வரும் சட்டப்பேரவை தேர்தலில் குழப்பமில்லாத சின்னங்களை ஒதுக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களுக்கு மற்ற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையிலான தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்  நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான தங்கள் கட்சிக்கு, 2011ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலிலும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது. எதிர்வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், தங்கள்  கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் கரும் பலகை, குளிர்சாதன பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்கள் பொது சின்ன பட்டியல் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதாகவும், அதனால் தொலைக்காட்சி சின்னத்தைப் போல  இருக்கும் சின்னங்களை பொது சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’’ என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சின்னங்கள்  குழப்பம் குறித்து தாமதமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க  கோரி மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: