×

விட்டாச்சு லீவு

நன்றி குங்குமம் தோழி

ஆண்டு முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வரம். எப்பவும் விளையாடலாம், தூங்கலாம், சாப்பிடலாம், ஊர் சுற்றலாம்,  நினைத்தால் குளிக்கலாம். பள்ளி செல்லும் காலத்தில் கடைப்பிடித்த அத்தனை சட்டங்களும் காணாமல் போயிருக்கும். கொண்டாட்டம் என்னவோ  குழந்தைகளுக்குத்தான். பொதுவாக கோடை விடுமுறையில் தாத்தா, பாட்டி வீடுகளில் தஞ்சம் புகுந்த அனுபவங்கள் இன்றைய காலக்கட்ட  குழந்தைகளுக்கு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக யார் வீட்டுக்கும் அனுப்ப முடியாமல் இவர்கள் பெற்றோர் பராமரிப்பிலேயே உள்ளனர்.

பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை என்ன செய்வது என்ற கேள்வி பெற்றோருக்கும்,
குழந்தைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தமாக மாறிவிடுகிறது. உனக்குத்தான் விடுமுறை எனக்கு இல்லை என்ற புலம்பல் பெற்றோர் மனதிலும்,  உங்களுக்குத்தான் அலுவலகம் எனக்கு லீவ் என்ற ஏக்கம் குழந்தைகள் மனதிலும் மாறி மாறி ஓடுகிறது. இது போன்ற நிலையில் உள்ள  பெற்றோருக்கு விடுமுறையில் பயனுள்ள வகையில் அதே சமயம் குழந்தைகளுக்கு குதூகலம் அளிக்கும் வகையிலும் செலவளிப்பது பற்றி  விளக்குகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் சுகன்யா.

பெற்றோருக்கான செக் நோட்
நீங்கள் எவ்வளவு பிசியானவராக இருந்தாலும் உங்கள் குழந்தை கோடை விடுமுறையில் மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது.  பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இடங்களில் இருவரும் பேலன்ஸ்டாக குழந்தையுடன் இருக்கும் நேரத்தைத் திட்டமிட வேண்டும். ஒருவர்  மீது மட்டுமே பொறுப்பை சுமத்துவது குழந்தைகளுக்கு சலிப்புத் தட்டும். அனைவரும் இணைந்து அவுட்டிங் செல்ல வார விடுமுறை நாட்களில்  திட்டமிடலாம். பெற்றோரும் ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு நீண்ட பயணங்களுக்குத் திட்டமிடலாம்.

விடுமுறை வகுப்புகள்
விடுமுறை நாட்களிலும் படிப்பு தொடர்பான சிறப்பு வகுப்பு என பெற்றோர் ஆசைக்கு அவர்களை மறுபடியும் டியூஷன் அனுப்புவதைத் தவிர்க்கவும்.  விடுமுறை வகுப்புகள் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு, நீச்சல் போன்ற பயிற்சிகள், கூடுதல் திறனை விரும்பிச் செய்வதற்கான சூழலும்  இருக்க வேண்டும். கற்றுக் கொள்ளாமலேயே உங்களது குழந்தை கிராப்ட், ஓவியம், நடனம், பாட்டு என்று எதிலாவது ஆர்வமாக இருக்கலாம்.  வாரத்தில் சில நாட்கள் இது போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளுக்கு அனுப்பலாம். எந்த பயிற்சிக்கு செல்வது என்ற  முடிவினை குழந்தைகள் கைகளில் ஒப்படைத்து விடுங்கள்.

டயட் டியூனிங்
உங்களது குழந்தை ஒல்லி யாகவோ, குண்டாகவோ இருக்கலாம். அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். கோடை  காலத்துக்கு ஏற்ற உணவாகத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் நாட்களில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம்.  அவர்களது உணவுத் திட்டத்தை சரி செய்வதற்கு இது சரியான காலகட்டம். சத்தான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் கொடுக்கலாம். காலை எழுவது,  உணவுக்கான நேரத்தை முறைப்படுத்தலாம். வெயில் காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். பார்த்துப் பார்த்து உணவு  கொடுங்கள்.

இஷ்டம் போல விளையாடு
கோடைக்கால விடுமுறையில் குழந்தைகள் வியர்க்க வியர்க்க விளையாடலாம். ஆன்லைனில் இருப்பது, வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம்  செலவளிப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான விளையாட்டுகளுக்கு பதிலாக குழந்தைகள் குழுவாக இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்புக்கள்  அவசியம். அவர்களாகவே புதிய விளையாட்டுகளை உருவாக்கி விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான  வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கலாம். புதிய புதிய விளையாட்டுகள் அவர்களின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்துகிறது.

உறவுகள் அறிமுகம்

ஒற்றைக் குழந்தை, பிசியான பெற்றோர் என்ற நியூக்ளியர் வாழ்க்கை முறையில் உறவினர்களே குழந்தைகளுக்கு நினைவிருக்க மாட்டார்கள்.  இவர்களது வயது ஒத்த உறவுக் குழந்தைகளின் அறிமுகமும் குறைவாகவே இருக்கும். இந்த விடுமுறைக் காலத்தில் உறவுகளின் விசேஷங்களுக்கு  தாராளமாக குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள். உறவுகளை அறிமுகம் செய்யவும் இது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்  உறவினர்களைப் பார்க்கவும், பாதுகாப்பான சூழலில் உறவினர் வீடுகளில் உங்கள் குழந்தைகள் சில நாட்கள் இருக்கவும் அனுமதிக்கலாம். புதிய சூழல்,  புதிய நண்பர்களும் அவர்களை உற்சாகப்படுத்தும்.

வாசிப்பை வசப்படுத்தலாம்
உங்கள் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள். பிடித்த கதைகள் வாசிப்பது, கவிதை என இந்தக்  காலகட்டத்தில் ரசனைக்கு ஏற்ப வாசிக்க நேரம் ஒதுக்குவது நல்லது. நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் அவர்களது நடத்தையை  வடிவமைக்கிறது. கதைப் புத்தகங்கள் அவர்களின் கற்பனைக்கு சிறகு கட்டுகிறது. குட்டிக் கதைகளை அவர்களைச் சொல்ல வைத்தும் பதிவு  செய்யுங்கள். விடுமுறை ஒரு வரலாறாகக் கூட மாறலாம்.

பெட்ஸ் வளர்க்கலாம்
ஒரு சில குழந்தைகளுக்கு நாய், பூனை, முயல் போன்ற பெட் அனிமல்ஸ் வளர்க்கப் பிடிக்கும். பள்ளிக்காலத்தில் இதற்கு நேரமில்லாமல்  போயிருக்கலாம். அப்படி விரும்பும் குழந்தைகள் பெட்ஸ் வளர்க்க கோடை விடுமுறை ஏற்றது. குழந்தைகள் தனிமையை உணரமாட்டார்கள். அவர்கள்  ஜாலியாக விடுமுறையைக் கழிக்க பெட்ஸ் துணை அவசியமாகும். குழந்தைகளின் மன அழுத்தம் தவிர்ப்பதுடன் பெற்றோருக்கும், குழந்தைக்கும்  இடையிலான மகிழ்வையும், புரிதலையும் அதிகரிக்கும். பெட்ஸ் பராமரிப்பில் குழந்தைகள் நேரம் செலவளிக்க உதவும்.

இயற்கையோடு கரம் கோர்க்கலாம்

இயற்கையோடு இணைந்து மகிழ்ந்திட இந்த விடுமுறை உதவும். இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த இடங்களுக்குக் குழந்தைகளுடன் பயணிக்கலாம்.  உங்களது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள தோட்டம், சுற்றுலா இடங்கள், அருவி, குளம் என்று நாள் முழுக்கத் தண்ணீரில் நனைந்து கொண்டாட  வாய்ப்பளிக்கலாம். இதன் தொடர்ச்சியாக சிறிய அளவில் வீட்டில் தொட்டிச் செடிகள் வளர்க்கப் பழக்கப்படுத்தலாம். வீட்டுத் தோட்டம், சமையலுக்கான  காய்கறி வளர்ப்பும் கற்றுக் கொடுக்கலாம்.

வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்து கொடுக்கலாம்
பெரும்பாலான வீடுகளில் வீட்டின் மொத்தப் பொறுப்பும் அம்மாவின் தலையில் சுமத்தப்படும். குழந்தைகளோ, கணவரோ எந்த வேலையும்  செய்வதில்லை. வீட்டில் உள்ள அனைவரிடமும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்கும் விதமாக துணிகளை மடித்து வைப்பது, பொருட்களை அடுக்கி  வைப்பது, கழிவறை சுத்தம் செய்வது என வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம். சமையலின் போது  குழந்தைகளுக்குப் பிடித்த உணவுப் பண்டங்கள் தயாரிக்க உதவிக்கு அவர்களையும் உடன் அழைத்துக் கொள்ளலாம். இது சமைப்பதையும் அவர்கள்  கற்றுக் கொள்ள வாய்ப்பாகும். ருசித்தும் ரசித்தும் சாப்பிட ஆரோக்கியம் பெருகும்.

பாதுகாப்பை கற்பிக்கலாம்
வளர் இளம் பருவத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். இதற்கான  ஆலோசகரிடம் அனுப்பியும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இன்றைய குழந்தைகள் செல்போன், கணினியை  அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றை கிரியேட்டிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தப் பயிற்சி கொடுக்கலாம். இவற்றை தனது  பாதுகாப்புக்காக எப்படிப் பயன்படுத்த முடியும் என்ற தெளிவையும் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தலாம்.

வித்தியாசமாக யோசிக்கலாம்
விடுமுறை முழுவதும்  ஒரே மாதிரியான விஷயத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தாமல் வித்தியாசமாக யோசிக்கலாம். மொத்த விடுமுறை  நாட்களையும் எடுத்து  வைத்து எந்தெந்த நாட்களில் என்னென்ன செய்யலாம் எனத் திட்டமிடலாம். பயணங்கள், பகிர்வுகள், புரிதல், கற்றல்,  கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களும் நிறைந்த விடுமுறையாக  குழந்தைகளுக்கு இது அமையும். பெற்றோருக்கும் நிறைவைத் தரும்.

-யாழ் ஸ்ரீதேவி

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்