×

இது ஒரு அற்புதமான வாழ்க்கை!

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும் நேசத்தையும் ஆழமாக மனதில் விதைக்கிற ஒரு படம் ‘It's a Wonderful Life’. கிறிஸ்துமஸுக்கு  முந்தைய இரவு. ஜார்ஜ் பெய்லியுடைய மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லோரும் ஜார்ஜுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தப் பிரார்த்தனை  கடவுளின் காதுக்கு எட்டுகிறது. அவர் தன்னுடைய சக்தியால் ஜார்ஜ் பெய்லி தற்கொலை செய்யப்போகும் நிலையில் இருப்பதைப் பார்த்து  அதிர்ச்சியடைகிறார். உடனே தேவதூதர்களை அழைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்.

‘‘பூமியில் ஜார்ஜ் பெய்லி என் பவர் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தற்கொலை செய்யப் போகிறார். அவரின் தற்கொலையைத் தடுத்து  நிறுத்த வேண்டும். இங்கு இரண்டாம் நிலையில் இருக்கிற தேவதூதர் யாராவது ஜார்ஜூடைய தற்கொலையைத் தடுத்து நிறுத்தி அவருக்கு  வாழ்க்கையைப் பற்றி புரியவைத்தால் சிறகுகள் கொடுக்கப்பட்டு முதல்நிலை தேவதூதர் என்ற அந்தஸ்து வழங்கப்படும்...’’ என்கிறார் கடவுள். சிறகுகள்  கிடைக்கும் என்ற ஆசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தேவதூதர் கிளாரன்ஸ், ஜார்ஜ் பெய்லியைக் காப்பாற்ற சம்மதிக்கிறார். அதற்கு முன்  கடவுள், ஜார்ஜ் பெய்லியின் கடந்த கால வாழ்க்கையைக் கிளாரன்சுக்குக் காட்டுகிறார். ஜார்ஜ் நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவர்.

அவரோட அப்பா மக்கள் வீடு கட்ட கடன் கொடுக்கிற ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஜார்ஜூக்கு ஹென்றி என்ற தம்பி் இருக்கிறான்.  ஜார்ஜூம் தம்பி ஹென்றியும் மற்ற நண்பர்களும் பனிச்சறுக்கு விளையாடப் போகிறார்கள். விளையாடிக் கொண்டிருக்கும்போது ஜார்ஜூடைய தம்பி  பனிக்கட்டி உருகி குளம் மாதிரி தேங்கி நிற்கிற ஒரு குழிக்குள் விழுந்துவிடுகிறான். ஜார்ஜ் அந்த குழிக்குள் குதித்துத் தம்பியைக் காப்பாற்றுகிறார்.  அதனால் ஜார்ஜூக்குப் பயங்கரமாக சளிப்பிடித்து ஒரு காது கேட்காமல் போய்விடுகிறது. ஜார்ஜ் பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறை  விட்டால் ஒரு மருந்துக்கடையில் வேலை செய்வது வழக்கம். ஜார்ஜ் வேலை செய்யும் கடையின் உரிமையாளருடைய மகன் இறந்துவிடுகிறான்.

மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் அப்பாவும் தற்கொலை செய்ய முடிவு செய்கிறார். அதற்காக விஷ மாத்திரைகளை வாங்கி கடையில்  வைத்திருக்கிறார். ஆனால், அவரால் தற்கொலை செய்துகொள்ள முடிவதில்லை. அடுத்த கோடை விடுமுறையில் மறுபடியும் ஜார்ஜ் அந்தக் கடைக்கு  வேலை செய்ய வருகிறார். முதலாளி இப்போது இயல்பாக இருக்கிறார். அவர் ஒரு வாடிக்கையாளருக்கு மருந்துக்குப் பதிலாக அந்த விஷத்தை  கொடுக்கும்போது ஜார்ஜ் பெய்லி சரியான நேரத்தில் பார்த்து தடுத்துவிடுகிறார். வாடிக்கையாளருடைய உயிரையும் கடை முதலாளியுடைய  வாழ்க்கையையும் காப்பாற்றி விடுகிறார். அந்த விஷம் கடை முதலாளி தற்கொலை செய்வதற்காக வாங்கி வைத்தது.

அதை அப்படியே மருந்தோடு மருந்தாக அன்றைக்கு இருந்த விரக்தியில் வைத்து விட்டார். காலங்கள் மாறுகிறது... ஜார்ஜ் இப்பொழுது வளர்ந்து  பெரியவனாகி விடுகிறார். தம்பி படிக்க வெளியூருக்கு போய்விடுகிறான். ஜார்ஜூ டைய அப்பா தான் வேலை செய்த நிறுவனத்திற்கே  தலைவராகிவிடுகிறார். ஜார்ஜின் அப்பாவுடைய கம்பெனிக்கு எதிராக பாட்டர்னு ஒருவன் அதே ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறான். பாட்டர்  மக்களை ஏமாற்றுபவன், அயோக்கியன். ஒரு நாள் திடீரென ஜார்ஜூடைய அப்பா மாரடைப்பால் இறந்துவிடுகிறார். அப்பா நிர்வகித்த பொறுப்பை ஜார்ஜ்  ஏற்றுக்கொள்கிறார். திறமையாக நிர்வகிக்கவும் செய்கிறார். இதற்கிடையில் ஜார்ஜ் திருமணம் செய்துகொள்கிறார்.

ஜார்ஜ் தன் மனைவியுடன் தேனிலவுக்குப் போகும்போது பாட்டர், ‘‘ஜார்ஜோட கம்பெனி திவால் ஆகிவிட்டது. ஜார்ஜ் கம்பெனியை மூடிவிட்டு தப்பித்துச்  செல்கிறான்...’’ என்ற புரளியைக் கிளப்பிவிடுகிறான். மக்கள் ஜார்ஜூடைய கம்பெனியில் போட்ட பணத்தை திரும்பப் பெற கம்பெனியை முற்றுகை  இடுகிறார்கள். தேனிலவிற்காக வைத்திருந்த பணத்தை மக்களிடம் கொடுத்து சமாதானம் செய்கிறார் ஜார்ஜ். மக்களுக்கு ஜார்ஜ் மீது நம்பிக்கை  பிறக்கிறது. ஜார்ஜ் பெய்லி என்று ஒரு வீட்டுமனை திட்டத்தை ஆரம்பித்து குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன் கொடுத்து, வீடுகள் கட்டிக்கொடுத்து  மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றுவிடுகிறார். இதையெல்லாம் கவனிக்கும் பாட்டர், ஜார்ஜை தன்வசப்படுத்த நினைக்கிறான்.

ஜார்ஜ், பாட்டரின் வலையில் சிக்க மறுக்கிறார். ஒரு நாள் ஜார்ஜூடைய மாமா கம்பெனி பணம் 8000 டாலரை வங்கியில் போடப்போகும் பொழுது  தவறவிட்டுவிடுகிறார். இதையறிந்த ஜார்ஜ் கோபமடைகிறார். அப்பணம் மக்களுடையது. எரிச்சலோடு வீட்டுக்குப்போய் குந்தைகளிடமும்  மனைவியிடமும் சண்டையிடுகிறார். அன்றைய மதியம் மனைவியிடம் ‘‘இனிமேல் வீட்டுக்கே வரமாட்டேன். என்னைத் தேட வேண்டாம்...’’ என்று  சொல்லிவிட்டு விரக்தியுடன் கிளம்பிவிடுகிறார். இதற்கிடையில் பாட்டர், ‘‘ஜார்ஜ் மக்கள் பணத்தை சூரையாடிவிட்டான்...’’ என்று காவல்துறையிடம்  பொய் வழக்கு ஒன்றைக் கொடுத்துவிடுகிறான். இது தெரியாமல் ஜார்ஜ் உதவி வேண்டி பாட்டரை அணுகுகிறார்.

‘‘தன்னிடம் 20000 டாலருக்கு இன்சூரன்ஸ் பத்திரம் இருக்கிறது, அதைவைத்து 10000 டாலர் கடன் கொடுக்க முடியுமா..?’’ என்று பாட்டரிடம்  கெஞ்சுகிறார். பாட்டர் ஜார்ஜ்ஜை அவமானப்படுத்தி வெளியேற்றி விடுகிறான். இறந்துபோனால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று தற்கொலை  செய்ய நினைக்கிறார் ஜார்ஜ். அடுத்த நொடியே அவசரம் அவசரமாக காரை எடுத்துக்கொண்டு ஆற்றுப்பாலத்தை நோக்கி விரைகிறார். இடையில் கார்  ஒரு மரத்தில் மோதி நின்றுவிடுகிறது. ஜார்ஜ் எதையும் கண்டுகொள்ளாமல் காரை அங்கேயே விட்டுவிட்டு ஆற்றுப் பாலத்தை நோக்கி ஓடுகிறார்.

பாலத்தின் மீது ஏறி நின்றுகொண்டு ஆற்றில் குதித்துவிடலாம் என்று ஜார்ஜ் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்த தருணத்தில் யாரோ  ஒருவர் விண்ணிலிருந்து ஆற்றுக்குள் குதித்துவிடுகிறார். அதைப்பார்த்த ஜார்ஜ் ஆற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார். ஆற்றுக்குள் குதித்தவர்,  ஜார்ஜிடம் ‘‘நான் உன்னைக் காப்பாற்றவே ஆற்றில் குதித்தேன். நீ தற்கொலை செய்யப்போவது எனக்கு முன்கூட்டியே தெரியும். நான் ஒரு தேவதூதன்.  என் பெயர் கிளாரன்ஸ்...’’ என்கிறார். அவர் சொன்னதை நம்பாத ஜார்ஜ், ‘‘நீ ஏன் என்னை காப்பாற்ற வேண்டும், நான் உயிர் வாழ்வதில் எந்த  அர்த்தமுமே இல்லை. என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. நான் எல்லோருக்கும் தேவையற்றவன் ஆகிவிட்டேன்.

நான் பிறந்ததே உபயோகமற்ற ஒன்று. பேசாமல் நான் பிறக்காமலே இருந்திருக்கலாம்...’’ என்று வேதனையுடன் சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட  கிளாரன்சுக்கு ஒரு பொறி கிடைக்குது. ‘‘ஜார்ஜ் கடைசியாக நீ சொன்னதை, மீண்டும் ஒருமுறை திரும்பச்சொல்...’’ என்கிறார். ‘‘நான் பிறக்காமலே  இருந்திருக்கலாம்...’’ என்கிறார் ஜார்ஜ். ‘‘ஜார்ஜ் நீ பிறக்காமல் இருந்திருந்தால் உன் வீடு, உன் மனைவி, நீ வேலை செய்தாயே அந்த கடையின்  முதலாளி, உன்னுடைய ஊர் எல்லாம் என்னவாகியிருக்குமென்று காட்டுகிறேன்...’’ என்று ஜார்ஜை ஊருக்குள் அழைத்துச் செல்கிறார் கிளாரன்ஸ்.

ஊருக்குள் நுழையும் முன் கிளாரன்ஸ் ஜார்ஜிடம் ‘‘நீ பிறக்கவே இல்லை...’’ என்று சொன்னவுடனேயே... சின்ன வயதில் தம்பியைக்  காப்பாற்றபோனபோது சளிப்பிடித்து கேட்காமல்போன காது திரும்பக் கேட்க ஆரம்பிக்கிறது. ஜார்ஜ் ஊருக்குள் செல்கிறார். அவர் பிறக்கவே இல்லை  என்பதால் யாராலும் ஜார்ஜை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால், ஜார்ஜூக்கு எல்லாவற்றையும் அடையாளம் கண்டுகொள்ள  முடிகிறது. தேவதூதர் கிளாரன்ஸ் மீது ஜார்ஜூக்கு நம்பிக்கை பிறக்கிறது. முதலில் மரத்தின்மீது மோதிய தன்னுடைய காரைத் தேடி ஜார்ஜ் போகி  றார். கார் அந்த இடத்தில் இருப்பதில்லை. ஜார்ஜூக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்து ஒரு மதுக் கடைக்குப் போகிறார்.

அங்கே துணி எல்லாம் கிழிந்துபோய் பிச்சைக்காரன் மாதிரி ஒருவன் வருகிறான். அவனை எல்லோரும் கேலி செய்கிறார்கள். அந்த ஆள் யாரென்று  பார்த்தால் ஜார்ஜ் சின்ன வயதில் கோடை விடுமுறையில் வேலை செய்துகொண்டு இருந்த மருந்துக்கடை முதலாளி அவர்.  மருந்துக்குப் பதிலாக  விஷத்தை கொடுத்ததாலே ஜெயிலுக்குப்போய் பைத்திய மாகி பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார். அந்த விஷத்தை வாங்கி சாப்பிட்டவரும்  இறந்து விடுகிறார். அந்தக் கடையை யும் அரசாங்கம் கைப்பற்றி விடுகிறது. சரி, தன்னுடைய வீட்டில் இருப்பவர்களாவது தன்னை அடையாளம்  கண்டுகொள்வார்கள் என்று வீட்டைத் தேடிப்போகிறார்.

வீடு இடிந்து விழுகிற நிலையில் இருக்கிறது. மாமா தொழில் எதுவும் இல்லாமல் மனவேதனையில் இருக்கிறார். மனைவியுடைய வீட்டுக்குப்போனால்  அங்கும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ஜார்ஜின் மனைவி இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அதுவுமின்றி அம்மா இறந்ததாலே  தனியாக வாழ்ந்து வருகிறார். தான் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த இடத்துக்குப் போகிறார். அந்த இடம் சுடுகாடாக மாறியிருக்கிறது. அதில் முதல்  கல்லறையே சின்ன வயதில் குளத்தில் மூழ்கி இறந்துபோன தன் தம்பியுடையதாக இருக்கிறது. ஊருக்குள் போனால் ஊரே ‘பாட்டர் வில்லா'னு  மாறியிருக்கிறது. தெருவெங் கும் சூதாட்டமும் மதுக் கடை களும் கேளிக்கை அரங்கு களுமாக காட்சி தருகிறது.

ஜார்ஜூக்கு தான் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையைப் பற்றி புரிய ஆரம்பிக்கிறது. ‘‘தான் பிறக்கவே இல்லையென்றால் தன்னுடைய தம்பி குளத்தில்  மூழ்கி இறந்திருப்பான். தன்னுடைய முதலாளி, மாமா, பைத்தியமாகியிருப்பார்கள். தவறுதலாக விஷத்தை வாங்கி சாப்பிட்டு யாரோ ஒருவர்  இறந்திருப்பார். மனைவியை யாருமே திருமணம் செய்திருக்க மாட்டார்கள். ஊரே அயோக்கியன் பாட்டரின் கையில் மாட்டியிருக்கும் என்று தான்  வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு பேருக்கு தன்னையறியாமலே பயன்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் தற்கொலை செய்ய நினைத்தேனே.  வெறும் 8000 டாலருக்காக இதைத் தூக்கி எறிய முடிவு எடுத்தேனே. எவ்வளவு பெரிய தவறு இது.

போலீஸ் கைது செய்தால் செய்துவிட்டுப்போகட்டும், இந்த வாழ்க்கையை நான் தூக்கியெறியமாட்டேன்...’’ என்று சபதம் ஏற்ற ஜார்ஜ், தேவதூதர்  கிளாரன்சை தேடி ஆற்றுப் பாலத்துக்குப் போகிறார். அங்கே கிளாரன்ஸ் இருப்பதில்லை. ‘இது ஒரு அற்புதமான வாழ்க்கை' என்று சத்தமாக ஜார்ஜ்  சொல்கிறார். உடனே பழையபடி ஒரு காது கேட்காமல் போகிறது. அந்த வழியாக வந்த ஒருவர் ‘‘ஜார்ஜ் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்துகொண்டு  இருக்கிறாய். ஊரே உனக்காக வீட்டில் காத்திருக்கிறது...’’ என்கிறார் வாழ்க்கையைப் புரிந்து புதிய மனிதனாக மாறிய ஜார்ஜ் வீட்டுக்குச் செல்கிறார்.

அவருக்காக காத்திருந்த குழந்தைகள், மனைவி, நண்பர்களுடன் ஆனந்த கண்ணீருடன் இணைகிறார். அவரின் நண்பர்களும், மற்ற உறவினர்களும் 8000  டாலருக்கு அதிகமான பணத்தை ஜார்ஜின் கடனை அடைக்க அன்பளிப்பாக தருகின்றனர். அங்கே ஒரு துண்டு சீட்டில் கிளாரன்சின் வாழ்த்தும்,  சிறகுகளுக்காக நன்றியும் இருக்கிறது. திரை இருள படம் நிறைவடைகிறது. உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிற இப்படத்தின்  இயக்குனர் ஃப்ராங்க் காப்ரா. தொழில் நுட்பம், கேமரா கோணங்கள், திரைக்கதை, நடிப்பு இவையெல்லாம் முக்கியமானவை என்றாலும் படத்தின்  கதைக்குள் நுழைந்து திரும்பும்போது அது தரும் உணர்வு உண்மையிலுமே அற்புதமானது.

- த.சக்திவேல்

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!