×

சிவகாசி பகுதியில் 95 சதவீத ஆலைகள் மூடல் துவங்கியது பட்டாசு ஆலை ஸ்டிரைக்

சிவகாசி: அதிகாரிகளின் தொடர் ஆய்வால் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நாக்பூர்,  டிஆர்ஓ உரிமம்  பெற்ற 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் 29 பேர்  பலியாகினர். 41 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதைத்தொடர்ந்து விருதுநகர்  மாவட்ட நிர்வாகம், மத்திய  வெடி பொருள் கட்டுப்பாட்டு துறையினர் குழுக்கள் அமைத்து சிவகாசி, சாத்தூர் பகுதி பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறி செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

அதிகாரிகளின் ஆய்வால் அச்சமடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள், 95 சதவீத பட்டாசு ஆலைகளை நேற்று மூடினர். வழக்கமாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் முறைப்படி அறிவித்து போராட்டத்தை  துவக்குவார்கள். ஆனால் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் ஆலைகள் நேற்று மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு நிவாரணம்  வழங்கக் கோரியும் நகர் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து பட்டாசு தொழிலாளி கருப்பசாமி கூறுகையில், ‘‘‘‘பட்டாசு ஆலை தொழிலாளர்கள், வாழ்க்கை மிகப்பெரிய போராட்டமாக மாறி விட்டது.

வெடி விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டாலும் வேற வேலை வாய்ப்பு இல்லாததால் உயிரை பணயம் வைத்துத்தான் வேலைக்கு செல்கிறோம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு வேலைவாய்ப்பின்றி கஷ்டப்பட்டோம். குடும்பம் நடத்தவே  பெரும் சிரமத்தை சந்தித்தோம். கடந்த சில மாதங்கள்தான் வேலை நடந்தது. தற்போது மீண்டும் பூட்டி விட்டனர். அரசு, பட்டாசு ஆலை உரிமையாளர்கள்தான் நிவாரணம் வழங்க வேண்டும்’’என்றார்.

‘‘ஒருங்கிணைந்து போராட வேண்டும்’’
விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க செயலாளர் மகாலட்சுமி கூறுகையில், ‘‘எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பேசி மூடியுள்ளனர். இது தொழிலாளர்களை கடுமையாக  பாதிக்கும். தொழிலாளர்களிடம் பேசி ஒருங்கிணைந்து அரசிற்கு எதிராக போராட வேண்டும். அப்போதுதான் ஒரு தீர்வு ஏற்படும். வெறும் பட்டாசு ஆலைகளை மட்டும் பூட்டினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. கடந்த காலங்கள் போல்  முதலாளி, தொழிலாளி பார்வையின்றி போராட்டம் நடத்த வேண்டும்.  இவற்றை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்களது சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’ என்றார்.

Tags : Sivakasi , 95% of plants in Sivakasi area closed due to firecracker plant strike
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு