×

தமிழக சட்டமன்ற தேர்தல்: டிடிவி தலைமையில் 4-வது அணி உருவானது; அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி; 3 தொகுதிகளில் போட்டி.!!!!

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, மநீம-சமுக கூட்டணி என முன்முனை போட்டி நிலவிய நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதன் மூலம் தமிழக சட்டமன்ற தேர்தலில் 4-வது கூட்டணி உருவாகியுள்ளது. அமமுக தலைமையிலான கூட்டணியில் 2021  தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவைசி கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்-ஏ.ஐ.எம்.ஐ.எம். தமிழக பொறுப்பாளர் நாயப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணி:

திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், காங்கிரஸ் 25 சட்டமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி:

அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கீடு செய்தது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி:

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சி இணைந்து ஒரு அணியாக செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Tags : Tamil Nadu Assembly Election ,DTV ,Owaisi ,AIMIM ,Ammu , Tamil Nadu Assembly elections: 4th alliance formed under DTV leadership; Owaithi alliance with Ammuga; Competition in 3 blocks. !!!!
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!