புதிய வாகனங்கள் வாங்கினால் 5% தள்ளுபடி அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை: 20 ஆண்டாக நீட்டித்து வழங்க வலியுறுத்தல்

சேலம்:  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்களையும், பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு  எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த  அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் தனராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 4 லட்சத்து 63 ஆயிரம் லாரிகள் ஓடுகிறது. இதில் 15  ஆண்டு பழமையான லாரிகள் ஒரு லட்சத்து 65 ஆயிரமாகும். பொதுவாக 15 ஆண்டுகளான லாரிகளை வைத்திருப்பவர்கள் அவர்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருப்பார்கள்.

ஒரு சிலர் வேண்டுமானால் 3 முதல் 5 லாரிகளை வைத்திருக்கலாம். எனவே, மத்திய அரசின் அறிவிப்பால் சிறு லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவர். எனவே, சிறு லாரி உரிமையாளர்கள் பாதிக்காத வகையில், 15 ஆண்டு  என்பதை 20 ஆண்டு என்று நீட்டித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று தெரிவித்துள்ளார். புதிய லாரி ₹30 லட்சத்தில் இருந்து ₹40  லட்சம் வரை விற்கப்படுகிறது. மத்திய அரசு கூறியுள்ள கணக்குபடி பார்த்தால் 30 லட்சம் லாரிக்கு 5 சதவீதம் தள்ளுபடி என்றால் 1 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கும். இதன் தொகை லாரி உரிமையாளர்களுக்கு போதாது. அதே நேரத்தில் 10  ஆண்டுகளான லாரிகளை விற்கும் போது 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். எனவே, 15 ஆண்டு என்பதை 20 ஆண்டுகள் நீட்டித்து பயன்படுத்த, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பல்லாயிரம்  லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். இவ்வாறு தனராஜ் கூறினார்.

Related Stories: