கோவையில் அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்த பரிசு பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த வேட்டி, சேலை, சில்வர் தட்டு உள்ளிட்ட பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து வாக்காளர்களை  கவர்வதற்காக அ.தி.மு.க.வினர் கோவையில் பல இடங்களில் பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். சமீபத்தில் விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு இரவு நேரங்களில் பரிசு பொருட்கள் அடங்கிய பை  தொங்கவிடப்பட்டு இருந்தது. இது போன்ற சம்பவங்களை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பாரதிநகர்  6வது வீதியில்  உள்ள அ.தி.மு.க. பூத் ஏஜென்ட் அனிதா என்பவரது வீட்டில் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படங்கள் அடங்கிய பையில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படை  அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. பறக்கும் படை அதிகாரி சந்திரபிரியா தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 68 பைகளில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: