அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம்தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 5,911 வாக்குச் சாவடிகளும், 2,157 துணை வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்த 9,847 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7,392 கட்டுப்பாட்டு கருவிகள், 7,474 விவி பேடு இயந்திரங்கள் அனைத்து கட்ட சோதனைகளும் செயயப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த இயந்திரங்கள் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அனைத்து  கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் கணிணி வழியாக குலுக்கல் முறையில் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் தொடர்பான தகவல் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 13ம் தேதி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வைக்கப்படும். இதன்பிறகு 12 மற்றும் 13ம் தேதிகளில் சம்பந்தபட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகளை  சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் நேரடியாக கிடங்கிற்கு சென்று பார்வையிடலாம். இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்  கூறுகையில், ‘‘தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னைகள்  ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்றாக கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. எந்த வாக்குச்சாவடிக்கு வாக்குபதிவு எந்த இயந்திரம் செல்லும் என்பது வாக்குப்பதிவுக்கு   2 நாட்களுக்கு முன்னர் தான் தெரியும்’’ என்றார்.

Related Stories: