தொடர் நடவடிக்கையால் நீலகிரியில் கொரோனா கட்டுக்குள் உள்ளது-கலெக்டர் தகவல்

ஊட்டி : தொடர் நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவக்கத்தி–்ல் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், மே மாதத்திற்கு பின் ஊரடங்கில் சற்று தளர்வு அளித்த பின், பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.

ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அதன்பின், பல்வேறு கட்டுப்பாடுகளால், பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கியது. தற்போது, தினமும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. அதேநேரத்தில், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறைந்தளவு நபர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,`நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இதுதவிர, தினமும் அனைத்து பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று தொடர் நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது’ என்றார்.

Related Stories: