செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

நடிப்புப் பசி தீராத ராட்சசி சுகுமாரி

ஸ்டில்ஸ் ஞானம்

பா.ஜீவசுந்தரி -55

நளினமான அழகு கொஞ்சும் முகம். பெரும்பாலும் நாட்டிய நடிகையாக பல படங்களில் எழிலார்ந்த நடனம் ஆடியவர். நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதை விட்டு விடாமல் தன் நடனம் மற்றும் நடிப்புத் தொழில் ஒன்றே வாழ்வில் பிரதானம் என்ற முனைப்புடன் நின்று சாதித்துக் காட்டியவர்.50கள் தொடங்கி தன் இறுதிக்காலம் வரை பெரும் நட்சத்திரப் பட்டாளங்களை இயக்கி பெரும் புகழ் பெற்ற இயக்குநரின் மனைவி என்றபோதும் எந்த ஒளிவட்டமும் தன் தலையைச் சுற்றிச் சுழல விடாமல் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம், சிங்கள மொழிப் படம் உட்பட 2500 படங்களுக்கு மேல் தன் வாழ்நாள் முழுதும் ஆடியும் நடித்தும் தீர்த்தவர். ‘மலையாளத்து மனோரமா’ என சுட்டப்பட்டவர். தமிழகத்தில் மனோரமா ஆச்சி என்றால், இவரோ கேரளத்தின் சேச்சி. இருவருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு. எல்லோருக்கும் நல்லவராக இருப்பதிலும் இருவரும் ஒருவரே. இருவருமே நடிப்புப் பசி தீராத ராட்சசிகள். இவர்கள் இருவரும் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவு நடித்துக் குவித்தவர்கள். நடிகை சுகுமாரி அத்தகைய சிறப்புகள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர். நம் சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்தவர்.

‘டான்ஸ் ஆஃப் இந்தியா’ (Dance of India) வளர்த்தெடுத்த நடன மங்கை

1940கள் தொடங்கி திருவிதாங்கூர் சகோதரிகள் தங்கள் கலைத் திறனால் செல்லுலாய்ட் திரையை ஒளிர வைத்தார்கள். அவர்களின் குடும்பத்தில் ஒருவராக லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளுடன் சிறு வயது முதல் வளர்த்தெடுக்கப்பட்டவர் சுகுமாரி. பிறந்தது சென்னை ராஜதானியில் உள்ளடங்கிய நாகர்கோவில். தந்தையார் மாதவன் நாயர், தாயார் சத்யபாமா. உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும். தந்தையாருக்கு திருவனந்தபுரம் வங்கியில் பணி. ஓரளவு வசதி வாய்ப்புள்ள குடும்பம். அந்தக் காலத்திலேயே தாயார் சத்யபாமா, காரில் தந்தையை அழைத்துச் சென்று அவர் பணிபுரியும் வங்கியில் டிராப் செய்வாராம். ஊர் முழுதும் அப்போது இது பற்றிய பேச்சாகவே இருந்துள்ளது. இப்போதும் ஒரு பெண் வண்டியோட்டுவது வேடிக்கை பார்க்கும் விஷயமாக இருக்கும்போது 1940களில் அது பெரும் அதிசயம்தான். ஆனாலும் சுகுமாரிக்கு அவர்களுடன் வளரக் கொடுத்து வைக்கவில்லை. மிக இளம் வயதில் பெரிய அத்தை கார்த்தியாயினி அம்மாள் வீட்டில் திருவனந்தபுரம், பூஜாபுராவில் வளர்ந்திருக்கிறார். ஆரம்பப் பள்ளிப் படிப்பும் முதல் இரு வகுப்புகள் வரை அங்குதான். அதன் பின் நடனம் கற்றுக் கொள்வதற்காகவே சென்னைக்கு இளைய அத்தை சரஸ்வதி அம்மாளிடம் வந்து சேர்ந்திருக்கிறார்.

அதன் பின் அத்தை மகள்கள் லலிதா, பத்மினி, ராகினியுடன் சென்னையிலேயே வளர்ந்திருக்கிறார். பள்ளிப் படிப்பும் எட்டாம் வகுப்பு வரை அங்குதான். அதன் பின் முழு நேரமும் நடனப் பயிற்சி. 6 வயதில் தொடங்கிய பயிற்சி வாழ்நாள் பயிற்சியானது. இறுதி வரை சென்னையை அவர் விட்டுப் பிரியவில்லை. திருவாங்கூர் சகோதரிகள் டான்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் நடனக்குழுவைத் தொடங்கி, இந்தியா முழுமையும் பயணங்களை நிகழ்த்தியதுடன் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தத் துவங்கியதால் தொழில்முறையிலும் நடனமே சுகுமாரிக்கு வாய்ப்பானது. லலிதா திருமணத்துக்குப் பின் நடனம், திரைப்படம் இரண்டுக்கும் குட்பை சொல்லி விலகிப் போய் விட்டார். ராகினி நடிப்பு, நடனம், நாடகம் எனத் தொடர்ந்தாலும் மிக இளம் வயதில் புற்றுநோய்க்குப் பலியானார். பத்மினியும் திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லை என முடிவெடுத்தாலும் பின்னர் மனதை மாற்றிக்கொண்டார். பத்மினி இங்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தவரையிலும் சுகுமாரியும் தொடர்ந்தார்.

பிற நாட்டியக்குழுக்களிலும் பங்கேற்றார்

‘புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்’ என்ற நாட்டியக் குழுவை நடிகை ராஜ சுலோசனா 1961ல் துவங்கினார். இக்குழு சென்னை, ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அக்குழுவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நாட்டிய நாடகம் ‘வெங்கடேஸ்வர மகாத்மியம்’. அதில் வெங்கடேஸ்வரனாக சுகுமாரியும் பத்மாவதியாக ராஜசுலோசனாவும் பங்கேற்று ஆடுவது வழக்கம். இக்குழுவின் புகழ் பெற்ற நாட்டிய நாடகம் இது. சுகுமாரியின் பங்களிப்பில்லாமல் அது சாத்தியமாகவில்லை.
அதேபோல் நடிகையும் நடன மணியுமான குசல குமாரியின் நாட்டியக் குழுவிலும் தொடர்ச்சியாகப் பங்கேற்று ஆடியிருக்கிறார். இந்த இரண்டு குழுக்களின் மூலமாகவும் பல்லாயிரம் முறை மேடை ஏறி ஆடியிருக்கிறார். அயல் நாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.  

எதிர்பாராமல் கிடைத்த நடிக்கும் வாய்ப்பு

மூத்த அக்காள் லலிதாவுடன் ‘ஓர் இரவு’ படப்பிடிப்புக்கு துணைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக 10 வயது சிறுமிக்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்து சேர்ந்தது. இயக்குநர் ப.நீலகண்டன் ‘நீயும் ஏதாவது ஆடும்மா’ என்று சொல்ல விளையாட்டாக ஆடியது படத்தில் பதிவானது. சுகுமாரியின் பிஞ்சுப் பாதங்களில் துவங்கி அது வளர்ந்த இளம் மங்கை சுசீலாவின் (லலிதா) பாதங்களாகப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. சுகுமாரி அவர் அறியாமலே தமிழ்ப் படமொன்றின் நடிகையானார்.     அதே போல் கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் நடந்த ஒரு மலையாளப் படப்பிடிப்புக்கு இளைய அக்காள் ராகினியுடன் சென்றபோது சுகுமாரிக்கு வயது 16. அங்கும் அவ்வாறே ஒரு சேலையைக் கட்டி விடப்பட்டு, அந்தப் படத்திலும் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.

பழைய திரைப்படங்களைப் பார்க்க நேரும்போது, அதில் பல படங்களில் சுகுமாரியின் திருத்தமான முகம் தென்படும்போது நமக்குள் ஆச்சரியம் எழும். இவ்வளவு படங்களில் அவர் பங்கேற்றிருக்கிறாரா என்று தோன்றும். அவரது ஆரம்ப காலப் படங்கள் பெரும்பாலும் நாட்டியத்துடன் தொடர்புள்ளவையே. அந்த ஒரு காட்சியுடன் அவரின் பங்களிப்பும் முடிந்து போகும். சுகுமாரி 1950களில் திரைக்கு அறிமுகமாகி இருந்தபோதிலும் பெயர் சொல்லும் அளவிலான வேடங்களை ஏற்பதற்குப் பல ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டி இருந்தது. சிறு வயது முதலே நடனம் அவரது கால்களுக்குப் பழக்கமான ஒன்றாக இருந்ததால், அவருக்கு வாய்த்தவை அனைத்தும் குழு நடனங்களில் ஆடுவது அல்லது பளிச்சென்று முகம் தெரியும் வண்ணம் ஒரு பாடல் காட்சியுடன் அவரது பங்களிப்பு முடிந்து போகும். 1960கள் வரை இந்த நிலைமையே நீடித்தது. ஏனெனில் இயல்பாகவே நாட்டியத்தின் மீது அவருக்கிருந்த பற்று நடிப்பின் மீது இல்லாமல் போனது.  

‘கோமதியின் காதலன்’ படத்தில் ‘அம்பிகாபதி’ நாட்டிய நாடகம் நிகழ்த்தப்படும். அதில் அம்பிகாபதியாக ராகினியும், அமராவதியாக சாவித்திரியும் நடித்திருப்பார்கள். இப்படி ஒரு நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்பதை அறிவித்து ஆடும் கட்டியக்காரனாக சுகுமாரி தோன்றுவார். ‘கல்யாணியின் கணவன்’ படத்தில் சரோஜாதேவி கல்லூரியில் நிகழ்த்தும் ஒரு நாடகமாக இராமாயணத்தின் ஒரு பகுதியான சீதையின் அக்னிப்பிரவேசம் நடத்தப்படும். அதை அறிவிக்கும் மாணவியாகவும் பின்னர் நாடகத்தில் ஸ்ரீராமனாகவும் சுகுமாரியே தோன்றுவார். வேடப் பொருத்தம் அவ்வளவு கச்சிதமாக அவருக்குப் பொருந்திப் போகும். இப்படங்களில் அவரது பங்களிப்பு அவ்வளவே. இது போல் பல படங்களில் அவர் தோன்றியிருக்கிறார்.

அடங்காப்பிடாரி பாத்திரங்களிலும் ஜொலித்தவர்
     
வழக்கமாக இந்தியத் திரைப்படங்களில் இரு விதமான பெண் பாத்திரங்களே கோலோச்சுவார்கள். எல்லாவற்றுக்கும் அடங்கிப் போகும் பதவிசுப் பெண்கள் ஒரு வகையினர் என்றால், அடாவடி, அட்டகாசங்கள் மூலம் பிறரை அடக்கி ஒடுக்கித் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் அடங்காப்பிடாரி வகைப் பெண்கள் இரண்டாவது ரகம். அப்படி ஒரு அடாவடி மாமியாராக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சுகுமாரி. அடாவடி மாமியார் மட்டுமல்ல, அழகான மாமியாரும் கூட. ‘லண்டன் ரிட்டர்ன்’ மகள் கல்பனாவுக்காக (ஜெயலலிதா) சாதியத்திலும் பெண் பற்றிய பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்கும் மருமகன் மூக்கையனை (சிவாஜி கணேசன்) எதிர்க்கும் மாமியாராக அவர் காட்சிப்படுத்தப்பட்டு படம் (பட்டிக்காடா பட்டணமா) ஓஹோ என்று ஓடியது. ரஜினி நடித்த ‘புதுக்கவிதை’ படத்திலும் அதே பாத்திரம்தான்.

இம்மாதிரி அடங்காப்பிடாரி மாமியாராகவே அவர் பல படங்களில் தோன்றியிருக்கிறார். சுகுமாரி மட்டுமல்ல, இப்போதும் பெரும்பான்மை படங்களின் கதை சொல்லல் முறையும் உத்தியும் இவ்வாறாகத்தான் இருக்கிறது. பெண்கள் தரப்பு நியாயங்கள் பெரும்பாலும் பேசப்படுவதேயில்லை என்ற உண்மையும் நம்மை ஓங்கி அறையும். கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நூற்றுக்கு நூறு’ படத்திலும் ஸ்ரீவித்யாவின் அம்மாவாக, மாடர்ன் பெண்ணாகத் தோற்றமளிப்பார். பல மொழிப் படங்களில் நடித்தபோதும் தெலுங்குப் படங்களைத் தவிர்த்து, அனைத்து மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்திருப்பதும் சிறப்பு. மலையாளத் திரைப்படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள் அளவுக்குத் தமிழில் அவருக்கு வாய்க்கவில்லை என்பது சற்றே வருத்தம்தான்.

புகழ் பெற்ற ‘பா வரிசை’ இயக்குநருடன் திருமணம்  

’பொன்னு விளையும் பூமி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் பீம்சிங்குடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. பீம்சிங் ஏற்கனவே இயக்குநர் கிருஷ்ணனின் (கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் முந்தையவர்) சகோதரி சோனா பாயை திருமணம் செய்து அவர்களுக்குக் குழந்தைகளும் இருந்தனர். சோனா பாயின் அனுமதியுடனேயே அவர் சுகுமாரியை மணந்துகொண்டார். இப்போது போல் அல்லாமல், தன் மனைவியான பிறகும் சுகுமாரி நடிப்பையும் நடனத்தையும் தொடர அவர் மறுப்பேதும் சொல்லவில்லை. இவர்களுக்கு சுரேஷ் என்ற ஒரு மகன் உண்டு. அவரும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். தொழில் முறையில் அவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வாராய் என் தோழி வாராயோ

திருமணத்துக்குப் பின்னும் பீம்சிங் தன் படங்களில் பெரிய வாய்ப்பை சுகுமாரிக்கு அளிக்கவில்லை. பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் ஏழெட்டு மாதங்கள் வீட்டில்தான் இருந்தார் சுகுமாரி. ‘பாசமலர்’ படத்துக்கான படப்பிடிப்பின்போது நடிகை சாவித்திரி இயக்குநர் பீம்சிங்கிடம் சுகுமாரியை இப்பாடலில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னதன் பேரிலேயே ‘வாராய் என் தோழி வாராயோ’ பாடலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் சுகுமாரியே அப்பாடலைப் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் சாவித்திரிதான், சுகுமாரியை ‘வாராய் என் தோழி வாராயோ’ என்று கைப்பிடித்து அழைத்து வந்திருக்கிறார். எவர்க்ரீன் பாடலாகவும் இன்று வரை அது தொடர்கிறது. எப்போதும் தொடரும். சிவாஜி கணேசனின் சொந்தத் தயாரிப்பான ‘பந்தபாசம்’ பீம்சிங் இயக்கிய படம். இதில் சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ‘எப்போ வச்சுக்கலாம், எப்படி வச்சுக்கலாம். சிங்காரி நம்ம திருமணத்த எப்போ வச்சுக்கலாம்’ என்ற பாடலுக்கு இருவரும் பிரமாதமாக ஆடியிருப்பார்கள். சந்திரபாபு ‘லாலா கடை லட்டே, நெருங்கி வாயேன் கிட்டே’ என்று சுகுமாரியைப் பார்த்துப் பாடுவார். உண்மையில் இக்காட்சியில் சுகுமாரி ’லாலா கடை லட்டு’ போல் இனிமையாகத்தான் தோன்றுவார்.

இப்படத்தில் சுகுமாரி படம் நெடுகிலும் இடம் பெறுவார். அதன் பின்னர் பீம்சிங் இயக்கிய படங்கள் அனைத்திலும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்தார். கடைசியாக அவர் இயக்கிய ‘கருணை உள்ளம்’ படத்திலும் சுகுமாரியின் பங்களிப்பு இருந்தது.1978ல் பீம்சிங் மாரடைப்பால் காலமானார். 38 வயதில் கணவரை இழந்த பின் சுகுமாரி தன் மகனுடன் தனித்தே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார். நடனம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என்று அவரது வாழ்வில் அதன் பின் ஓய்வுக்கு இடமேயில்லை. சுகுமாரி ஒருபோதும் கதாநாயகி கனவில் மிதந்தவரில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனாலேயே அவரால் ஏராளமான குணச்சித்திர வேடங்களைப் பின்னர் ஏற்க முடிந்தது. மலையாளப் படங்கள் அவரின் நடிப்புப் பசிக்குப் பெரும் தீனியளிப்பவையாக இருந்தன. நகைச்சுவை நடிகையாகவும் அவரால் ஒளிர முடிந்தது. ஒரு நடிகருக்கு எந்த வேடம் என்றாலும் அதை ஏற்கும் திறன், அதற்கேற்ற காஸ்ட்யூம், ஒப்பனை அனைத்தையும் ஏற்கும் துணிச்சல் வேண்டும். அது சுகுமாரியிடம் ஏராளம் இருந்தது. இறுதியாக அவர் நடித்த ‘நம்ம கிராமம்’ படத்தில் பார்ப்பன விதவைப் பெண்ணாக தோன்றுவதற்குத் தன் தலையை மழித்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. அவரின் அற்புதமான நடிப்புக்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடி வந்தது. பத்மஸ்ரீ விருதும் கூட சுகுமாரியின் நீண்ட கால உழைப்புக்குக் கிடைத்த பெருமையும் மரியாதையும் என்றால் மிகையில்லை. சிவாஜி கணேசன் குடும்பத் தினர் அவர் பெயரில் வழங்கும் விருதையும் சுகுமாரி பெற்றுள்ளார். இவை தவிர கேரள அரசின் பல விருதுகளையும் தன் நடிப்புக்காகப் பெற்றுள்ளார்.

அமெச்சூர் நாடக நடிகையாக...

நடிகை ராகினி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த போது, அவருடன் சுகுமாரியும் ஒருமுறை சென்றபோது ஒய்.ஜி.பார்த்தசாரதியின் குழுவில் இவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அக்குழுவில் நடிகர் சோ நடித்துக் கொண்டிருந்தார். அதன் மூலம் சோவின் ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ நாடகக் குழுவில் சுகுமாரிக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக்குழுவில் ஆண்களே பெரும்பாலும் பெண் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அக்குழுவின் நிரந்தர நடிகையாக சுகுமாரி மாறினார். அக்குழுவில் முப்பது நாடகங்களுக்கு மேல் அவர் நடித்திருக்கிறார். அதில் ‘ஒய் நாட்?’, முகமது பின் துக்ளக் போன்றவை பெரு வெற்றி பெற்ற நாடகங்கள். ’முகமது பின் துக்ளக்’ திரைப்படமானபோதும் சுகுமாரியே நடித்தார். பார்ப்பனப் பேச்சு வழக்கு மொழியையும் அங்கிருந்தே அவர் கற்று, பெற்றுக் கொண்டார்.  இவர் நடித்த நாடகங்கள் பல்லாயிரம் முறை மேடை ஏற்றம் கண்டிருக்கின்றன. நாடக நடிகர்களுக்கு சுகுமாரியின் பெயரில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு வீட்டில் விளக்கேற்றும் போது புடவையில் பற்றிய தீ அவரது உடலையும் சேர்த்தே ருசித்தது. தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், தீக்காயங்களினூடே சட்டென்று ஏற்பட்ட இதயத் தாக்குதலில் மார்ச் 26 அன்று சுகுமாரி உலகை விட்டுப் பிரிந்தார். 1946ல் துவங்கிய அவரது ஆடலும் நடிப்பும் நிரந்தரமாக நின்று போயின.  

(ரசிப்போம்!)

சுகுமாரி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

ஓர் இரவு, வேலைக்காரன், பொன்னி, மலைக்கள்ளன். கோமதியின் காதலன், ராஜா ராணி, மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள், நீலாவுக்கு நெறைஞ்ச மனசு, மாய மனிதன், சம்பூர்ண இராமாயணம், செங்கோட்டை சிங்கம், பொன்னு விளையும் பூமி, மஞ்சள் மகிமை, பெண் குலத்தின் பொன் விளக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன், பெற்றவள் கண்ட பெருவாழ்வு, இரு மனம் கலந்தால் திருமணம், பாட்டாளியின் வெற்றி, உத்தமி பெற்ற ரத்தினம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, புதிய பாதை, மன்னாதி மன்னன், தை பிறந்தால் வழி பிறக்கும், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், செந்தாமரை, கண்ணாடி மாளிகை, பந்த பாசம், கடவுளைக் கண்டேன், லவகுசா, கல்யாணியின் கணவன், வீராங்கனை, ரிஷ்யசிருங்கர், மனம் ஒரு குரங்கு, துறைமுகம், நூற்றுக்கு நூறு, முகமது பின் துக்ளக், கண்ணம்மா, மிஸ்டர் சம்பத், வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டணமா, வாயாடி, சண்முகப்ரியா, மல்லிகைப்பூ, பிள்ளைச் செல்வம், திருமலை தெய்வம், மறுபிறவி, கல்யாணமாம் கல்யாணம், டைகர் தாத்தாச்சாரி, ராஜ நாகம், பெண் ஒன்று கண்டேன், பாத பூஜை, தாய், திருமாங்கல்யம், நேற்று இன்று நாளை, அத்தையா மாமியா, எங்கம்மா சபதம், யாருக்கும் வெட்கமில்லை, திருவருள், மன்னவன் வந்தானடி, அந்தரங்கம், சுவாமி அய்யப்பன், அன்பே ஆருயிரே, மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், பத்ரகாளி, சில நேரங்களில் சில மனிதர்கள், ஆயிரத்தில் ஒருத்தி, உண்மையே உன் விலை என்ன?, மகராசி வாழ்க, தாயில்லாக் குழந்தை, சீர்வரிசை, பாலூட்டி வளர்த்த கிளி, லலிதா, பயணம், ரோஜாவின் ராஜா, கணவன் மனைவி, மோகம் முப்பது வருஷம், குமார விஜயம், புண்ணியம் செய்தவள், சொர்க்கம் நரகம், நீ வாழ வேண்டும், நல்லதுக்குக் காலமில்லை, அன்னபூரணி, கருணை உள்ளம், பருவ மழை, அதிர்ஷ்டக்காரன், முடிசூடா மன்னன், அந்தமான் காதலி, தாய் மீது சத்தியம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காற்றினிலே வரும் கீதம், நெஞ்சுக்கு நீதி, தாயில்லாமல் நானில்லை, நீல மலர்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், பகலில் ஒரு இரவு, தேவி தரிசனம், சுஜாதா, வாலிபமே வா வா, கிளிஞ்சல்கள், கர்ஜனை, அமர காவியம், கடல் மீன்கள், புனித மலர், நிரந்தரம், மருமகளே வாழ்க, துணை, வாழ்வே மாயம், புதுக்கவிதை, இளமைக் காலங்கள், கல்யாணம் ஒரு கால்கட்டு, பூவே பூச்சூடவா, சின்ன மணிக்குயிலே, இது ஒரு தொடர்கதை, வருஷம் பதினாறு, மௌனம் சம்மதம், அரங்கேற்ற வேளை, புத்தம் புது பயணம், கோபுர வாசலிலே, பாச மலர்கள், மனசு ரெண்டும் புதுசு, பூவே உனக்காக, காத்திருந்த காதல், ரட்சகன், கோடீஸ்வரன், பொன் விழா, சிநேகிதியே, அலைபாயுதே, விண்ணுக்கும் மண்ணுக்கும், பூவெல்லாம் உன் வாசம், பம்மல் கே.சம்பந்தம், வருஷமெல்லாம் வசந்தம், பேரழகன், விஸ்வ துளசி,  மானஸ்தன், ஆடும் கூத்து, துள்ளல், அகரம், சொல்லித் தெரிவதில்லை, சில நேரங்களில், யாரடி நீ மோகினி, வம்புச் சண்டை, வேட்டைக்காரன், மகிழ்ச்சி, சிக்குபுக்கு, மையம் கொண்டேன், பொன்னர் சங்கர், என்ன விலை அழகே, நம்ம கிராமம்.

× RELATED மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி