×

உதகையில் பெண்களுக்கு தையல் எந்திரம் தருவதாக பாஜக டோக்கன்: எதிர்க்கட்சிகள் போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுகவினரும் பாஜகவினரும் பல்வேறு பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று மாலையே உதகையில் இருக்கக்கூடிய அதிமுகவினர் வீடு வீடாக வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நீலகிரி மாவட்டத்தில் 3 வழக்குகளானது தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது அரசு நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என்பது சட்ட விதியாகும். ஆனால் அதையும் மீறி நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் அதிமுகவினரும் இலவச கோழி குஞ்சுகளை வழங்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுகவானது தற்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது உதகை அருகே இருக்கக்கூடிய குந்தா தாலூக்காவிற்கு உற்பட்ட கரியமலை, மஞ்சூர் பகுதிகளில் பாஜகவினர் சென்று மத்திய தொழில்துறை சார்பாக இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும் அதற்கான படிவத்தை கொடுத்து ஏராளமான பெண்களிடம் அந்த படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான டோக்கன்களையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த திமுகவினர் அங்கு சென்று பாஜகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்கள் வைத்திருந்த படிவங்களையும் திரும்ப பெருமாறும் உடனடியாக அவர்களின் செயலை நிறுத்திக்கொள்ளுமாறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதமானது ஏற்பட்ட நிலையில் சம்பவம் குறித்து அறிந்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பாஜகவினர் வைத்திருந்த தையல் இயந்திரம் வழங்குவதற்காக பெற்றுக்கொண்ட 70 விண்ணப்பங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்வதற்கான புகாரையும் காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.

Tags : Nilgiris
× RELATED ஊட்டியில் சாரல் மழையால் கடும் குளிர்