×

மான்,மயில்,குரங்குகளால் விவசாய பயிர்கள் அடியோடு நாசம்-மெத்தனத்தில் வனத்துறை

சிவகங்கை : சிவகங்கை அருகே விவசாய பயிர்கள், காய், பழங்களை மான், மயில், குரங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை, சென்னலக்குடி, கவுரிப்பட்டி, முத்தூர் வாணியங்குடி, மேலக்காடு உள்ளிட்ட கிராமங்களில் வாழை, கரும்பு, நெல் மற்றும் காய்கறிகள், கொய்யா, பலா, தென்னை உள்ளிட்ட பயிர் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதி வயல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் மரங்களில் உள்ள காய்கள், இளநீர் உள்ளிட்டவற்றை காய்க்க தொடங்கும் காலத்திலேயே அழித்து விடுகிறது.

அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள், நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. வாழை மரங்களையும் ஒடித்து விடுகின்றன. குரங்குகளை விரட்ட வானவெடிகள் வைத்தும் அவைகள் செல்லாமல் இப்பகுதியிலேயே உள்ளன. குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்காததால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் தற்போது விவசாயம் செய்வதையே குறைத்து வருகின்றனர்.

இதுபோல் மேலக்காடு பகுதியில் ஊருணியில் நீர் அருந்த வரும் மான்கள், விவசாய நிலங்களில் உள்ள காய்கறிகள், பயிர்களை சேதப்படுத்துகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக வந்து பயிர்களை பாதிப்புக்குள்ளாக்கி செல்கிறது. இப்பகுதியில் மயில்களும் அதிகம். இவைகளும் நெல், கேழ்வரகு போன்ற தானியப்பயிர்களை கூட்டமாக அழிக்கிறது. இவைகளிடம் இருந்து பயிர்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை காக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது,‘மழை இல்லாமல் அதிக செலவு செய்து கிணற்று நீரை பயன்படுத்தி பெரும் சிரமங்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் குரங்குகளால் ஆண்டுதோறும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. குரங்கு, மான், மயில்களால் ஏற்படும் பாதிப்பால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மான்கள் வாழும் காட்டுப்பகுதிக்குள் போதிய குடிநீர் தொட்டிகள் கட்ட வேண்டும் என்றனர்.

நிதி ஒதுக்க வில்லை

வனத்துறையினர் கூறியதாவது,‘இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது, ஊர்களுக்குள் சென்று வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட புகார்கள் வருகின்றன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் குரங்குகள் உள்ளது எனவும் அவைகளை காடுகளுக்குள் பிடித்துவிட நிதி வேண்டும் எனக் கூறியும் இதுவரை போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் வனத்துறை மேற்பார்வையில் தனியார் மூலம் சம்பந்தப்பட்டவர்களே பணம் செலவழித்து பிடிக்க வேண்டிய நிலை உள்ளது’ என்றனர்.

Tags : Sivagangai: Near Sivagangai, farmers are suffering due to damage to crops, fruits, deer, peacocks and monkeys.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...