பிங்க் போலிங்...

நன்றி குங்குமம் தோழி

ஜனநாயக திருவிழா எனப்படும் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் வாக்களிப்பது 18 வயது நிரம்பிய அனைவரது கடமையாகும்.  நிச்சயமாக நீங்கள் தேர்தலில் ஓட்டு போடுங்கள். இந்த தேர்தலில் பல இளம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே அவர்கள் நாட்டுக்கு  உற்சாகமாக பணியாற்ற உங்களது ஒவ்வொரு ஓட்டும் மிக அவசியம்.மக்களவை தேர்தல்  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  கடந்த 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2ம் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல்  18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.  இதில் முதல்முறையாக பெண்களுக்கு என தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ள  பகுதிகளில், பெண்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், குறைவான வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்த்தே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதுதவிர,  பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் காவலர்கள், அலுவலர்கள், முகவர்கள் என  அனைவரும் பெண்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய ‘அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள்’ உருவாக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை  அடையாளம் காண்பது எளிது. ஏனெனில் அந்த வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக பிங்க் நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அங்கு  பணியாற்றும் பெண் ஊழியர்களும் பிங்க் நிறத்தில் உடை அணிந்திருப்பார்கள் என்பது தான் அதன் சிறப்பு.

சட்டீஸ்கரில் நக்சலைட் அதிகமுள்ள பகுதிகளில் பெண்கள் அதிகம் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. அதை போக்கும்  வகையில் பெண்கள் வாக்குச் சதவீதத்தை அதிகரிக்கவும் பிங்க் பூத்களை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியது. இதில் முழுக்க முழுக்க பெண்  பணியாளர்கள், காவலர்கள் பணியாற்றுவார்கள் என்பதால் பெண் வாக்காளர்கள் அதிகளவு தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இந்த பூத்களில்  ஆண்களும் வாக்களிக்கலாம். மிசோரமிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் பேர் ஓட்டுபோடுவதில்லை. இதை போக்க பிங்க் வாக்குச்சாவடிகள்  சமீபத்தில் அங்கு  தேர்தல் நடைபெற்ற போது அமைக்கப்பட்டன. இதையடுத்து வாக்குப் பதிவு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 18ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலில் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் அனைத்து மகளிர்  வாக்குச்சாவடி ஒன்றாவது அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கையை  அதிகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்சத்திரத்தில் இந்த பிங்க் பூத் அமைக்கப்பட உள்ளது என்பது சிறப்பு செய்தி.

-கோமதி பாஸ்கரன்

Related Stories: