தேர்தலில் வருவாய்துறை பிஸியானதால் மலட்டாற்றில் மணல் திருட்டு அமோகம்-விவசாயம்,குடிநீர் பாதிக்கும் அபாயம்

சாயல்குடி :  தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பிஸியாக இருப்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி கடலாடி,பேரையூர் பகுதியில்  மணல் கொள்ளை நடந்து வருவதால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. கலெக்டர், எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடி, மங்களம் மலட்டாறு பகுதி, ஆப்பனூர், கூரான்கோட்டை பகுதிகளிலுள்ள மலட்டாறு மற்றும் மூக்கையூர் ஆற்றுபடுகைகள், பேரையூர், கிடாத்திருக்கை பகுதியிலுள்ள ஆறு, ஓடைகளில்  அரசு விதிமுறைகளை மீறி, எவ்வித அனுமதியின்றி  மணல் அள்ளி டிப்பர், டிராக்டர்களில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

மலட்டாறு  ஆறு பகுதியில் தொடர் மணல் கொள்ளையால் ஆப்பனூர், மங்களம், கடலாடி, கருங்குளம், எம்.கரிசல்குளம், கூரான்கோட்டை பஞ்சாயத்துகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு போன்ற நீர்ஆதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு போய் கிடக்கிறது. மின் மோட்டார், கட்டுமானங்கள், குழாய்கள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்கள் முடங்கி போய் விட்டது.

மணல் கொள்ளையால் மழை காலத்தில் காட்டாறு வழியாக பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீர் தேங்க வழியில்லாமல் கடலில் வீணாக கலந்து வருகிறது. இதனால் மானாவாரி எனப்படும் பருவமழையை நம்பிமட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. தண்ணீர் தேங்க வழியில்லாமல் விவசாயமும் தொடர்ந்து பொய்த்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

விவசாயிகள் கூறும்போது. இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வருவாய் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல் துறை ஆகியோர் கவனம் செலுத்தவில்லை.  தற்போது தேர்தல் நேரம் என்பதால் வருவாய்துறை, காவல்துறையினர் அதிகமான வேலை பளுவில் இருப்பதால்  மணலை சுலபமாக அள்ளி முறைகேடாக விற்று வருகின்றனர்.

ஆறு, ஆற்று படுகைகள், விவசாய நிலங்களில் மணல் சுரண்டப்படுவதால், நீர்வளம், கனிமவளம் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் ஆண்டுக்காண்டு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே  சாயல்குடி, கடலாடி, பேரையூர் பகுதியில் மணல் திருட்டை ஒழிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. கார்த்திக் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: