மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திருவள்ளூர் லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்பு கிடங்கில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தோறும் தொகுதி வாரியாக வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 618 வாக்குச்சாவடிகளுக்கு 742 வாக்குப்பதிவு  இயந்திரங்கள், 742 கன்ட்ரோல் இயந்திரங்கள், 792 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை 8 கனரக வாகனங்களில் ஆவடி தொகுதிக்கு அனுப்பப்பட்டன.

இந்த இயந்திரங்களையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாகனங்களில் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரிக்கு கொண்டு வந்தனர். பின்னர், அந்த இயந்திரங்கள் அனைத்தையும் கல்லூரியில் உள்ள பாதுகாப்பான அறைகளில்  வைத்து பூட்டி சீல் வைத்தனர். மேலும், அந்த அறைகளை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இந்த பணிகளில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி, துணை தேர்தல் அதிகாரிகள் நாராயணன், செல்வம், மணிகண்டன், ரேவதி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள், முகவர்களை அழைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 405 வாக்குசாவடிகளில் தேர்தல் அன்று வாக்களிக்க பயன்படுத்த உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 லாரிகளில் வந்தன. தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் அலுவலர் பாலகுரு, அந்த அறைக்கு அதிமுக நகர செயலாளர் சேகர், திமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், பாஜ நகர நிர்வாகி வேந்தன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் 405 வாக்குச்சாவடி மையங்களில் 486 பேலட் யூனிட்டுகள், 486 கன்ட்ரோல் யூனிட்டுகள், 507 விவிபிஏடி இயந்திரம் வந்துள்ளதாக நிகழ்வின்போது தேர்தல் அலுவலர் பாலகுரு தெரிவித்தார்.

Related Stories: