திருநின்றவூர் பேரூராட்சியில் சாலைேயாரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: குப்பை எரிக்கும் புகையால் மக்களுக்கு மூச்சு திணறல்

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சியில் சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அப்பகுதி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் குப்பை எரிப்பதால் அப்பகுதியினர் மூச்சுத்திணறால் அவதிப்படுகின்றனர். திருநின்றவூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள குப்பையை பேரூராட்சி ஊழியர்கள் சரி வர அகற்றுவது இல்லை. மேலும், சாலையோரங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேட்டால் மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “திருநின்றவூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தொய்வு காட்டி வருகிறது. சமீப காலமாக முக்கிய பிரதான சாலை, தெருக்களில் உள்ள குப்பையை சரி வர அகற்றாமல் கிடக்கிறது. இதனால் பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பை நிறைந்து வழிகிறது. மேலும், சில இடங்களில் முக்கிய சாலைகளில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இங்குள்ள சி.டிஎச் சாலையோரங்களில் இறைச்சி, கோழி கடைகளில் உள்ள கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இதனை அப்பகுதியில் உள்ள பன்றிகள், நாய்கள் மேய்ந்து அவற்றை சாலையில் பரப்பி விடுகின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பையை சில ஊழியர்கள் அள்ளாமல் அங்கேயே தீவைத்து எரிக்கின்றனர். இதனால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும், தொட்டிகளில் அள்ளாமல் கிடக்கும் குப்பை நாளடைவில் மக்கி தூர்நாற்றம் வீசுகிறது. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகள் கவனித்து சாலை ஓரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை தீவைத்து எரிக்காமல் முறையாக அகற்றவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுநலச்சங்கங்கள் பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட நேரிடும்” என்றனர்.

Related Stories:

>