மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தால் குஜராத் பேரவையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல்?: மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி

வல்சாத்: மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தால், குஜராத் பேரவையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக அம்மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி  அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜ 90 சதவீத இடங்களை  கைப்பற்றியது. அதாவது ஆறு  மாநகராட்சி, 81 நகராட்சிகளில் 75, 31 மாவட்ட  பஞ்சாயத்து, 231ல் 196 தாலுகா பஞ்சாயத்துகளை வென்றது.

 அம்மாநிலத்தின் சட்டப் பேரவையின்  காலம் அடுத்தாண்டு (2022) டிசம்பரில் முடிகிறது. ஆனால், அதற்கு முன்னதாக பேரவையை கலைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக மாநில வன மற்றும் பழங்குடியினர் நல  அமைச்சர் ராமன் பட்கர் தெரிவித்துள்ளார்.

‘குஜராத்தில் பேரவை தேர்தல் நடத்துவதற்கான சூழல் உகந்ததாக உள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களிலும் வெற்றிபெற்றதால், ​​இந்த  சூழலில் குஜராத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதை மாநில மற்றும் தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். குறிப்பாக மேற்குவங்கத்தில் பாஜக  வெற்றி பெற்றால், குஜராத் பேரவையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படலாம்’ என்றார். மேற்குவங்கத்தில் மார்ச் 27 தொடங்கி 8 கட்டங்களாக பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: