×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* சப்பாத்தி மீந்து போனால் வெயிலில் நன்றாக காய வைத்து நொறுக்கிக் கொண்டு தகுந்த வெல்லப்பாகு வைத்து இறக்கி அதில் சப்பாத்தித் தூளைக் கொட்டி ஏலம், சுக்கு தட்டிப்போட்டுக் கிளறி சற்று ஆறியதும் சிறு உருண்டையாகப் பிடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கும் தின்பண்டமாகும்.

* பொடித்த வெல்லத்தை பாலில் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, பருப்புத்தூள் சேர்த்து வெல்லம் கலந்த பாலை சிறிது சிறிதாக தெளித்து உருண்டை பிடிக்கவும் அல்லது  பேடாபோல் தட்டி வைத்தால் திடீர் ஸ்வீட் ரெடி.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* சாம்பாருக்கு இறக்கும் சமயம் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்துப் பொடி செய்து போடுவதுண்டு. அத்துடன் சிறிது வறுத்த கசகசாவையும் பொடி செய்து போட்டால் சாம்பார் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* கிச்சடி செய்யும் போது தண்ணீர் ஊற்றும் அளவில் பாதியளவு தேங்காய்ப்பால்
சேர்த்துச் செய்தால் அதன் ருசியே தனிதான்.
- ஆர்.ஜெயலெட்சுமி,  திருநெல்வேலி.

* இஞ்சியைச் சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறையும் கலந்து குடித்தால் பித்தம், தலை சுற்றல் சரியாகும்.
* வாய்ப்புண், வயிற்றுப்புண் கோளாறுகள் நீங்க மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரை சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பூண்டு, மிளகு, சீரகம் அரைத்து அதில் சேர்த்து அதனுடன் புளி தண்ணீர், உப்பு சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். அருமையான ரசம் ரெடி!
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து வேக வைத்து வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்னை ஏற்படாது. சருமம் பளபளப்பாகும்.
- நா.செண்பகா, பாளையங்கோட்டை.

* புளிப்பான திராட்சை, ஆப்பிள், மாம்பழங்களை வீணாக்காமல் ரசத்தில் அரைத்து சேர்த்தால் சூப்பரான பழ ரசம் ரெடி.
* பழங்களை சிறிதளவு நலலெண்ணெய், கடுகு தாளித்து மிளகாய் மற்றும் ஊறுகாய் பொடி சேர்த்து உப்பு சேர்த்து கலந்தால் சுவையான பழ ஊறுகாய் தயார்.
* காலிஃப்ளவர் மற்றும் சிக்கன் கோபி மஞ்சூரியன் செய்ய கலர் பொடி சேர்க்காமல் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து கலந்தால், அழகான மஞ்சள் நிறம் வரும். உடலுக்கும் கேடு விளைவிக்காது.
- உஷா குமாரி, சூளைமேடு.

* கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் பெண்களுக்கு இடுப்புவலி வந்தால் பாலில் மிளகுப் பொடியைப் போட்டுக் குடித்தால் இடுப்பு வலி தீரும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாகப் பிறக்கும். மலச்சிக்கலும் ஏற்படாது.
- ஆர். அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.

* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாக இருக்கும்.
- ஹெச்.ராஜேஸ்வரி,  மாங்காடு.
* வெங்காயத்தையும் கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு வலி வராமல் பாதுகாக்கும்.
- வா. சியாமளா, சென்னாவரம்.

* இளநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
* நெல்லிக்காய் பொடியை நெய்யில் குழைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவடையும்.
* கிராம்பை சட்டியிலிட்டு வதக்கி மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.
- எஸ். வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* பசலைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் நாளடைவில் தொந்தி குறைந்துவிடும்.
* பப்பாளிப் பழத்துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்து அடக்கினால் பல்வலி காணாமல் போய்விடும்.
- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

கண் எரிச்சலை நீக்கும் பன்னீர்!

* ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சியைத் தரும். வாய்ப் புண்ணை ஆற்ற வல்லது.
* ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
* ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை கலந்து அருந்திட, பித்த நீர் அதிகமாவதால் உண்டாகும் மயக்கம், வாய்கசப்பு, நெஞ்செரிச்சல் நீங்கும்
* ரோஜா இதழை சட்னி செய்து சாப்பிட செரிமானம், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
* ரோஜா இதழ்களை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட வாய் துர்நாற்றம் அகலும்.
* ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
* ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வாய்ப்புண், குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு நிற்கும். கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் எளிதாக பிரியும்.
* ஒரு மண்டலம் ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!