பெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்

நன்றி குங்குமம் தோழி

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம் என்ற விவாதம் மாணவ, மாணவிகள் இடையே மட்டுமின்றி பெற்றோர்களிடையேயும் அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் அறிவியல் படித்தவர்கள் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ் மட்டுமே படிப்பு என நினைக்கிறார்கள். அதையும் தாண்டி பரந்து விரிந்து கிடக்கிறது பல்வேறு படிப்புகள் என்கிறார் சென்னை ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் முகமது சாலே கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் உமா.

கட்டிடக்கலையில் எம்.ஆர்க் முடித்துள்ள உமா சென்னை சத்யபாமா கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் 15 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2017ல் ஆலிம் கல்லூரியில் முதல்வராக சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் இவர் சென்னை, கே.கே நகரில் வசித்து வருகிறார்.

பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு சிறந்த படிப்பு எது?

முன்பு ஆசிரியை பணிதான் சிறந்தது என்ற கருத்து நிலவியது. உண்மையில் பிளஸ் 2வில் கணிதம் படித்த, மாணவிகள் இன்ஜினியரிங்குடன் தொடர்புடைய கட்டிடக்கலை படிப்பான பி.ஆர்க்கை தேர்வு செய்யலாம். நான் அண்ணா பல்கலையில் படித்த காலத்திலேயே எனது வகுப்பில் 15 மாணவர்களும் 9 மாணவிகளும்  படித்தனர்.  ஏசி அறையில் அமர்ந்து வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் பெண்களுக்கு ஏற்றது என்பதால் இதற்கு எப்போதும் மவுசு உண்டு. சுருக்கமாக சொன்னால் ரியல் எஸ்டேட் என்ற வார்த்தை உள்ளவரை இந்த படிப்பு என்றென்றும் மக்களின்  விருப்ப

பாடமாகவே இருக்கும்.

பி.ஆர்க்கில் சேர என்ன தகுதி வேண்டும்?

பிளஸ்2வில் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து 50 சதவீத மதிப் பெண்ணுக்கு குறையாமல் பெற்று தேர்வு செய்திருப்பது அவசியம். தற்போது கணிதத்துடன் வேதியியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வும் மிக அவசியம். நேட்டா எனப்படும் தேசிய ஆப்டிடியூட் டெஸ்ட் ஆப் ஆர்க்கிடெக்சர்  தேர்வில் வெற்றி பெற்றால் தான் இந்த படிப்பில் சேரமுடியும். இதற்கான தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14ல் ஒரு தேர்வு முடிந்துவிட்டது. வரும் ஜூலை 7ல் மற்றொரு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றால் நிச்சயம் பி.ஆர்க்கில் சேரலாம்.

பி.ஆர்க், பி.இ.சிவிலுக்கும் என்ன வித்தியாசம்?

பி.ஆர்க் பட்டப்படிப்பு 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். கடைசி ஆண்டில் செய்முறை தேர்வு மற்றும் புராஜக்ட் பயிற்சி பெறவேண்டும். ஆனால் சிவில் 4 ஆண்டு படிப்பு தான். அடிப்படையில் இரு படிப்புக்கும் வேறுபாடு உள்ளது. சிவில் இன்ஜினியரிங் படித்தால் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வெயிலில் காயும் நிலை ஏற்படலாம். ஆனால் பி.ஆர்க் படித்தால் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பணி செய்யலாம்.

பி.ஆர்க் படிப்பு பற்றி கூறுங்களேன்?

பி.ஆர்க் கட்டிட உள்கட்டமைப்பு தொடர்பான படிப்பாகும். இதில் கட்டிட வரைபடம் தயாரிப்புடன், வீட்டில் எங்கு தோட்டம் அமைக்கலாம், வீட்டின் எலக்ட்ரிக்கல் அமைப்பு எவ்வாறு நிறுவுவது, பிளம்பர் பணிகள் குறித்தும் சொல்லித்தரப்படுகிறது. இந்த படிப்பை முடித்ததும் டெல்லியில் உள்ள ஆர்க்கிடெக்ட் கவுன்சிலில் பதிவு செய்தால் தான் வேலை

வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள் இதை அதிகம் தேர்வு செய்வது ஏன்?

உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது என்பதுடன்  சிவில் இன்ஜினியர்கள் போல் ஓடி ஆடி  கட்டுமான இடங்களுக்கு செல்லவேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடி அதிக சம்பளம் பெறலாம். சொல்லப்போனால் வீடுகட்டும் குடும்பத்தில் ஒருவராக பழகி அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப வரைபடங்கள் தயாரிப்பது, வீட்டில் எத்தனை பேர் உள்ளனர்.

அதில் முதியோர் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் ஏறி இறங்க முடியாது என்பதால்  கீழ்தளத்தில் அறை அமைப்பது, கட்டில் அருகேயே ஃபேன், பல்பு சுவிட்சுகளை அமைப்பது போன்றவற்றையும் தேர்வு செய்யவேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் சைவம் மற்றும் அசைவத்துக்கு என தனித்தனி சமையலறை கட்டுவதும் இந்த படிப்பின் ஒருபகுதி.

சி.எம்.டி.ஏ அப்ரூவலில் பி.ஆர்க் படித்தவர்கள் கையெழுத்திட வேண்டுமா?

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம்  அடியோடு சரிந்ததை அடுத்து கட்டிடக்கலை பட்டம் பெற்றவர்களிடமும் கட்டிடம் கட்ட கையெழுத்து பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த படிப்பு படித்தவர்களின் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

கோமதி பாஸ்கரன்

Related Stories: