×

வாய் இல்லாத ஜீவன்களையும் விட்டு வைக்கவில்லை இலவச ஆடு, மாடு, கோழிகுஞ்சு திட்டத்தில் மெகா ஊழல்: மருந்து கொள்முதலில் பல கோடி சுருட்டல் : இந்த கையில் பணம்;அந்த கையில் பதவி என பேயாட்டம்

கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் கால்நடைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறையின் மூலம் இலவச கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி விதவைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கும் 5 ஆடுகள் அல்லது 25 கோழி குஞ்சுகள் அல்லது ஒரு பசுமாடு, ஒரு கன்றுக்குட்டி வழங்க வேண்டும்.

கறவை மாடுகள் திட்டத்தில் முறைகேடு
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2018 வரை 21 மாவட்டங்களில் இலவச கறவை பசுக்கள் வழங்கப்பட்டது. அது, 2018-19ம் ஆண்டில் 9 பிற மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2021 வரை ரூ.370 கோடி மதிப்பில் 1,11,379 பயனாளிகளுக்கு பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தான் அதிகாரிகள் துணையுடன் அரசு பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. அடிமாடுகள், 5 வயதுக்கு மேற்பட்ட மாடுகள், தமிழக சூழலுக்கு பழக்கப்படாத மாடுகள் மற்றும் பால் வற்றிய மாடுகளை 15 கொடுத்து வாங்கி பயனாளிகளுக்கு 40 ஆயிரம் என்று சொல்லி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட அளவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளைடியத்துள்ளனர். மாநில அளவில் இது பல நூறு கோடிகளை தாண்டும்.

வசதியானவர்கள், வயதானவர்கள் தேர்வு
2011 முதல் 2015 வரை இந்த திட்டத்தில் பயன் பெற்றவர்களாக காட்டப்பட்டவர்களில் பல ஆயிரம் பேருக்கு எழுந்து நடக்க முடியாத நிலையில் 60 வயதை கடந்த நபர்களை சேர்த்துள்ளனர். மேலும் பல ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், நில உடமையாளர்களாக இருந்தனர். இந்த திட்டத்தில் இவர்களை அட்ஜஸ்ட் செய்து அதிகாரிகள் கொள்ளைடியத்துள்ளனர். தணிக்கையில் கடந்த 2011 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 75448 பேருக்கு ரூ.274 கோடியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு ஆந்திராவில் உள்ள புங்கனூர், கொத்தூர், வேதமூர் உட்பட சித்தூர், கடப்பா மாவட்டங்களில் உள்ள மாட்டு சந்தைகளில் கறவை மாடுகளை வாங்கியுள்ளனர்.
ஒரே வீட்டில் 3 பேருக்கு இலவச ஆடு, மாடுகள் அளிக்கப்பட்டன. நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்தில் ரயில்வே பென்ஷன் ரூ.23 ஆயிரம் பெறும் ஒரு பெண்ணுக்கு ஆடு கொட்டகை அமைக்க தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமே நடந்தது.

இன்சூரன்ஸ் மாயம்
கடந்த 2011-13ல் 950 பசுக்களில் 329 பசுக்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவை. இதனால், அவை வாங்கிய சில நாட்களிலேயே இறந்துவிட்டன. பசு மாடுகள் இறக்க நேரிட்டால் பதிலுக்கு வேறு பசு அளித்திட மாடுகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 5 மாவட்டங்களில் நிகழ்ந்த 453 இறப்புகளில் 103 கறவை மாடுகள் மட்டுமே மாற்றி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் காப்பீடு வழங்கவில்லை.

மலட்டு மாடுகள்
கால்நடைத்துறை செய்த ஆய்வில், 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 441 கறவை மாடுகள் மடிவற்றிய மலட்டு மாடுகள். இதனால் ஏழை பெண்களின் பொருளாதாரம் உயராமல் கடனாளியாக மாற்றிவிட்டது.

கோட், ஷர்ட் போட்டு ஆடு மேய்ப்பு
வெள்ளாடு/ செம்மறியாடுகளில் மூன்று ஆடுகள் பெட்டையாகவும், ஒரு ஆடு கிடாவாகவும் வழங்கப்படுகின்றன. ஆடுககளை பயனாளிகளே கொள்முதல் செய்யலாம்.  இந்த திட்டத்தில்  2001 முதல் 2020 வரை ரூ.1480 கோடியில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 674 பெண்களுக்கு 46 லட்சத்து 70 ஆயிரத்து 696 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளது. கோட், ஷர்ட் போட்டவர்கள், கூலிக்கு மேய்ப்பவர்களை ஆடு முன் நிறுத்த பயனாளிகளாக காட்டி சில நூறு கோடி சுருட்டப்பட்டது. உண்மையான பயனாளிகள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். இன்னும் சில இடங்களில் வாடகைக்கு ஆட்டை வாங்கி போட்டோ எடுத்து பல கோடிகளை ஏப்பம் விட்டுள்ளனர். அந்த வகையில் ஏழைகளையும், ஆடுகளின் போட்டோக்களை காட்டி பணத்தை சுருட்டி உள்ளனர். இதற்காக ஆடுகளுக்கு 100ம், மனிதர்களுக்கு ரூ.2000மும் அளிக்கப்பட்டுள்ளது.

கால்நடை கொட்டகை அமைப்பதிலும் முறைகேடு
 கால்நடை கொட்டகை அமைப்பதில் அரசு மானியம் வழங்குகிறது. இதில் 2 மாடுகள் இருந்தால் 53 ஆயிரம், 5 மாடுகளுக்கு 81ஆயிரம், 10 மாடுகளுக்கு 1 லட்சம், 20 ஆடுகள் இருந்தால் 1.40லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் மாவட்டம் முழுவதும் 3ஆயிரம் கொட்டகை அமைக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டகை அமைக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கண்துடைப்புக்காக கொட்டகை அமைத்திருந்தனர். பல மாவட்டங்களில் உள்ளாட்சித்துறை அமைச்சரின் உறவினர் ஒருவர் டெண்டர் எடுத்துள்ளார். பயனாளிகளிடம் குறைந்த தொகை கொடுத்துள்ளனர்.

கோழி குஞ்சுகளிலும் போலி
அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  4 வார வயதுடைய 60 லட்சம் அசில் இனக்கோழிகள் 2.4 லட்ம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிகளுக்கு 25 கோழிகள் வீதம் வழங்கப்பட்டு இருப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால், அசில் ரக நாட்டு கோழிகள் பற்றாக்குறை காரணமாக பண்ணை கோழிக்குஞ்சுகளை கால்நடைத்துறை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  பல ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கியதாக ஆளுங்கட்சியினரை நிற்க வைத்து போட்டோ போஸ் கொடுத்து அசத்தி விட்டனர்.

மூடி கிடக்கும் மருந்தகங்கள்
தமிழகம் முழுவதும் 2556 கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளே வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய மருந்துக்கான பில்லை மட்டும் மருத்துவ பணிக்கழகத்துக்கு அனுப்பி வைத்தால் போதும். இங்கு தான் ஊழல் ஆரம்பித்தது. மருந்துகளை கொள்முதல் செய்ய அதிகாரம் பெற்ற மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள், போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். மேலும் மருந்துகளை சில நிறுவனங்களிடம் மட்டும் வாங்கி அவர்களுக்கு சாதகமாகவும் செயல்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வரை கமிஷன் பார்த்துள்ளனர். மாடுகளுக்கான இலவச மருந்துகளையும் நிறுத்திவிட்டனர். வெறும் பில்கள் மட்டும் தயார் செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

மாடு மிக்சரிலும் ஊழல்
மாடுகளுக்கு மினரல் மிக்சர் என்ற ஊட்டச்சத்து கலவை வழங்காமல் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் ஆந்த்ராக்ஸ், கோமாரி தடுப்பூசிகளை குறைந்த அளவில் வாங்கி அதிக மாடுகள் பாதிக்கப்பட்டதாக கணக்கு எழுதி, அதற்காக கூடுதலாக மருந்து வாங்கியதாக பில் செட் செய்து பணத்தை தங்கள் பாக்கெட்டில் நிரப்பிவிட்டனர்.

பணி நியமனங்களில் ஊழல்
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கால்நடைத்துறையில் பணியிடங்களை நிரப்பும் பணியில் கால்நடைத்துறை அமைச்சர் உத்வேகம் காட்ட தொடங்கினார். அதன்படி தமிழக கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 1.7.2015ல் இருந்து உருவான காலிப்பணியிடங்கள் 1,573. நேர்காணல் மூலம் இப்பணியிடங்களை நிரப்ப சுமார் 2,000 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஏற்கனவே இரு முறை இதே பணிக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டு எவ்வித காரணமும் சொல்லாமலேயே நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் 2,20,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிலிருந்து சுமார் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் மூலம் நேர்காணல் நடத்தி நியமனம் செய்யாமல், மாவட்ட கலெக்டர்களை நேர்காணல் நடத்திட உத்தரவிடப்பட்டது. அதிகாரிகளிடமிருந்த காலி பணியிட பட்டியலையும், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலையும் அதிகாரிகளிடமிருந்து பறித்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கை ஏதும் நிறைவேற்றப்படாததால் கோபத்தில் இருந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்புவதில் ஒரு இடத்துக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை பேசப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலிடத்தில் இருந்து தரப்படும் பட்டியலில் இருப்பவர்களை நியமிக்காமல் அதிகாரிகள் முரண்டு பிடிப்பார்கள் என்றும், விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்பதால், அதிகாரிகளிடமிருந்து பட்டியலை வாங்கி மாவட்ட கலெக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அதிமுக ஆட்சியாளர்களின் மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுக்கேற்ப செயல்பட மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருந்தனர்.

இதன்மூலம் அலுவலக உதவியாளர் பணி நியமனத்தில் சுமார் ரூ.200 கோடி அளவில் ஊழல் செய்ய திட்டமிட்டனர். ஆனால் தேர்தல் அறிவிப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது இருப்பதால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி வாய் இல்லாத ஜீவன்களின் உயிர்காக்கும் தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சத்து பவுடர்கள் ஆகியவற்றிலும் ஆட்சியாளர்கள் கருணையே இல்லாமல் கொள்ளையடித்துள்ளனர்.



Tags : Mega corruption in free goat, cow, chicken scheme: multi-crore roll in drug purchases: money in this hand; ghost as position in that hand
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...