×

பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்

லாஸ் ஏஞ்சலெஸ்: இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி குறித்து இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து, 2020ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. தற்போது, தனது தாயார் டயானா சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு தான் ஹாரி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

அதன் பின்பு, இருவரும் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்து பல்வேறு கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகின. ஆனால், இருவரும் மவுனமாக இருந்து விட்டனர். இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு அளித்த பேட்டியில் இருவரும் மனம் திறந்தனர். இந்த பேட்டியின் போது, மேகன், ``தான் கர்ப்பமாக இருந்த காலங்களில் என் மகனின் நிறம் எப்படி இருக்குமோ? என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அவனுக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

தற்போது 2 வயதாகும் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்த பேச்சு, அரச குடும்ப பாதுகாப்பு பறிக்கப்பட்டது போன்ற தீவிர மன அழுத்தத்தினால், பலமுறை தற்கொலை கூட செய்து கொள்ளலாமா? என்று சிந்தித்தேன்,’’ என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ``உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத் தின் மனித வளத்துறையை அணுகினேன். ஆனால், அவர்களோ, நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறி விட்டனர்,’’ என்று கூறினார்.
இளவரசர் ஹாரி கூறும்போது, ``அந்த சமயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அரச குடும்பத்தில் சிக்கி கொண்டிருந்தேன் என்பது தெரியாமலேயே, மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போது, என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் சிக்கிக் கொண்டுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறிய போது என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தந்தை இளவரசர் சார்லஸ் தற்போது பேசுவதை நிறுத்தி விட்டார்,’’ என்று தெரிவித்தார்.

* பாஸ்போர்ட் பறிப்பு
மேகன் மார்க்கல் மேலும் கூறுகையில், ``அரண்மனைக்கு சென்ற தொடக்கத்தில் என்னுடைய பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், சாவி ஆகிய அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. அதனால், அரண்மனையை விட்டு வெளியேற முடியவில்லை. ஒரு கால் டாக்சி நிறுவனத்தை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை,’’ என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாலிவுட் நடிகையான மேகன் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Megan , Suspicion over the color of the unborn child The racism of the British royal family: Megan with tears in her eyes
× RELATED டயானா பெயர் சூட்டினர் ஹாரி-மேகன் தம்பதிக்கு 2வது பெண் குழந்தை