எதிர்த்து போட்டியிட முயன்றவர் கைது ஓபிஎஸ்சை கண்டித்து மக்கள் சாலை மறியல்: பெரியகுளத்தில் பரபரப்பு

பெரியகுளம்: எதிர்த்து போட்டியிட முயன்றவர் கைது செய்யப்பட்டதால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து பெரியகுளத்தில் ஒரு சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘வேளாளர்’ பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க  பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து வேளாளர், வெள்ளாளர் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்  ராஜா, போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பந்தல் ராஜா சென்னையில் நேற்று திடீரென போலீசால் கைது செய்யப்பட்டார். ஓபிஎஸ்  தூண்டுதலின்பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக கூறி, வேளாளர் சமுதாயத்தினர் பெரியகுளத்தில் தேனி - திண்டுக்கல் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கூறுகையில், ‘‘ஓபிஎஸ் தூண்டுதலால்  காவல்துறையினர் பந்தல் ராஜா மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். கடந்த மாதம் போடியில் வஉசி சிலை திறப்பின்போது ஓபிஎஸ்க்கு எதிராக கோஷமிட்ட பெண்களை போலீசார் அடித்து  இழுத்து சென்றனர். அதை ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். போடி தொகுதியில் எங்கள் சமுதாயத்தின் வாக்குகளை பெற்று ஓபிஎஸ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை  அவருக்கு எதிராக எங்கள் சமுதாயத்தினர் போட்டியிடுவதை தடுக்கவே காவல்துறையின் மூலம் ஒடுக்குமுறையை மேற்கொண்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.

ஓபிஎஸ் வீட்டுக்கு செல்லும் சாலைகள் திடீர் மூடல்

பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தை சீர்மரபினர் மற்றும் வேளாளர் சமுதாயத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரகாரம் பகுதியில்  உள்ள ஓபிஎஸ்சின் பழைய வீடு மற்றும் புதிய வீட்டிற்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் காவல்துறையினர் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் இல்லம்  செல்லும் சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Related Stories: