நிவர், புரெவி, வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு: 1.25 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்: விதிமுறை மீறல் என குற்றச்சாட்டு

சென்னை: நிவர், புரெவி, வடகிழக்கு பருவமழை நிவாரணங்களுக்கு விண்ணப்பித்து பல்வேறு கோளாறுகளின் காரணமாக இன்னும் நிவாரணம் பெறாமல் உள்ள விவசாயிகளின் தகவல்களை நாளைக்குள் (10.3.2021)  சரிசெய்து அனுப்பும்படி 33  மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர்களுக்கு, வேளாண்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, அரியலூர், செங்கல்பட்டு, கோயம்பத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,  கள்ளக்குறிச்சி, கரூர், காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுத்துறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிபேட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவாரூர்,  தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிவர் புயல், புரெவி புயல் மற்றும் ஜனவரி மாதம் பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1649 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 33 மாவட்டங்களில் இதுவரை 13  லட்சத்து 55 ஆயிரத்து 092 பேருக்கு 1346 கோடி அதாவது ஒதுக்கப்பட்ட தொகையில் 82 சதவீதம் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 25 ஆயிரத்து 350 விவசாயிகளுக்கு பயிர் சேதத்தின் அளவு சரிபார்ப்பு, வங்கியின்  ஐ.எப்.சி குறியீடு தவறாக இருத்தல், வங்கி கணக்கு தவறாக இருத்தல் போன்ற காரணங்களால் நிவாரண தொகை இன்னும் 303 கோடி அதாவது 18 சதவீதம்  வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனை உடனடியாக தீர்வு கண்டு வரும் 10.3.21ம் தேதிக்குள் சரிசெய்து அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று உடனே நிவாரண தொகையினை  கிடைக்கசெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தேர்தலுக்கு முன்பு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 1.25 லட்சம் பேருக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுத்து  வருவது தேர்தல் விதிமுறை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: