குழந்தைகளை இயந்திரமாக மாற்றாதீர்கள்!

நன்றி குங்குமம் தோழி

“இரண்டு குழந்தைகள் பெற்ற பின்தான் என், வாழ்க்கையில் எனக்கான துறையை கண்டு பிடித்தேன்” என்று கூறும் தேவி மீனா சுந்தரம், ஐடி துறையில் நிறைய சம்பாதித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். கெட்டில் பெல் விளையாட்டு மீதிருந்த ஆர்வத்தால் வேலையை உதறித் தள்ளி குடும்பத்தோடு இந்தியா திரும்பினார். 14 ஆண்டுகள் சிங்கப்பூரிலிருந்து ஆடம்பர வாழ்க்கையை துறந்து கணவர், மகன், மகளுடன் சென்னை வந்த தேவி மீனா, தற்போது “World’s Best Female Lifter” என்ற விருதையும் World Kettlebell Sports Federation (WKSF) அமைப்பின் 16 கிலோ பிரிவில் தங்கமும் வென்றுள்ளார்.   

கெட்டில் பெல் பற்றி கூறும் தேவி மீனா, ‘‘இது 10 நிமிட ஸ்போர்ட்ஸ். இதுவும் பளுதூக்குதல் போலத்தான். இரும்பால் ஆன பீரங்கி பந்து போல் இருக்கும். இதை தூக்க வசதியாக கைப்பிடியும் இருக்கும். இது ரஷ்யாவின் தேசிய விளையாட்டும் கூட” என்றார். தமிழ்நாட்டின் முதல் கெட்டில் பெல் பெண்மணி என்கிற பெருமையை சேர்த்த தேவி மீனா, இதனோடு நில்லாமல் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டர் கோச்’. கெட்டில் பெல் பயிற்சியாளராக வேண்டுமென்றால், இவரிடம் தான் பயிற்சி எடுத்து, தேர்ச்சி பெற்று சான்று பெற முடியும். அந்த அதிகாரம் இவரிடமே உள்ளது.

எந்த நம்பிக்கையில் வசதியான ஐடி வேலையை உதறி கெட்டில் பெல் விளையாட்டை பின்தொடர்ந்தீர்கள்?

ஐ.டியில் கைநிறைய சம்பாதிக்கும் வேலை. சிங்கப்பூரில் நிம்மதியான வாழ்க்கை என எல்லாமே செட்டிலாகி இருந்தது. குழந்தைகள் பிறந்து வளர்ந்ததும் என் எடை அதிகமானது. அதை  உணர்ந்து ஜிம் பக்கம் வந்தேன். சிங்கப்பூரில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவமுண்டு. ஒரு பயிற்சியை செய்வதற்கு முன் அது பற்றிய முழு விவரமும் நமக்கு சொல்லித் தருவார்கள். அப்போதுதான் எனக்கு கெட்டில் பெல் பற்றிய முழு வரலாறும், பயன்களும் கற்பிக்கப்பட்டது. இது பற்றி புரிதல் கிடைத்ததும், ஆர்வம்  அதிகமானது. அதன் பலன்களை நேராக அனுபவித்து வியந்தேன். இரண்டு குழந்தைகள் பெற்ற பின்தான் எனக்கான துறையை கண்டுபிடித்தேன்.

பின், என் கணவரிடம் இதை பொறுமை யாக எடுத்துச்சொல்லி புரியவைத்து, இந்த துறையை என்னால் விட முடியாது என்பதை உறுதியாய் கூறினேன். நான் சொல்வதை முழுமையாக கேட்டவர் என்னுடைய விருப்பத்தை புரிந்து கொண்டார். ‘உன் இஷ்டம் போல் செய்’ என்று கூறியவர், இன்று வரை எனக்கு உறுதுணையாய் நிற்கிறார். என் குரு, பாராக் மேட்ரா. கெட்டில் பெல்லை இந்தியாவில் அறிமுகம் செய்தவர். உலகளவில் இந்தியாவிற்காக விளையாடும் இவர், பல ஆசிய அளவு போட்டிகளில் சாம்பியன்ஷிப் வென்றுள் ளார். அவர் அளித்த ஊக்கமும் பயிற்சியும் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது.

கெட்டில் பெல் எந்த மாதிரியான பலன்களை தரும்?

கெட்டில் பெல் மற்ற உடற்பயிற்சி சாதனங்களை விடச் சிறந்தது. பளு தூக்கும் பலரால் குனிந்து கால்களை தொட முடியாது அல்லது வேகமாக ஓட முடி யாது. வேகமாக ஓடுபவர்களால் பளு தூக்க முடியாது. ஆனால் கெட்டில் பெல் முழுமையான உடல் நலத்தோடு பலமும் தரும். கெட்டில் பெல்லை ‘செயல்பாட்டு உடற்பயிற்சி’ என்று குறிப்பிடுவோம். சட்டெனக் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, ஞாபகசக்தியை அதிகரிப்பது, தசைகளை வலுவாக்கி எலும்பு பிரச்சனைகளை தீர்ப்பது… என ஆரோக்கியத்தை முழுமையாக அணுகுகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைத்திருந்து, உடலை ஆக்டிவ் ஆக இருக்க உதவுகிறது. Swift movement உடன் இயங்கவும் உதவுகிறது.  

ஆரோக்கிய வாழ்வு முறைக்காக நீங்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகள் என்ன?

அனைத்திலும் முக்கியம் காலை உணவு. மாணவர்கள் பள்ளி செல்லும் போது, பல காலை நேரங்களில் பட்டினி யாகத்தான் செல்கிறார்கள். இது மிகவும் தவறு. குறிப்பாக பெண் குழந்தை கள் பட்டினி இருந்தால் அவர்கள் வளர்ந்ததும், பல பிரச்சனைகளை உண் டாக்கும். என், 12 வயது மகள் அதிகாலையே பள்ளிக்கு தயாராகிவிடுவாள். இதனால், காலை உணவை தவிர்த்து வந்தாள். உன் ஆரோக்கியத்தை இழந்து முதல் ரேங்க் வாங்குவதில் எந்த பயனுமில்லை என, அவளின் பள்ளியையே மாற்றிவிட்டேன்.

இப்போது வீட்டின் அருகில் இருக்கும் பள்ளிக்கு காலையில் வயிறு நிறைய சாப்பிட்டு போகிறாள். காலை உணவு தான் படிப்பில் கவனம் செலுத்தி மதியம் வரை உடலுக்கு வலிமை தரும். பெற்றோர்கள் பலர், பிள்ளைகளை பள்ளி முடிந்ததும் அடுத்தடுத்து டான்ஸ், கீபோர்ட், ஸ்போர்ட்ஸ்… எனத் தொடர்ந்து பல கிளாஸ்களுக்கு அனுப்பி வைத்து, டியூஷனுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த வயதில் இது எல்லாமே முக்கியம் தான். அதே சமயம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது மிக முக்கியம்.

பிள்ளைகளுக்கு சாப்பிடவே நேரம் தராமல், அட்டவணை போட்டு இயந்திரமாக மாற்றுவது வருத்தம் அளிக்கிறது.  தைராய்ட், ஹார்மோன் பிரச்சனைகள், பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க அடிப்படை ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதும். நேரத்திற்கு ஆரோக்கிய உணவும், அன்றாட உடற்பயிற்சியுமே பல உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கும்.   

பெண்களுக்கு கெட்டில் பெல் எப்படி உதவுகிறது?

கர்ப்பம் தரித்தவர்கள், கர்ப்பம் தரிக்க முயற்சித்து வருபவர்கள், புதிய தாய்மார்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க பிரத்யேகமாக தாய்லாந்தில்

பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கி உள்ளேன். கருத்தரிக்க சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களை, மருத்துவர் உடல் எடையை குறைக்கச் சொல்லி அனுப்புவார். அப்படி சில பெண்கள் இங்கு வரும்போது, அவர்களுக்கென பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்படும். அதில் முக்கியமானது இந்த கெட்டில் பெல் சாதனம். இது உடலின் கொழுப்பை மட்டும் குறைத்து தசைகளை எதுவும் செய்யாமல் உடலை வலுவாக்கும்.

மற்ற உடற்பயிற்சி சாதனங்கள் கொழுப்புடன் சேர்த்து ஊட்டச்சத்தையும் கரைத்து தசைகளை இழைக்கச் செய்யும். ஆனால் கெட்டில் பெல் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம். பொதுவாக பெண்கள் பலருக்கு கீழ் முதுகில் வலி இருக்கும். கெட்டில் பெல் “High Intensity Interval Training” (உயர் அடர்த்தி இடைவேளை பயிற்சி) மூலம், உங்கள் உடலை அதிகப்படியான செயல்பாட்டிற்கு பழக்கிவிடும்.

அதனால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் முழுமையாக தீர வாய்ப்புள்ளது. முறையாக பயிற்சியாளர்களாக வேண்டும் என்று பயிற்சி பெறவும் வரு கிறார்கள். அதே சமயம் இல்லத்தரசிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக வருகிறார்கள். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகள் இங்கு அளிக்கப்படும்” என்றவர் சில பெண்கள் எடையை குறைக்க கணவர் வீட்டிற்கு தெரியாமல் வருவதாக தெரிவித்தார்.“இந்த காலத்திலும் பெண்கள் புகுந்த வீட்டாரிடமிருந்து இது மாதிரி பிரச்சனை களை சந்திப்பது வருத்தமளிக்கிறது.

இந்த சமயத்தில் தான் குடும்பத்தினர் பக்கபலமாக நின்று உதவ வேண்டும். இது சாதாரண பிரச்சனைதான். நம் தொழில்நுட்பம் எங்கோ வளர்ந்து நின்றுள்ளது. முறையான மருத்துவ செயல்முறையில் எளிதாக கருத்தரிக்கலாம். இப்படி இருக்கையில் பெண்களை இந்த சமூகம் இன்றும் ஏளனமாக நடத்துவது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.உலக அளவு கெட்டில் பெல் சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தேவி மீனா, சில மாதங்களில் இந்தியா விற்காக பல நாடுகளைச் சேர்ந்த வீரர் களிடம் போட்டியிட இருக்கிறார். அவர் இந்தியாவிற்கு இன்னும் பல பெருமைகள் சேர்க்க வாழ்த்துகிறோம்.

-ஸ்வேதா கண்ணன்

படங்கள் : ஏ.டி. தமிழ்வாணன்

 

Related Stories: