நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட பெருங்கேடு தமிழகம் பக்கம் தலை வைக்கவே அச்சம் ஊழல் மலிந்ததால் நிறுவனங்கள் தயக்கம்: ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த முதலீடு; வேலை வாய்ப்புக்கு வைத்தது வேட்டு

‘‘எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்.. காண்பதில் எல்லாம் ஊழல்...இனி ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்பதால் கிடைத்தவரை சுருட்ட தொழில் நிறுவனங்களை குறி வைக்கும் ஆட்சியாளர்கள். தமிழகத்தில் இனியும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கூட்டம் அரக்கத்தனமாக ஊழல் செய்து குவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழகம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’’. தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் வெளியேற முடிவு செய்தபோது, அதிமுக அரசுக்கு எதிராக இப்படி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவர், தற்போது அதே அணியில் ‘இடஒதுக்கீட்டுக்காக’ அத்தனையையும் சமரசம் செய்து கொண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்தான்.

கியா மோட்டார்ஸ் மட்டுமல்ல, தமிழகத்துக்கு வந்திருக்க வேண்டிய எத்தனையோ தொழில் முதலீடுகள், நிறுவனங்கள் ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு சென்று விட்டன. கரப்ஷன், கமிஷன் காரணமாக ‘இனி இந்தப்பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது’ என்ற மனநிலையை முதலீட்டாளர்களிடம் ஆழமாக பதியவைத்து விட்டது அதிமுக அரசு. தேசிய முதலீட்டு மேம்பாட்டு ஏஜென்சி வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் தொழில்துறை உற்பத்திக்கான மிகச்சிறந்த இடமாக ஸ்ரீசிட்டி’ உள்ளது எனகூறியிருந்தது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய தொழில்பூங்காவாக திகழும் ஸ்ரீசிட்டியில் 27 நாடுகளில் இருந்து சுமார் 187 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

சென்னை-திருப்பதி -நெல்லூர் தொழிற்சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி, மும்பை - அவுரங்காபாத் - புனே, குருக்கிராம் - பிவண்டி - நீம்ரானா, நொய்டா - கிரேட்டர்நொய்டா, யமுனா விரைவுச்சாலை தொழிற்சாலை வழித்தடங்களை விடவும் முதலீட்டில் முதலிடத்தில் உள்ளது. சென்னை - பெங்களூரு தொழிற்சாலை வழித்தடம் மற்றும் விசாகபட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்துக்கு மத்தியில் இருப்பது உப காரணமாக இருந்தாலும், இங்கு தொழிற்சாலை துவங்க ஆட்சியாளர்களுக்கு மிக அதிகமாக கப்பம் கட்ட வேண்டியுள்ளது என்பதை தொழில்துறையினரே பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர்.

2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க சுமார் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் முன் வந்திருப்பதாகவும், இவை தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் கூட, ஒப்பந்தத்தில் 10 சதவீதம் கூட முதலீடு செய்யப்படவில்லை. பின்னர் சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அரசின் சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால்,செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படவே இல்லை.

இதேபோல்தான் இசுசு மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை நிறுவ முடிவு செய்தது. இங்கு டிரக்குகளை உற்பத்தி செய்து தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. தமிழகத்தில் ஸ்ரீ பெரும்புதூர் - ஒரகடம் பகுதியில் இதற்கான இடத்தை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் இங்கிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில்தான் இடம் தேர்வு செய்தது.  இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஸ்ரீசிட்டியை தேர்வு செய்ய காரணம், அங்கிருந்த நவீன வசதிகள், எளிதான சரக்கு போக்குவரத்து, ஆந்திர அரசின் சலுகை, மானியங்கள் ஆகியவையும் முக்கிய காரணம். தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், தொழில் முதலீடு அதிகரித்து வருவதாகவும் கூறி வருகிறது. ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படியும் ஆந்திராவை விட தமிழகம் பின்னடைந்தே காரணப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

தொழில்துறை தொழில் முனைவோர் குறிப்பாணையில் உள்ள விவரங்களின்படி, கடந்த 2019-20ல் ஆந்திர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. அதாவது, ஆந்திராவில் ரூ.18,823 கோடியும், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.9,727 கோடியும் முதலீடு செய்ய நிறுவனங்கள் உறுதி அளித்து, இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு 2019ல் ரூ.8,562 கோடியும், 2019-20ம் ஆண்டு டிசம்பர் வரை ரூ.6,807 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்ததாக தெலங்கானாவில் 2019ம் ஆண்டு ரூ.5,432 கோடியும், 2020ல் ரூ.7,392 கோடியும் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் அடிப்படையில், ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டில் மொத்தம் ரூ.34,696 கோடியும், 2020ம் ஆண்டு ரூ.9,840 கோடியும் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இது தமிழகம் மற்றும் தெலங்கானாவை விட அதிகம் என ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் 2019ம் ஆண்டு ரூ.7,364 கோடியும், 2020ல் ரூ.6,057 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் 2019ம் ஆண்டில் ரூ.2,860 கோடியும், 2020ல் ரூ.1,184 கோடியும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஆந்திரா துவக்கத்தில் இருந்தே முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை முதலீட்டாளர்கள் சந்திப்பது எளிதாக உள்ளது. பிற மாநிலங்களை விட இங்கு இடத்தின் விலை சுமார் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைவாக உள்ளது. சில நிறுவனங்களுக்கு இலவசமாகவே நிலம் கிடைத்து விடுகிறது. உதாரணமாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இடம் ஏறக்குறைய இலவசமாகவே வழங்கப்பட்டது. 24 மணி நேர மின்சப்ளை, குறைந்த மின் கட்டணம் ஆகியவை இந்த நகரின் பக்கம் நிறுவனங்கள் நகர முக்கிய காரணங்கள். இசுசு மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா (டிராக்டர் பிரிவு), ஹீரோ மோட்டார்ஸ் ஆகியவை தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்திருந்தன. ஆனால், இவற்றின் முதலீடுகள் அப்படியே ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்து விட்டன.

ஹீரோ மோட்டார்சுக்கு 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ‘இலவச இடம்’ சலுகையால் ஆந்திராவுக்கு நகர்ந்து விட்டது ஹீரோ மோட்டார்ஸ். ஆந்திராவை ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்ற நாயுடு எடுத்த தீவிர முயற்சிகளாலும், முதலீட்டை ஈர்ப்பதில் தமிழக அரசு காட்டிய மந்த நிலை மற்றும் அலட்சியத்தாலும் தொழிற்சாலைகள் தமிழகத்தின் பக்கம் தலைவைத்து படுக்கவில்லை. இதேபோல்தான், ஜப்பானை சேர்ந்த இசுசு மோட்டார்ஸ் நிறுவனமும் ஆந்திராவை தேர்வு செய்தது. சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள், போக்குவரத்துக்கு ஏற்ற சாலை வசதிகள் காரணமாக இந்த இடத்தை தேர்வு செய்ததாக இசுசு மோட்டார்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதோடு, வரிச்சலுகைகளையும் ஆந்திர அரசு தாராளமாக வழங்கியது.இந்த நிறுவனம் தமிழகத்துக்கு வராததற்கு ஒற்றை காரணம், ‘மாநில நிர்வாகத்தை எங்களால் அணுகவே முடியவில்லை’ என்பதுதான். தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்ததாகவும், அதற்கான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அரசு சார்பில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி வந்தன. ஆனால், உண்மையில் அவை முதலீடாக மாறியது அதை விட மிகவும் குறைவுதான் எனவும், பல துவக்க நிலையிலேயே நின்று போனதாகவும் அரசு அதிகாரிகள் மற்றும் விவரம் அறிந்த தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்ததால், ‘சபாஷ்!’ என ரேங்க் வாங்கி சாதித்த தமிழகத்துக்கு, தொழில்துறைக்கு ஏற்ப சலுகைகள், அறிவிப்புகள் என வளைந்து கொடுக்க மனம் வராததால் பல நிறுவனங்களின் தமிழக முதலீட்டு நோக்கம் பாதியிலேயே சிதைந்து ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களை நோக்கி செல்ல துவங்கி விட்டன என தொழில்துறையை சேர்ந்த பலர் குமுறுகின்றனர். இது தொழில்துறையினரின் குமுறல் மட்டுமல்ல... வேலை இழந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை தொலைத்த இளைஞர்கள், குடும்பத்தினரின் குமுறலாகவும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

* ஆட்சி மாறியதும் சரிவை சந்தித்த மாநில ஜிடிபி வளர்ச்சி விகிதம்

திமுக ஆட்சியில் மாநில ஜிடிபி வளர்ச்சி சரிவில்இருந்து மீண்டது. ஆனால், அடுத்ததாக அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சில ஆண்டுகளிலேயே வளர்ச்சி சரிந்தது. திமுக ஆட்சியில் வளர்ச்சி 10.36% வரை, அதிமுக ஆட்சிக்கு வந்த ஒரு சில ஆண்டிலேயே 4.61% ஆக குறைந்தது.

* கவனிப்பால் திணறும் காட்டன் நகரம்

கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் மிக அதிகம். பல ஆயிரம் பேருக்கு இங்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், வளர்ச்சி போதுமான அளவுக்கு அடைய இயலவில்லை. ஏனெனில், தொழில்துறையை விரிவுபடுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களை சமாளிப்பதே பெரும் பிரச்னை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்குதான் அதிக கவனம் செலுத்தினார்கள். தொழில்துறை பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அதன்பிறகு புதிய தலைமைகள் உருவானாலும், அதிகாரத்தை பிடிக்கும் மோதலிலும், ஆட்சியை தக்க வைக்க மேற்கொண்ட சமரசங்களாலும் காட்டன் நகரம் கந்தல் துணிபோல ஆகிவிட்டது என தொழில்துறையினர் பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

* ஆந்திராவில் அதிக ஒப்பந்தம் தமிழகத்தில் ‘கமிஷன்’ நிர்பந்தம்

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, சீன நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய ஒரே நாளில் 29 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆனால், தமிழகத்தில் கற்பனை செய்து பார்க்கவே முடியாத நிலை உருவானது.காரணம், ஒற்றை தலைமையின் கீழ் முடிவு எடுப்பது என்பது இங்கு கிடையாது என்கின்றனர் தொழில்துறையினர். ஆளாளுக்கு ஒரு முடிவு எடுப்பதாலும், தொட்டதற்கெல்லாம் ‘கமிஷன்’ கேட்டு நிர்ப்பந்தம் செய்வதாலும்தான் இந்த அவலநிலை.முதலீடு செய்ய வேண்டிய தொகையில் கணிசமான தொகை கமிஷன் என்ற பெயரில் மிரட்டிப் பறிக்கப்படுகிறது. அப்புறம் எதை வைத்து முதலீடு செய்வது என அங்கலாய்க்கின்றனர் தொழில்துறையினர்.

* ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மகிந்திரா சிட்டி மற்றும் சென்னை, சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலத்தின் விலையை விட ஸ்ரீசிட்டியில் நிலத்தின் விலை சுமார்  50 முதல் 75 சதவீதம் குறைவு.

* தேசிய நெடுஞ்சாலை 5ல் அமைந்துள்ள ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னை மற்றும் திருப்பதி விமான நிலையத்துக்கு வருவது எளிது. கிருஷ்ணாபட்டினம், எண்ணூர், மற்றும் சென்னை துறைமுகங்களை சில மணிநேர பயணத்தில் அடைந்து விட முடியும்.

* ரயில் மூலமான போக்குவரத்துக்கும் எளிதான வகையில் ஸ்ரீசிட்டி அமைந்துள்ளது.

* ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் மின்கட்டணம் தமிழகத்தைவிட குறைவு. தடையற்ற மின் சப்ளையும் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில் மின்வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

* பாலத்தை நிறுத்திட்டீங்க முன்னேற்றப்பாதையை அடைச்சுட்டீங்க

ஏற்றுமதி இறக்குமதியில் சென்னை துறைமுகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் கன்டெய்னர் போக்குவரத்துக்கு பகல் நேரத்தில் அனுமதி இல்லாததால் சரக்குகளை அனுப்புவதில் சிக்கல் நேர்ந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், அப்போதைய திமுக அரசு, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் அங்கம் வகித்ததால் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை 19 கி.மீ.க்கு மேம்பால சாலை அமைக்க திட்டம் கொண்டு வந்தது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பணிகள் தொடங்கி கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், பின்னர் கூவம் கரையிலும் தூண்கள் அமைக்கப்பட்டன. பின்னர் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி வந்ததும், இந்த திட்டம் முடக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, இந்த திட்டப்பணிகளை தொடர்வோம் என அதிமுக அரசு உறுதி அளித்தது. இன்று வரை அதை செயல்படுத்துவதற்கான அறிகுறியே இல்லை. துறைமுகத்துக்கு சரியான சாலை வசதி இல்லை என்பதும், தமிழகத்தில் முதலீடு செய்யாமல் நிறுவனங்கள் நழுவ இதுவும் ஒரு காரணம். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பாலப்பணியை நிறுத்தி, தமிழகத்துக்கான முன்னேற்ற பாதையையே அடைத்து விட்டது தமிழக அரசு.

* இதுவரை இப்படித்தான்

துவக்கத்தில்தான் தமிழகத்தின் நிலை மோசம் என்று பார்த்தால், சமீபத்திய ஒப்பீடுகளும் ஆந்திராவை விட பின்தங்கியே உள்ளன என்பதற்கு சான்றாக விளங்குகின்றன. 2019 மற்றும் 2020ம் ஆண்டு ஒப்பீடு இதோ:

* பொய் காரணம் கூறலாமா?

கியா மோட்டார்ஸ் தமிழகத்தில் இருங்காட்டுக் கோட்டையில் தொழிற்சாலை அமைக்க இடம் பார்த்துக் கொண்டிருந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அரசுடன் நடைபெற்று வந்த நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்ட அந்த நிறுவனம், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு போக முடிவு எடுத்தது. அதிகார மையம் ஒரே இடத்தில் இல்லாதது, அமைச்சர்கள், அதிகாரிகளை எளிதில் அணுக முடியாதது, கமிஷன் கேட்பது போன்ற காரணங்களால்தான் ஆந்திர மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டியிருந்ததாக நிறுவன தரப்பில் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி நிலத்தின் விலையும் அதிகம் என்பது மற்றொரு காரணம்.

ஆந்திரமாநிலம் ஸ்ரீட்டியில் நிலத்தின் மதிப்பு தமிழகத்தை விட சுமார் 50 முதல் 75 சதவீதம் குறைவு என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹூண்டாய் தமிழகத்தில் உள்ளது. எனவே இங்கு முதலீடு செய்ய வேண்டாம் என்ற கொள்கை முடிவில்தான் அந்த நிறுவனம் ஆந்திராவுக்கு இடம் மாறியது என தமிழக அரசு பதிலளித்தது. நிறுவனத்தின் கொள்கை முடிவு அப்படியிருந்தால், இங்கு பேச்சுவார்த்தையே நடந்திருக்காதே!. இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை விளக்கம் வரவே இல்லை.

* வரி நோட்டீசால் மிரண்டு வெளியேறிய நோக்கியா

நோக்கியா நிறுவனம் வெளியேறியதால் உடனடியாக சுமார் 25,000 பேர் வேலை இழந்தனர். இதன்பிறகு, பல்வேறு நிறுவனங்களும் தமிழகத்தின் பக்கம் தலை வைக்கவே தயங்கினர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் மற்றும்பிஐடி எலக்ட்ரானிக் நிறுவனங்களும் மூடுவதற்கு முடிவு செய்து விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தின. இதனால் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் வேலைஇழந்தனர். கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், தமிழகம் தொழில் வளம் நிறைந்த மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் நோக்கியா நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டது.

பின்னர் ரூ.250 கோடிக்கு தொழிற்சாலையை விரிவாக்க ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை, ரூ.21,000 கோடியும், அதிமுக அரசு 2,400 கோடி விற்பனை வரி கேட்டும் நோட்டீஸ் அனுப்பியதால் ஆலையை மூடிவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது. நோக்கியா மட்டுமல்ல, கடந்த 2013ம்ஆண்டில் மோட்டோரோலா மொபிலிடி நிறுவனம் உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. இந்த நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 76க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது.

Related Stories:

>