கொள்ளிடத்தில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி சேதமடைந்த ஆற்றங்கரை சாலை-பொதுமக்கள் அவதி

*இது உங்க ஏரியா

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்து தகுதியற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கொள்ளிடம் சோதனைச்சாவடியில் இருந்து குத்தககரை, சரஸ்வதி விலாகம் கொன்றைக்காட்டு படுகை, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், சோதியகுடி, மாதிரவேளூர், பட்டியமேடு, பாலூரான்படுகை, வாடி ஆகிய கிராமங்கள் வழியாக பனங்காட்டான்குடிக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்படுத்தப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாததால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அவசரகால தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை மேம்படுத்தக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்வது கூட மிகுந்த சிரமம் தான்.

இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பெரும்பாலானோர் மாற்று வழியாக சென்று வருகின்றனர்.எனவே 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றங்கரை சாலைகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: