திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்த வேளாண் பெண் ஊழியர் பணி நீக்கம்: சேலம் கலெக்டர் நடவடிக்கை

இளம்பிள்ளை: சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த வேளாண்துறை பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் வேளாண் உதவி தொழில் நுட்ப மேலாளராக  பணியாற்றி வருபவர் திலகவதி. பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இவர், ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சில நாட்களுக்கு முன்பு விருப்பமனு தாக்கல் செய்தார். இது தொடர்பான படங்கள் மற்றும்  வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இது சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராமனின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து திலகவதியை பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள்  கூறுகையில், ‘‘அரசு பணியில் இருப்பவர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். இதன் அடிப்படையில் திலகவதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,’’ என்றனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட திலகவதி கூறுகையில், ‘‘ ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். கடந்த 4ம் தேதி நேர்காணலில் கலந்து கொண்டேன். ஆனால், 1-ம் தேதியே பணிநீக்கம் செய்து உத்தரவு  போடப்பட்டுள்ளது. இது  நேற்றுதான் கிடைத்தது. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட வழங்காமல், ஒரேயடியாக பணிநீக்கம் செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில்  போட்டியிட வேட்புமனு அளித்தால் மட்டுமே நீக்கம் செய்ய முடியும் என வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது. மாவட்டத்தில் நிரந்தர அரசு ஊழியர்கள் சிலரும் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை  எந்தவித நோட்டீசும் வழங்கவில்லை. பாரபட்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞருடன் ஆலோசித்து, சட்ட மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Related Stories: