அரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி!

நன்றி குங்குமம் தோழி

கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ பள்ளி, காரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி, வில்லிவாக்கம் குட்வில் பள்ளி போன்ற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு சின்ன பெட்டி இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது மருத்துவ உதவி பெட்டியோ அல்லது புகார் பெட்டியோ கிடையாது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாயின் போது பயன்படுத்தப்படும் நாப்கின்கள் அடங்கிய பெட்டிதான் அது.

அரசுப் பள்ளிகளில் அனைத்திலும் இது போன்ற நாப்கின் பெட்டிகளை இலவசமாக வழங்கி வருகிறது ‘ஜியோ இந்தியா அறக்கட்டளை’ என்ற அமைப்பு. கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் முதல் இந்த தொண்டினை செய்ய துவங்கியுள்ளது. இந்த அமைப்பினை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரியா ஜமீமா நிர்வகித்து வருகிறார்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பிரியா ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி எம்.பி.ஏ வரை படித்துள்ளார். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் படிப்பையும் முடித்துள்ள பிரியா, பிரபல ஐ.டி நிறுவனத்தில் மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நல்ல நிலையில் வேலைப் பார்த்து வந்தார். தனது வேலையை ராஜினாமா செய்தவர் முழுமூச்சாக இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதுவரை சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியான செய்யூர் வரை இந்த சேவையை தன் தொண்டு நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு சென்று தலா 1500 நாப்கின்களை வைக்கிறார்கள். மேலும் பயன்படுத்திய நாப்கின்களை புகை வராமல் எரிக்கும் இயந்திரத்தையும் பள்ளிகளில் அமைத்துள்ளார். இதன் மூலம் 15 நிமிடங்களில் பயன்படுத்தப்பட்ட 100 நாப்கின்களை எரிக்கலாம். சுற்றுப்புறச்சூழல் பாதிக்காது என்கிறார் பிரியா.

பள்ளிகள் மட்டுமின்றி பெண்கள் பணியாற்றும் தொழிற்சாலையிலும் இந்த பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கோவை, பெங்களூர் தவிர புதுக்கோட்டையில் மதுபான ஆலைகளில் வேலை பார்க்கும் 800 பெண்களுக்கும் நாப்கின்களை இலவசமாக கொடுத்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சம் நாப்கின்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக பெருமையுடன் பிரியா தெரிவித்தார்.

இவர்கள் இத்துடன் தங்களின் பணியை நிறுத்திவிடவில்லை. பள்ளிகள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து வருகிறது. வர்தா புயலின்போது வேறோடு சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் இந்திய பாரம்பரிய மரங்களான புங்கை, வேம்பு, பூவரசு மரங்களே நடப்படுகின்றன. இதற்காக இவர்களுக்கு விருகம்பாக்கத்தில் உள்ள ‘முல்லைவனம் ட்ரி பேங்க்’ என்ற அமைப்பு 10 ஆயிரம் மரங்கன்றுகளை இலவசமாக வழங்கிஉள்ளது.

ஜியோ இந்தியா பவுண்டேசன் அமைப்பு தொடங்கி இந்த ஐந்தாண்டுகளிலும் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஏரிகளை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வசதியற்றவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்கான உதவியும்

செய்கிறார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறையை கொண்டாடும் வகையில் இம்மாதம் 2ம் தேதி துணிப்பை நாள் என்று அறிவித்துள்ளனர். பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், துணிப்பையை பயன்படுத்தவும் உறுதி ஏற்கும் வாசகம் பொரிக்கப்பட்டு, 100 மீட்டர் நீளத்திலும் 50 மீட்டர் அகலத்திலும் மெகா துணிப்பையை உருவாக்கியுள்ளனர். மெகா துணிப்பையை தமிழகம் முழுதும் பயணம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெறவும்

திட்டமிட்டுள்ளனர்.

கோமதி பாஸ்கரன்

Related Stories: