இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா

பீஜிங்: பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட, சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தில் அனுமதி வழங்கி இருக்கிறது. திபெத்தில் யர்லாங் சாங்போ என அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதி, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலபிரதேசம், அசாம் வழியாக வங்கதேசத்துக்கு செல்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட திபெத் மாகாணத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை அமைத்து, நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது. சீனா கட்ட உள்ள புதிய அணையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தின் நீராதாரம் பாதிக்கப்படக்கூடும்.

இது குறித்து இந்திய தரப்பில் சீனாவிடம் கவலை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்திற்கு சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்ட வரைவில் ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டமானது 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், அருணாசலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியான திபெத்தின் கடைசி மாகாணம், மேடாக்கில் யர்லூங் சாங்போ நதியின் குறுக்கே இந்த பிரமாண்ட அணை கட்ட அனுமதி தரப்பட்டுள்ளது.

இதற்கு, வரும் 11ம் தேதி அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டும் புதிய அணையினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்க தேசத்துக்கான நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில் புதிய அணை திட்டம் இரு நாடுகளிடையே பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது. இந்தியா, வங்கதேசத்துக்கு செல்லும் நதி நீரை அணை கட்டி தடுக்கும் சீனாவின் முயற்சி சர்வதேச பிரச்னையாக உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

* நாங்க பங்காளிகள் எதிராளிகள் அல்ல

சீன வெளியுறவு மந்திரி வாங் யி தனது பேட்டியில், ‘‘இந்திய-சீன எல்லைப் பிரச்னையே, இரு நாடு உறவின் முழுக்கதையும் அல்ல. பல முக்கியமான விஷயங்களில் இரு நாடுகளின் நிலைகளும் ஒரே மாதிரியானவை, அல்லது அதற்கு நெருக்கமானவை. எனவே சீனாவும், இந்தியாவும் நண்பர்கள், பங்காளிகளே தவிர, எதிராளிகளோ, அச்சுறுத்தல்களோ அல்ல’’ என்றார். கிழக்கு லடாக்கில் நிலவிய மோதல் நிலை குறித்து கூறிய அவர், ‘எல்லையில் கடந்த ஆண்டு நடந்தது தொடர்பான சம்பவங்களில் சரி, தவறு எது என்பது தெளிவாக உள்ளது. அதில் சம்பந்தப்பட்டோரின் பங்குகளும் தெளிவாக இருக்கின்றன. மோதல் மூலம் எதையும் தீர்க்க முடியாது, பேச்சுவார்த்தையே அமைதி தரும் என்பதை மேற்கண்ட சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது’ என்றார்.

* இந்த அணையின் மூலம், சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து பாயும் நதி நீரை பயன்படுத்தி 7 கோடி கிலோவாட் மின்உற்பத்தி செய்யமுடியும்.

* இதன் மூலமாக சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதம் பூர்த்தி செய்ய முடியும்.

* திட்டத்தின் மூலம் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் மின்சாரம் மூலமாக சீனாவின் கார்பன் வெளியீட்டை குறைக்கும் இலக்கை 2030ம் ஆண்டுக்குள் அடைய முடியும்.

* மேலும் 2060ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்த முடியும்.

Related Stories: