பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக சித்தரிப்பு பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: பெண்களுக்கு நீதிமன்றம் மிகுந்த மரியாதை வழங்குவதாகவும் பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து குறித்து தவறாக கூறப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் புகார் கொடுக்க சென்றார். அவரை தடுத்து நிறுத்திய வாலிபரின் தாய், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயதாகும்போது தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார்.

இதுதொடர்பாக, நோட்டரி வக்கீல் முன்னிலையில் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆனபோது வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வாலிபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முயன்றபோது தனது அரசு பணியை காரணம் காட்டி அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனால் வாலிபரின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு கடந்த ஒன்றாம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் விட்டுவிடுகிறோம்’ என கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு கீழ்நீதிமன்றத்தில் தீர்வு காணும்படி அறிவுறுத்தப்பட்டது. பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது மிகுந்த சர்ச்சையை எழுப்பியது.

பாலியல் பலாத்கார வழக்குகளில் திருமணம் செய்து கொள்வது ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டால், விருப்பமில்லா பெண்கைளை பலாத்காரம் செய்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறக்கூடும் என சர்ச்சை எழுந்தது. இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பெண்ணுரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல தரப்பினரும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். இந்நிலையில் 14வயது சிறுமியின் பாலியல் பலாத்கார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை செய்தது.

அப்போது சிறுமியின் வயிற்றில் இருக்கும் 26 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், ‘‘கடந்த வாரம் பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வழக்கின் ஆவணங்களின் அடிப்படையில் தான், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்கப்பட்டது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. திருமணத்துக்கான பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான எந்த ஒரு வழக்கும் எங்கள் முன் விசாரணைக்கு வந்ததாக நினைவில் இல்லை. பெண்கள் மீது நீதிமன்றம் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. நீதித்துறையின் நற்பெயர் வழக்கறிஞர்களின் கைகளில் இருக்கின்றது” என்றனர். சர்வதேச மகளிர் தினமான நேற்று நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: