ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் அறைகள் மூடல் நீதிமன்றத்தை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வழக்கறிஞர்கள் அறைகளை மீண்டும் மூடியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற  வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள்  கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து கடந்த  வாரம் வழக்கறிஞர்களின் அலுவல் அறைகள் திறக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கும், வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்பட்டு வழக்கறிஞர்கள் தங்களது நீதிமன்ற பணியினை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்  தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகங்களில் உள்ள வழக்கறிஞர் அலுவலக அறைகள் மார்ச் 8ம் தேதி மீண்டும்  மூடப்பட்டன.

இதனால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தது.அதன்படி, நேற்று  உயர்  நீதிமன்றம் ஆவின்கேட் அருகே வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், நூலகர் ஜி.ராஜேஷ், பார்கவுன்சில் உறுப்பினர்  வேல்முருகன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசாள், முன்னாள் தலைவிகள் டி.பிரசன்னா, வி.நளினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>