குடிநீருடன் கழிவுநீர் கலப்பு-பொதுமக்கள் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட மோகன்ராவ் காலனியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், பெங்களூரு சாலையில் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீடுகளில் புகுந்தது. இதையடுத்து, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய கழிவுநீர் கால்வாயை நகராட்சி நிர்வாகம் அவசர கதியில் அமைத்தது. ஆனால், முறையாக அமைக்கப்படாததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து மீண்டும் அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயை சரிசெய்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: