×

விருது பெற்ற வீட்டுத்தோட்டம்!

நன்றி குங்குமம் தோழி

பழைய டயர், கிழிந்த ஷூ, பிளாஸ்டிக் பாட்டில், ஒடிந்த மூங்கில் கம்புகள் என எது கிடைத்தாலும் அந்த பெண்மணி அதை விட்டு வைப்பதில்லை.  அதில் சிறிது மண் போட்டு அழகான செடிகளை வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்.கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள கல்யாண்கிரி பகுதியில் வசித்து  வருகிறார் ஹஸ்மத் பாத்திமா. இவர் வீட்டில் திரும்பும் திசையெல்லாம் பூஞ்செடிகள், வண்ண வண்ண பூக்கள், விதவிதமான தாவரங்களை  காணமுடிகிறது.

அவர் வீட்டில் எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்று கண்களுக்கு விருந்தளிக்கிறது. மைசூரில் தசரா திருவிழா மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகை. ஊரே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் துள்ளல் போட்டுக் கொண்டிருக்கும். பாத்திமாவும் தசரா பண்டிகை  வந்துவிட்டால் குதூகலமடைந்துவிடுவார். ஒவ்வொரு தசரா பண்டிகைக்கும் அவரின் வீட்டுத் தோட்டத்திற்கு விருது கிடைப்பது தான் காரணம். தசரா  பண்டிகையின் போது மைசூர் தோட்டக்கலை சங்கம் ‘ஹோம் கார்டன் சீரீஸ்’ என்ற தலைப்பில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். அதில் சிறந்த  தோட்டத்துக்கு அவர்கள் விருதினை வழங்கி வந்துள்ளனர்.

30 வருடமாக செடிகளை பராமரித்து வரும் பாத்திமா இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு இதுவரை 11 முறை தன் வீட்டுத்தோட்டத்துக்கான  விருதினை பெற்றுள்ளார். 40 வகையான பூஞ்செடிகளை, 800 பானைகளில் என வீட்டையே இயற்கையான மலர் கண்காட்சியாக மாற்றி  அமைத்துள்ளார் பாத்திமா. வீட்டில் சுவற்றையும் அவர் விட்டு வைக்கவில்லை. அங்கும்  பிளாஸ்டிக் பாட்டில்களை நேர்த்தியாக தொங்க விட்டு  செடிகளை வளர்த்துள்ளார். மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலைக் கூட  அழகான பூந்தொட்டியாக அமைத்துள்ளார். செம்பருத்தி பூ, சாமந்தி,  சூரியகாந்தி பூ, தாக்லியா, டெய்சி, பெகோனியா என நூற்றுக்கணக்கான மலர்கள், இவர் வீட்டின் சுவற்றில் பூத்துக்குலுங்கும் பூக்கள் அனைத்தும் நம்  கண்களுக்கு விருந்து படைக்கின்றன. செடிகள் மீது சிறுவயதில் கொண்ட ஆர்வம் தான் அவரை செடிகளை வளர்க்க தூண்டியுள்ளது.

பரந்து விரிந்துள்ள அவரது வீட்டில் அவர் வசிக்கும் இடத்தின் அளவு 40 அடிக்கு 70 அடி மட்டும்தான். மற்ற இடங்களை எல்லாம் பூஞ்செடிகள்,  மலர்க்கொத்துகள், கொடிகள் அலங்கரிக்கின்றன. இது தவிர குட்டைகள் அமைத்து அதில் மீன்களையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டை சுற்றி  பார்க்கவே தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பாத்திமா, தோட்டக்கலை குறித்து  சிறப்பு பட்டமோ பயிற்சியோ எடுத்துக் கொண்டதில்லை. செடிகள் மேல் உள்ள ஆர்வம்தான் அதை வளர்க்க தூண்டியது மட்டும் இல்லாமல், அதன்  பராமரிப்பு குறித்தும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. வீட்டு தோட்டத்திற்கு நீர் ஊற்றுவது, வளர்ச்சி அடைந்த தாவர பாகங்களை வெட்டி  அழகுபடுத்துவது, மண்ணில் புதிய விதைகளை ஊன்றி செடிகளை பதியம்போடுவது என தினமும் 4 மணிநேரம் தன் குழந்தைகளான செடிகளுடன்  நேரம் செலவிடுகிறார்.

கோமதி பாஸ்கரன்

Tags : home garden ,
× RELATED காரைக்குடி அருகே வீட்டுத்...