அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி தேமுதிக இன்று அவசர ஆலோசனை: மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்ட பின் முக்கிய முடிவு

* அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு குறித்து 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

* அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

சென்னை: அதிமுக உடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர் இழுபறியில் இருந்து வரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற  உள்ளது என்று தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி  நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உடனான தொகுதி பங்கீடு செய்வது குறித்து கடந்த 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதிமுக சார்பில் 4 கட்ட பேச்சுவார்த்தை  நடத்தியும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.  

இதனால் கூட்டணியில் இருந்து தேமுதிவை அதிமுக கழற்றிவிடும் முடிவுக்கு வந்து விட்டதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்த இழுபறிக்கு தேமுதிக கட்சி தலைமை தான் காரணம் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 2011ல் இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. அக்கட்சிக்கு தொண்டர்கள் பலமும் இல்லை. இதனால், தற்போது அந்த கட்சிக்கு 15 சீட்டும், ஒரு  மாநிலங்களவை சீட்டும் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்சி நிர்வாகிகள் எங்களின் பொறுமையை ேசாதித்து கொண்டிருக்கின்றனர்.அவர்கள் விரைவில் முடிவு எடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து கழற்றி விட முடிவு  செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தேமுதிக நடவடிக்கையால் அதிமுக மட்டுமின்றி தேமுதிக தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்களுக்கு பலம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து எங்களை கழட்டிவிட்டு விட்டு தனித்துப் போட்டியிட வேண்டியது  தானே? ஏன் எங்களை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது  இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து  மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்க தேமுதிக அவசர ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்தி முக்கிய  முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 இதுகுறித்து தேமுதிக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை(இன்று) காலை 10.30  மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலாளர் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவைத் தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்காததால், யாருக்கு எந்த தொகுதி என்று பிரிக்கும் பணி  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக கொடுக்கும் 15 சீட்டை வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதாக என்று இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: