×

நூடுல்ஸின் நீளமான வரலாறு

நூடுல்ஸின் பூர்வீகம் சீனாதான். கி.பி.25ஆம் ஆண்டில் கிழக்கு ஹான் சாம்ராஜ்யத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. இதுதான் முதல் வரலாற்றுப் பதிவு என்றாலும் சுமார்  நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸ் சீனர்களால் உண்ணப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சீனாவின் லஜியா பகுதிகளில் கிடைத்த தொல்லியல் அகழாய்வுகளில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு  முற்பட்ட நூடுல்ஸ் பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளதாம். சீனர்கள் கோதுமை, மைதா, அரிசி உட்பட பல்வேறு உணவுப் பொருட்களைக்கொண்டும் நூடுல்ஸைத் தயாரித்திருக்கிறார்கள். பெளத்த மதம்  சீனாவிலிருந்து ஜப்பானுக்குப் பரவியபோது சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நூடுல்ஸும் நுழைந்தது. அங்கிருந்து கொரியாவுக்கும் ஆசியாவின் இதரப் பகுதிகளுக்கும் பரவியது என்கிறார்கள்.  ஐரோப்பாவில் முதல் நூற்றாண்டின்போதே நூடுல்ஸுக்கும் பாஸ்தாவுக்கும் நெருக்கமான ஓர் உணவு தயாரிக்கப்பட்டது என்றாலும் அது நூடுல்ஸாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மத்திய கிழக்கு  நாடுகள் முதல் ரோம் வரை நூடுல்ஸ் போன்ற உணவுகள் உண்ணப்பட்டிருந்தாலும் அவை நூடுல்ஸ் அல்ல. சீனர்களுடனான வணிகத் தொடர்பின் காரணமாய் இம்மாதிரியான உணவு  தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். போன நூற்றாண்டில்தான் நூடுல்ஸ் ஒரு சர்வதேச உணவாக வடிவெடுத்தது.

Tags : நூடுல்ஸி
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...