பெண்கள் தங்களின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: அப்போலோ தலைவர் பேச்சு

சென்னை: பெண்கள் தங்களின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனைகள் சார்பில், விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று துவங்கப்பட்டது. இதனை அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, துணை தலைவர் பிரீதா ரெட்டி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில், ‘‘சர்வதேச பெண்கள் தினம் இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சுகாதார நிபுணர்கள், இன்னும் பத்தாண்டுகளில், தொற்றா நோய்களில் 80 சதவீதம் பேர் உயிரிழக்க கூடும் என கணித்துள்ளனர்.

குறிப்பாக, சர்க்கரை நோய், புற்றுநோய், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் உயிரிழப்பு ஏற்படும், என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நாளில் அனைத்து பெண்களும் ஒரு உறுதியேற்க வேண்டும். பெண் என்பவள், குடும்பம், சமூகம் என, இரண்டிலும் பங்கு வகிப்பவள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க பெண்களால் மட்டுமே முடியும். எனவே, தங்கள் உடல் நலனில் பெண்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார். துணை தலைவர் பிரீதா ரெட்டி பேசுகையில், ‘‘இந்தியாவில், 70 சதவீதம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளர். மார்பக சுய பரிசோதனை குறித்த விழிப்புணர்வு அனைத்து பெண்களிடமும் ஏற்பட வேண்டும். அதற்காக விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories:

>