×

மரங்களின் தாயை கவுரவித்த பத்மஸ்ரீ விருது

நன்றி குங்குமம் தோழி

புதுடெல்லியில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி பத்மஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்ட 107 வயது மூதாட்டி, திடீரென விருது வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார். ஜனாதிபதியும் புன்முறுவலுடன் அந்த ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டார். பத்மஸ்ரீ விருது பெற்ற அந்த மூதாட்டி பெயர் சாலுமாரதா திம்மக்கா. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். மரங்களின் தாய் என அழைக்கப்படும் அவரது சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

கர்நாடகாவின் ஹூளிகள் பகுதியை சேர்ந்த இவர் இதுவரை 8,000 மரக்கன்றுகளை நட்டு அதை நீர் ஊற்றி பராமரித்துவருகிறார். தற்போது அவை மரங்களாக மாறி பலருக்கு நிழல் தருகிறது. அவர் ஊன்றி வைத்த மரங்களில் பெரும்பாலானவை ஆலமரங்கள். ‘‘18 வயதில் சிக்கையா என்பவருடன் எனக்கு திருமணம் முடிந்தது. பல ஆண்டுகளாக எனக்கு குழந்தையில்லை. குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலாக அலைந்தும் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையில்லாத ஏக்கத்தில் எனது 40வது வயதில் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

எனது கணவர் எனக்கு ஆதரவாக இருந்து எனது தற்கொலை முயற்சியை தடுத்தார். குழந்தை இல்லாவிட்டால் என்ன மரக்கன்றுகளை நட்டு அதை குழந்தைகளாக பராமரித்து வா என எனக்கு அன்புக்கட்டளையிட்டார். அவரது வார்த்தைகள் எனக்கு அருமருந்தாக அமைந்தது. இதனால் முதலில் எனது கிராமத்திலேயே 10 மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தேன். 65 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக அதிகரித்துள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்காது. நாலு கி.மீ நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து இந்த மரக்கன்றுகளை வளர்த்து ஆளாக்கியுள்ளேன்.

இந்த நிலையில் கடந்த 1991ல் எனது கணவர் மரணம் அடைந்தது எனக்கு பேரிழப்பாக அமைந்தது. பிள்ளைகள் கூட பெற்றவர்களை மட்டும் தான் பார்த்துக்கொள்வார்கள். சில நேரம் அவர்கள் அநாதை இல்லங்களுக்கு அனுப்பப்படும் சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் ஒரே ஒரு மரத்தை வளர்த்தால் அது ஒரு ஊருக்கே நிழல் கொடுக்கும் எனும்போது நான் வளர்த்துள்ள 8 ஆயிரம் மரங்களும் எனது குழந்கைள். இவை காற்றில் அசைந்தாடி இந்த ஊரையே மகிழ்விக்கும் அழகை பார்ப்பதே எனக்கு கிடைத்த பேரானந்தம்’’ என்கிறார் திம்மக்கா பாட்டி.

- கோமதி பாஸ்கரன்


Tags :
× RELATED அமெரிக்க இந்தியருக்கு கண்டுபிடிப்பாளர் விருது