×

மீன்களின் உடலில் பிளாஸ்டிக் துகள்கள்: சென்னையில் விற்கப்படும் மீன்களில் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்பனையாகும் மீன்களின் தசையில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களில் கண்டறியப்பட்டுள்ள நுண் பிளாஸ்டிக் துகள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

இதய நோய்களுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும் கொழுப்பு நிறைந்துள்ள கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவுகளை தவிர்க்க நினைப்பவர்களுக்கு மீன் சத்துமிக்க மாற்று உணவாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் சென்னை அருகே பிடிக்கப்படும் சிலவகை மீன்களை உண்டால் புற்றுநோய்க்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர் கடலியல் ஆய்வாளர்கள். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நடத்தியுள்ள ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் மீன் அங்காடியில் விற்பனையாகும் மீன்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் சீலா, இந்திய கானாங்கெளுத்தி, கிழங்கான், சங்கரா, சிவப்பு சினாப்பர் வகை மீன்கள், சிரியவகை பால் சுறாக்கள் உள்ளிட்ட ஏழு வகை மீன்களின் தசைகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உண்ணும் போது மனித உடலுக்குள் புகும் பிளாஸ்டிக் நுண் துகள்களால் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடல் நீரில் கலக்கும் சிறு பிளாஸ்டிக் கழிவுகளை இரை என நினைத்து மீன்கள் உண்ணும் போது அது வயிற்றில் சிக்கி பின்னர் வெளியேறினாலும் 5 மி.மீ அளவுள்ள நுண் துகள்கள் ரத்தத்தில் கலந்து மீன்களின் தசைகளிலேயே தங்கி விடுகின்றன.

இந்த மீனகளை வாங்கி சமைத்து உண்ணும் போது பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழவேற்காடு முதல் ஒடிசா கடற்கரை வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் சில இறால் வகைகள், கடம்பா மீன்கள், கடம்பா நண்டுகளிலும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மிகவும் பாதுகாப்பான புரதம் மிகுந்த கொழுப்பில்லா உணவு என்று அறியப்படும் கடல் உணவு வகைகளிலும் பிளாஸ்டிக் ஊடுருவி இருப்பது அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Chennai , Plastic, fish
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...