை ஓலை தொழிற் கூட்டுறவு சங்கத்தில் பயிற்சி பெற்று பின்னர் அங்கேயே பயிற்சியாளராகவும் இருந்து,

தற்போது சென்னையில் வசித்து வரும் மணப்பாடு கிரேஸ்லின் லியோன் பனை ஓலை சிறு தொழில் குறித்து பகிர்ந்து கொண்டார். “நான் கற்றுக்கொண்ட இந்தக் கைதொழில்தான் தற்போது எனக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. எனது கணவர் இறந்துவிட்டார். பிள்ளையும் சரியில்லாமல் போய்விட்டான். ஆனாலும், இந்த பனை ஓலை பயிற்சி அளிப்பதன் மூலமும், பொருட்கள் செய்து விற்பதன் மூலமும் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். மாதவரத்தில் உள்ள பனைப் பொருட்கள் நிறுவனத்தில் ஓலை வாங்கி கலைப் பொருட்களை செய்கிறேன்.

பனை ஓலை மற்றும் பனை ஈர்க்கு ஆகிய இரண்டையும் வைத்து பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்யலாம். எனக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்று சொல்ல முடியாது, பொருட்கள் விற்கும்போது  பணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மாதவரம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பயிற்சி கொடுக்க அழைக்கும்போது குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். தற்போது பனை ஓலை கிடைப்பது அரிதாகி விட்டது. கூடுதல் விலை கொடுத்து பனை ஓலை வாங்கி பதப்படுத்தி, பொருட்கள் வடிவமைக்கிறார்கள். இதனை வீட்டில் இருந்தபடியே தயாரித்து பெண்கள் சம்பாதிக்கலாம்.

கண்களைக் கவரும் இந்த கலைப் பொருட்களை உருவாக்கும் மூலப் பொருளாக இருப்பவை, பனையின் இளம் ஓலைகள். இதனை குருத்து ஓலை என்று அழைக்கலாம். ஒரு பனையில் இருந்து கிடைக்கும் குருத்து ஓலை 40 முதல் 50 வரை விலையில் கிடைக்கும். அந்த ஓலையை 2 நாட்கள் வெயிலில் காய வைக்கணும். ஓலை நன்றாக காய்ந்ததும், பொருட்கள் செய்யும் பதத்துக்கு வந்துவிடும். முதலில் ஓலைகளில் உள்ள ஈர்க்குகளை சிறிய கத்தி மூலம் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் செய்யப்படுகின்ற பொருட்களுக்கு ஏற்ப ஓலைகளை சிறு கத்தி மற்றும் பொருட்கள் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும்.

பெரிய அள விலான கலைப்பொருட்கள் தயார் செய்யும்போது பனை ஓலை பெரிய அளவிலும், சிறிய பொருட்கள் தயார் செய்ய பனை ஓலைகளை சிறிய அளவிலும், தேவைக்கு தக்கபடி தனித்தனியாக வெட்டி எடுக்க வேண்டும். அதை வைத்து கூடை, பெட்டி, கிலுகிலுப்பை, தட்டு உள்ளிட்ட பொருட்களில் ஏதாவது ஒன்றை செய்யலாம். இப்பொருட்களை செய்ய சுமார் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை தேவைப்படும். நுணுக்கமான சிறிய பொருட்கள் என்றால், அதற்கு அதிக நேரம் ஆகும். சிறிய பின்னலுடைய தொப்பி, தட்டுகள், வரவேற்பு அலங்கார கூடைகள் உள்ளிட்ட கலை நயமிக்க பொருட்கள் செய்ய ஒரு நாள் கூட ஆகும்.

பெரிய அளவிலான பொருட்களை கலை நயத்துடன் செய்ய 2 நாட்கள் வரை ஆகும். அத்தகைய பொருட்களை வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். ஆனால் நம் நாட்டில் நம் பாரம்பரிய பொருட்களுக்கு மதிப்பில்லை என்பது வருத்தப்படக்கூடியதாகவே உள்ளது. பனை ஓலைகளில் பயன்படுத்தப்படும் சாயங்கள் கடைகளில் கிடைக்கிறது. மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பிரவுன்... என வரும் இந்த சாயங்களை நம் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். தேவையான சாயத்தை பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் கலக்கி, கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்கும்போது, எத்தனை ஓலைகளில் அந்த சாயத்தை ஏற்றவேண்டுமோ அதனை அந்த நீரில் போட்டு கொதிக்க விடவேண்டும். சாயம் ஓலைகளில் நன்றாக ஏறிவிடும். பின்பு அதனை வெளியே எடுத்து காயவைத்து, தேவையான பொருட்கள் செய்யலாம். இந்தத் தொழிலை பெண்கள் கற்றுக் கொண்டால், மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதோடு மனநிறைவான வருமானமும் வந்துகொண்டேயிருக்கும். இதனை விற்பனை செய்வது அவரவர் திறமையைப் பொறுத்தது. ஒருசில நிறுவனங்களை அணுகினால் அவர்கள் மொத்தமாக வாங்கிக் கொள்வார்கள். அதனால், நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.

இதைப் பற்றி கற்றுக் கொள்ள விரும்புபவர்களும் தனிப்பட்ட முறையில் நானும் பயிற்சி அளிக்கிறேன். சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பனை ஓலை சங்கம் மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்கள் இதனை பகுதிநேர தொழிலாகவும் அமைத்துக் கொள்ளலாம். இந்த கலைப்பொருட்களை 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வந்திருக்கும் இந்த நேரத்தில் இத்தொழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே, பெண்கள் இத்தொழிலைக் கற்றுக்கொள்வது நல்லது என்பதோடு, நம் பாரம்பரிய கலை மற்றும் பொருட் களைக் காப்பாற்ற வேண்டும்’’ என வேண்டுகோளோடு முடித்தார் கிரேஸ்லின் லியோன்.

- தோ.திருத்துவராஜ்

படங்கள் ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: